காங்., திமுகவுக்கு ஷாக் கொடுத்த PM மோடி : பீதியில் எதிர்க்கட்சிகள்!

Author: Udayachandran RadhaKrishnan
28 June 2023, 9:39 pm
PM - Updatenews360
Quick Share

இந்த ஆண்டின் இறுதியில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தல் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி பாஜக தொண்டர்களை தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தும் விதமாக பூத் கமிட்டி அமைப்பது குறித்து மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நிகழ்த்திய உரை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை அவர் சுறுசுறுப்புடன் தொடங்கி விட்டதையே உணர்த்துகிறது.

பிரதமர் சொன்ன ரெண்டு விஷயம்

அவருடைய அனல் தெறிக்கும் பேச்சு, கடந்த வாரம் பாட்னா நகரில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதாளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்துவது தொடர்பாக நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்கு தக்க பதிலடி கொடுப்பது போலவும் அமைந்து இருந்தது என்றே சொல்லவேண்டும்.

இன்னொரு பக்கம் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தரப்பில் முக்கிய பிரச்சாரமாக இரண்டு விஷயங்கள் வைக்கப்படலாம் என்று பார்க்கப்படுகிறது. அவற்றை முன் நிறுத்திதான் தேர்தல் களத்தையே பாஜக சந்திக்கப் போகிறது என்பதையும் பிரதமர் மோடி மறைமுகமாக கோடிட்டு காட்டி இருக்கிறார்.

பொது சிவில் சட்டம் அவசியம்

அதில் ஒன்றுதான் பொது சிவில் சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியம் என்று அவர் குறிப்பிட்டு இருப்பது. இதுபற்றி மோடி பேசும்போது அதில் உள்ள நியாயங்களையும் எடுத்து வைத்தார்.

“பொது சிவில் சட்ட விவகாரத்தில் சிலர் தவறான கருத்துகளை பரப்பி, குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு குடும்பத்தில் தாத்தா, பாட்டி, கணவன், மனைவி, மகன், மகள் என பல உறுப்பினர்கள் உள்ளனர். அந்த குடும்பத்தை சேர்ந்த ஒரு உறுப்பினருக்கு ஒரு சட்டமும், மற்றொரு உறுப்பினருக்கு வேறொரு சட்டத்தையும் பின்பற்ற முடியுமா? அவ்வாறு இரு சட்டங்களை பின்பற்றினால் அந்த குடும்பத்தை நடத்த முடியுமா? இந்த கருத்தை நமது நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுகிறேன்.

இருவிதமான சட்டங்களால் நாட்டின் நிர்வாகத்தை நடத்த முடியுமா? நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று அரசியலமைப்பு சாசனம் கூறுகிறது. இதற்கேற்றவாறு பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியும் உள்ளது. இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது மிகவும் அவசியம்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

வாரிசு அரசியல் குறித்து விமர்சனம்

அடுத்து அவர் எதிர்க்கட்சிகள் நடத்தும் வாரிசு அரசியலை ஒரு பிடி பிடித்தார். அத்துடன் குறிப்பாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்த போது நடந்த ஊழல்களையும் பட்டியல் போட்டார். திமுக தலைவர்களின் மலைக்க வைக்கும் சொத்துகள் விவரம் குறித்தும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

“கடந்த 2014, 2019 தேர்தல்களை போல வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. இதன்காரணமாக எதிர்க்கட்சிகள் அச்சத்தில் உறைந்துள்ளன.

திமுக, காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சி

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நிலக்கரி ஊழல், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு 2ஜி அலைக்கற்றை ஊழல், 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஊழல்கள் அரங்கேறின. தமிழகத்தில் திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு 1.25 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பல மாநிலங்களிலும் நடந்துள்ள அனைத்து ஊழல்களையும் ஒன்றிணைத்தால் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று உள்ளது.

வாரிசு அரசியலின் தீமைகள் குறித்து நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

சோனியா காந்தியின் குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள். முலாயம் சிங் மகனின் வளர்ச்சியை விரும்பினால் சமாஜ்வாடிக்கு
ஓட்டு போடுங்கள். கருணாநிதி குடும்பத்தினரின் நல்வாழ்வை விரும்பினால் திமுகவுக்கு வாக்களியுங்கள். சந்திரசேகர ராவ் குடும்பம் வளம் பெறவேண்டும் என்றால் பிஆர்எஸ் கட்சிக்கு ஓட்டு போடுங்கள். உங்கள் பிள்ளைகள், பேரக் குழந்தைகள் நலமாக, வளமாக வாழ விரும்பினால் பாஜகவுக்கு வாக்களியுங்கள்” என்று மோடி அதிரடி காட்டினார்.

எதிர்க்கட்சிகளின் திட்டம் தவிடு பொடி

பிரதமர் மோடியின் பேச்சு காங்கிரஸ் தலைமையிலோ அல்லது நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலோ நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க எதிர்க்கட்சிகள் திட்டம் தீட்டுவதை தவிடு பொடி ஆக்குவது போல அமைந்துள்ளது.

இப்படி ஒரே நேரத்தில் 16 எதிர்க்கட்சிகளை மோடி போட்டு தாக்குவார் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக ராகுல், ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், சந்திரசேகர ராவ் ஆகியோரை மறைமுகமாக குறிப்பிட்டு பிரதமர் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

“பொது சிவில் சட்டத்தை இயற்றுவது தொடர்பாக வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரிலேயே மத்திய பாஜக அரசு முடிவு செய்துவிடும்”என்று டெல்லியில் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“பிரதமர் மோடி இது தொடர்பாக பேசி இருப்பதை பார்க்கும்போது அப்படித்தான் கருதத் தோன்றுகிறது. ஏனென்றால் அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் என்கிறபோது அதை அத்தனை எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து எதிர்ப்பதற்கு தயக்கம் காட்டலாம். ஒருவேளை எதிர்ப்பு வலுத்தால் அது தொடர்பாக நாடு முழுவதும் பலத்த விவாதங்களும் எழும். இது பொதுமக்களிடம் பரபரப்பாக பேசப்படும் போது,
2024 தேர்தல் தங்களுக்கு சாதகமாக அமையும் என்று பாஜக கருதுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபை நடக்கும்போது இரு அவைகளிலும் பொது சிவில் சட்டத்தை மத்திய பாஜக அரசு நிச்சயமாக நிறைவேற்றி விடும் வாய்ப்புகளே அதிகம்.

கேள்விக்குறியில் எதிர்க்கட்சிகள்

எனவே பொது சிவில் சட்டம் என்பது எதிர்கட்சிகளுக்கு பீதியை கிளப்பும் ஒன்றாகவே இருக்கும். ஏனென்றால் நாட்டின் குடிமக்கள் அனைவரும் சமம் என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுவதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டுகிறார். சுப்ரீம் கோர்ட்டும் பொது சிவில் சட்டத்தை வரையறுக்குமாறு அறிவுறுத்தி இருக்கிறது. இதனால் சட்டத்தை ஒரு சில கட்சிகள் எதிர்த்தாலும் அவை சுப்ரீம் கோர்ட்டின் அறிவுறுத்தலுக்கு எதிராக செயல்படுகின்றன என்ற பாஜகவால் வலுவான வாதத்தை பிரச்சாரமாக வைக்க முடியும். எனவே மோடி அரசு பொது சிவில் சட்டத்தை இயற்றுவதற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும்.

அதனால் இச்சட்டத்தைப் பொறுத்தவரை எதிர்க்கட்சிகள் எது மாதிரியான நிலைப்பாட்டை எடுக்கப் போகின்றன என்பது கேள்விக்குறியான ஒன்றுதான்.

மோடிக்கு கைக்கொடுத்த அண்ணாமலை

அதேநேரம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது ஊழலுக்கு உத்தரவாதம் என்று பிரதமர் கூறியிருப்பது காங்கிரஸ், திமுக, சமாஜ்வாடி, பாரத ராஷ்டிர சமிதி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்கு நிச்சயம் எரிச்சலை கொடுத்திருக்கும். வழக்கமாக காங்கிரஸ் ஆட்சியில் நடந்த மெகா ஊழல்களை பிரதமர் மோடி பட்டியலிட்டு பேசுவதுதான் வழக்கம்.

ஆனால் இந்த முறை திமுக தலைவர்களின் சொத்து மதிப்பு 1.25 லட்சம் கோடி ரூபாய் என்று கூறி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறார். இப்படி திமுக தலைவர்கள் சேர்த்த சொத்து பட்டியல் பற்றி பிரதமர் பொதுவெளியில் பேசுவது இதுதான் முதல் முறை.

இது கடந்த ஏப்ரல் மாதம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட திமுக தலைவர்களின் சொத்து பட்டியலில் கூறப்பட்டது போலவே இருக்கிறது.
தற்போது பிரதமரே இதைப் பேசி இருக்கிறார். இதையே தமிழகத்திற்கு பிரச்சாரம் மேற்கொள்ள வரும் போது அவர் திமுகவுக்கு எதிரான ஒரு பிரதான அஸ்திரமாகவும் பயன்படுத்தலாம்.

சிக்கலை சமாளிக்குமா திமுக?

கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி என்று திமுகவில் வாரிசு அரசியல் வளர்ந்துவிட்டது. இனி உதயநிதியின் மகன் இன்பநிதி தலைவராக வந்தால் கூட ஏற்றுக்கொள்வோம் என்று சீனியர் அமைச்சர்களே உற்சாகம் பொங்க கூறும் நிலையும் திமுகவில் உருவாகிவிட்டது. இதுபற்றி கூட இனி தமிழக தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரதமர் மோடி பேசினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதுபோன்ற சிக்கல்களை திமுக தலைமை எப்படி கையாளப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

சபாஷ், சரியான போட்டிதான்!

Views: - 329

0

0