இது என்ன கட்சி விழாவா..? அமைச்சர் உதயநிதி நிகழ்ச்சியில் கடுப்பான இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர்!! (வீடியோ)

Author: Babu Lakshmanan
21 December 2022, 7:10 pm
Quick Share

சென்னை : சென்னையில் ஹாக்கி உலகக்கோப்பையை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சியில் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் பயிற்சியாளர் கடுப்பானதால் நிகழ்ச்சியில் சலசலப்பு ஏற்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் வரும் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஹாக்கி கோப்பை, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தியா முழுவதும் 14 நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட ஹாக்கி கோப்பை இன்று காலை விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ஹாக்கி கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் ஜான் மனோகரன் பெற்றுக்கொண்டார். பின்னர், சென்னை தலைமை செயலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு முதலமைச்சர் ஸ்டாலினிடம் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான கோப்பை காண்பிக்கப்பட்டது.

தொடர்ந்து, இக்கோப்பையானது, தமிழ்நாட்டின் முன்னணி ஹாக்கி வீரர்கள் உள்ளிட்டோரால் அண்ணா பல்கலைக்கழகம், எம்.ஓ.பி. வைஷ்ணவா மகளிர் கல்லூரி ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிதிகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, மேடையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் மற்றும் மேயர் பிரியா உள்ளிட்ட 8 பேருக்கு முதல் வரிசையிலும், ஓய்வுபெற்ற மூத்த ஹாக்கி வீரர்களுக்கும் 2வது வரிசையிலும் இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

இதனால், இந்திய அணியின் முன்னாள் ஹாக்கி பயிற்சியாளரும், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இந்திய ஹாக்கி வீரருமான வாசுதேவன் பாஸ்கரன் கடுப்பாகினார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரிடம், இது என்ன கட்சி நிகழ்ச்சியா..? இல்ல விருது வழங்கும் விழாவா..?, முன்னாள் ஹாக்கி வீரர்களுக்கு பின் வரிசையிலா இருக்கை போடுவீங்க..? என்று கோபமாக லெஃப்ட்& ரைட் வாங்கினார். இதனால், அங்கிருந்தவர்கள் அதிர்ந்து போகினர்.

பின்னர், நீண்ட சலசலப்புக்கு பிறகு, வாசுதேவன் பாஸ்கரன் உள்பட 4 ஹாக்கி வீரர்களுக்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடக்கும் முதல் நிகழ்ச்சியிலேயே, இருக்கையால் இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் விளையாட்டு வீரர்கள் அவமதிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் வாசுதேவன் பாஸ்கரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 459

0

0