விவசாயத்தை அழித்து விமான நிலையமா…? பதை பதைக்கும் பரந்தூர் மக்கள்… CM ஸ்டாலினின் இலக்கு நிறைவேறுமா..?

Author: Babu Lakshmanan
21 December 2022, 5:01 pm
Quick Share

பரந்தூர் விமான நிலையம்

சென்னை நகரின் 2-வது சர்வதேச விமான நிலையம், பரந்தூரில் அமையுமா? அமையாதா?…என்ற கேள்விக்கு இதுவரை எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை. தவிர அது நாளுக்கு நாள் ஒரு பெரும் விவாதப் பொருளாக மாறியும் வருகிறது.

சென்னை நகருக்கு அருகில் இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில் உள்ள பரந்தூர் கிராமத்தை மையமாக வைத்து 4,791ஏக்கர் நிலப்பரப்பில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைத்துக்கொள்ள 5 மாதங்களுக்கு முன்பு தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்த புதிய விமான நிலையத்திற்கான திட்ட மதிப்பீடு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

இதனால் பரந்தூர், ஏகனாபுரம், அக்கமாபுரம், மேலேரி, வளத்தூர், தண்டலம் , நாகப்பட்டு, நெல்வாய், மகா தேவி மங்கலம், உள்ளிட்ட 13 கிராமங்களில் உள்ள சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம், குடியிருப்பு மற்றும் நீர்நிலை பகுதிகளை கையகப்படுத்த திமுக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஏகனாபுரம் கிராமத்தில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களை தமிழக அரசு கையகப்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

எதிர்ப்பு

ஏனென்றால் இந்த ஒரு கிராமத்தில் மட்டுமே 2500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் விவசாயத்தை சார்ந்தே காலங்காலமாக வாழ்ந்தும் வருகின்றனர்.

இதனால்தான் கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பை விட 3, 4 மடங்கு இழப்பீடு, அரசு வேலை, மாற்று இடம், வீடு உள்ளிட்ட இழப்பீடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தாலும் கூட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்களின் கோரிக்கையான பரந்தூரில் விமான நிலையம் கூடாது என்பதில் மிக உறுதியாக உள்ளனர்.

இதற்கிடையே சில நாட்களுக்கு முன்பு பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக தொழில்நுட்ப அறிக்கையும் தயார் செய்ய தமிழ்நாடு தொழில்வளர்ச்சித் துறை டெண்டர் கோரியிருந்தது. ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணி மற்றும் விமான நிலையம் கட்டுவதற்கு 13 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 145 நாட்களுக்கும் மேலாக இந்த போராட்டம் நீடிக்கிறது. பரந்தூரில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதால் போலீசாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில், இரண்டாம் முறையாக
13 கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் மூவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ஏகனாபுரம் கிராமத்தில் நில எடுப்பு செய்யாமல் தவிர்க்கும்படியும், விவசாய நிலம் பாதிக்காத வகையிலும், நீர்நிலைகள் பாதிக்காத வகையிலும், விமான நிலையம் அமைக்கப்பட வேண்டுமென்றும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்ட விவசாயிகள் கேட்டுக்கொண்டார்கள்.

விமான நிலையம் அமையவுள்ள இடம் மற்றும் அதன் புவியியல் மாற்றம் நீரியல் அமைப்பு குறித்து சம்பந்தப்பட்ட வல்லுநர்குழு ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர்கள் ஏகனாபுரம் விவசாயிகளுக்கு விளக்கினார்கள். அதை அந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏற்றுக் கொண்டு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது.

3 மாதங்களாக காத்திருப்பு

ஆனாலும் இந்த விவகாரம் ஓய்ந்த பாடில்லை. மேலும் அமைச்சர்களிடம் ஏகனாபுரம் விவசாயிகள் எந்த உறுதி மொழியையும் அளிக்கவில்லை என்பதை வெளிப்படையாகவே புரிந்து கொள்ள முடிகிறது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போராட்டக்குழுவினர் செய்தியாளர்களிடம் பேசும்போது “ஏகனாபுரம் கிராமத்தின் பின்பகுதியில், விமான நிலையத்திற்கான வரைபடத்தில் வரையப்பட்டுள்ள இரண்டு ஓடுதளங்களுக்கு நடுவில் ஒரு ஓடை வருகிறது. அந்தப் பகுதியில் உள்ள அத்தனை ஏரிகளிலும் நீர்நிரம்பிய பிறகு, அந்த ஓடை வழியாகத்தான் எந்தவிதமான தடையுமின்றி நீர் ஆற்றை சென்றடைகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஓடையானது, இந்த விமான நிலையத் திட்டத்தால் முற்றிலும் பாதிக்கப்படும்.

Parandur Peoples - Updatenews360

சுற்றுச்சுவர் கட்டியோ, அல்லது அதனை வேறு விதமாக தடுத்தாலோ, அருகில் இருக்கக்கூடிய 30-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாயம் அழிவை நோக்கிச் செல்லும். இதனால் சென்னைக்கும் வெள்ள பாதிப்பு ஏற்படும் என்பது உள்ளிட்ட விவரங்களை ஏற்கனவே நாங்கள் அரசுக்கு எடுத்துக் கூறியிருந்தோம். இதனை அப்போது கேட்டுக்கொண்ட அமைச்சர்கள், இதுகுறித்து தமிழக முதலமைச்சரிடம் எடுத்துக் கூறுவதாகவும், நாங்கள் கோரும் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடும் கோரிக்கைச் சார்ந்த நல்ல ஒரு முடிவை முதலமைச்சர் ஸ்டாலின் எடுப்பார் என்றும் கூறினார்கள். ஆனால், கடந்த 3 மாதங்களாக நாங்கள் காத்திருந்தோம். அரசு எந்தவொரு முடிவையும் அறிவிக்கவில்லை.

விமான நிலையத்திற்காக அறிவிக்கப்பட்ட 4791 ஏக்கர் பரப்பளவில் 3500 ஏக்கர் முற்றிலும் விலை நிலங்கள் ஆகும். மேலும் ஆயிரம் ஏக்கர் நீர்நிலைப் பகுதிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் டிட்கோ மூலம் கள ஆய்வு தொடர்பான டெண்டர் கோரப்பட்டு, வருகிற 6-ம் தேதி அந்த டெண்டர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எங்களது கோரிக்கையை அரசுக்கு அழுத்தமாக தெரிவிக்க முடிவு செய்து நாங்கள் பேரணி மேற்கொண்டோம். அப்போது எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் கேட்டுக் கொண்டதன்படி 3 அமைச்சர்கள் உடனான தற்போதைய இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்றோம்.

இந்தக் கூட்டத்தில் எங்கள் பகுதியில் விமான நிலையம் வந்தால் ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் ஒருமுறை எடுத்துக் கூறினோம். அமைச்சர்கள், நீங்கள் கூறியுள்ள கோரிக்கைகளின்படி ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்வதற்கான டெண்டர்தான் தற்போது கோரப்பட்டுள்ளது. தமிழக அரசு விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், முடிவெடுக்கும் என்று கூறினார்கள்.

ஆனாலும் நாங்கள் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் மாலை நேரங்களில் நடத்தும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருப்போம். விமான நிலையத் திட்டத்தை தமிழக அரசு கைவிடும் வரை, அரசின் அறிவிப்புக்கு ஏற்ப எங்கள் போராட்டங்கள் பல்வேறு வடிவங்கள் எடுக்கும்.

நூறு சதவீதம் விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றுதான் ஆய்வு முடிவுகள் வரும். அதையும் மீறி, சாத்தியம் இருப்பதாக முடிவுகள் வந்தால், நாங்கள் ஏகனாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை விமான நிலையத் திட்டத்திற்காக விடுக்கொடுக்க மாட்டோம். அதற்காக நாங்கள் எந்த நிலையிலும் எங்களை இழக்கத் தயாராக இருக்கிறோம். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைய விடவே மாட்டோம்.

தேர்தலின் போது, உங்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து தருவோம் என்று எங்களுக்கு வாக்குறுதி அளித்தனர். ஆனால் இப்போதோ தமிழக அரசு எங்களின் பூர்வீக வசிப்பிடத்தை விட்டு விரட்டியடிக்க பார்க்கிறது.
இது மிகவும் வேதனை தருவதாக உள்ளது” என்று அந்த விவசாயிகள் மனம் குமுறுகின்றனர்.

இலக்கு நிறைவேறுமா?

அவர்களில் இன்னும் சிலர் கூறும்போது,” இத்திட்டம் வந்தால், ஏகனாபுரத்தின் வரலாறே அழிக்கப்பட்டு விடும். எங்களுக்கென முகவரியே இல்லாமல் போய்விடும். விவசாய நிலங்கள் பறிபோனால் நாங்கள் அனைவரும் விவசாய கூலிகளாக மாறி சொந்த நிலத்திலேயே அகதிகளாகி விடுவோம்.

கோவை அன்னூரில் டிட்கோ தொழிற்பேட்டை அமைக்க விளைநிலங்கள் கையகப்படுத்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அன்னூரில் விளைநிலம் கையகப்படுத்தமாட்டாது என அரசு அறிவித்தது. இதனால் அன்னூருக்கு ஒரு நியாயம்? பரந்தூருக்கு ஒரு நியாயமா?” என கேள்வி எழுப்புகின்றனர்.

Stalin - Updatenews360

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அனுமதி கிடைத்தபோது கடந்த ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “சென்னையின் கோரிக்கைகளை நிறைவேற்ற புதிய விமான நிலையம் வேண்டும். ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற எங்கள் இலக்கை அடையவும், ஆசியாவிலேயே முதலீடுகளுக்கான சிறந்த இடமாக சென்னையை மாற்றவும் இது அவசியம்” என்று குறிப்பிட்டு இருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.

ஆனால் அதற்கு முட்டுக்கட்டை விழுவதுபோல பரந்தூர் பகுதி விவசாயிகளின் போராட்டம் முன்பைவிட வலுத்துள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் இலக்கு நிறைவேறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Views: - 351

0

0