என் மகனை அமைச்சராக விடாமல் தடுத்தார் இபிஎஸ்… நான் தவறு செய்திருந்தால் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் ; ஓபிஎஸ் பேச்சு!!

Author: Babu Lakshmanan
21 December 2022, 6:32 pm
Quick Share

தனது மகன் ரவீந்திரநாத்திற்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்காமல் எடப்பாடி பழனிசாமி தடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், அந்தப் பொதுக் குழு கூட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒபிஎஸ் நியமித்த 88 மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- சோதனை காலகட்டத்தில் எனக்கு துணையாக இருக்கும் தொண்டர்களுக்கு நன்றி. நான் ஒன்றரை கோடி தொண்டர்களால் ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டேன். கடந்த ஜூன் 23 ஆம் தேதி நான் பொதுக் கூட்டத்திற்கு புறப்பட்டேன். அப்போது, போலீசார் ஒருவர் நான் செல்லும் வழியில் என்னை பிளாக் செய்ய ஏற்பாடு நடப்பதாகவும் நீங்கள் வேற வழியில் செல்லுங்கள் என்றார்.

அதன்படி நான் வேறு வழியில் வந்து பொதுக் குழு மேடையை அடைந்தேன். அப்போது என்னை வேறு ஒரு அறையில் உட்கார்ந்திருக்க சொன்னார்கள். எடப்பாடி பழனிசாமி வந்ததும் சேர்ந்து போகலாம் என்றார்கள். அதனால் நானும் உட்கார்ந்தேன். எடப்பாடி பழனிசாமி வந்தார். என்னை பார்த்தார், ஒரு ரெஸ்பான்ஸும் செய்யாமல் போய்விட்டார்.

அது போல் சட்டமேதை சி.வி.சண்முகம் வாயை வைத்தாலே விளங்காது போல! 23 தீர்மானங்களும் செல்லாது செல்லாது என்றார். எடப்பாடி பழனிசாமி தனக்கு ஆதரவு இருப்பதாக கூறுகிறார். ஆனால் அவர் செல்லும் இடங்களில் அவருக்கு மாலை போட்டவர்களே மீண்டும் மீண்டும் போடுகிறார்கள். எம்ஜிஆரை எடப்பாடி பழனிசாமி நேரில் பார்த்ததுண்டா, அதிமுகவை கபளீகரம் செய்ய நினைத்தால் அது நடக்காது. தைரியம் இருந்தால் தனிக்கட்சியை நடத்தி பாருங்கள்.

தர்மயுத்தம் நடத்திய போது சிலர் என்னால் கஷ்டப்பட்டார்கள். என்னுடன் இருந்தவர்களுக்கு நான் எதையும் செய்யவில்லை. அதிமுக ஆட்சி கவிழ இருந்ததை நான்தான் காப்பாற்றினேன். இத்தனை ஆண்டுகளில் ஜெயலலிதா எனது பதவியை கீழே இறக்கியதே இல்லை. அவர் மீது எனக்கு நன்றியுணர்வு இருக்கிறது. அதனால் தினந்தோறும் நான் காலையில் கண் விழிப்பது ஜெயலலிதாவின் புகைப்படத்தில்தான். ஆனால் எடப்பாடி பழனிசாமி கொஞ்சமும் நன்றி இல்லாமல் ஜெயலலிதாவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்ற பதவியை நீக்கினார்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். சசிகலாவிடம் என்னை பற்றி இவர்கள் தப்பு தப்பாக சொல்லியதால் தான் எங்களுக்கு சில பிரச்சினைகள் வந்தன. துணை முதல்வர் பதவி டம்மி பதவி என்பது எனக்கு தெரியும். எனக்கு இருக்கும் கவலைகள் எல்லாம் பதவி மீது அல்ல. கட்சியின் பெயரில் இருக்கும் ரூ. 256 கோடிதான். அது ஒவ்வொரு ரூபாயும் தொண்டர்களின் சந்தா தொகை. அந்த பணத்தை யாராவது கையாடல் செய்திருந்தால் நடவடிக்கை பாயும்.

நான் முதல்வராகவோ, துணை முதல்வராகவோ, இருந்த போது ஏதாவது தவறு செய்திருந்தேன் என கூறினால், அதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது எனது மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதாக இருந்தது. அதை சிலர் தடுத்து நிறுத்தி சதி வேலைகளை செய்தார்கள். இப்படி எத்தனை சதிகளை செய்துள்ளார்கள், என தெரிவித்துள்ளார்.

Views: - 283

0

0