‘ஒருபோதும் மறக்க மாட்டோம்.. உங்களின் தியாகம் வலுவான இந்தியாவை உருவாக்க ஊக்குவிக்கிறது’ : பிரதமர் மோடி உருக்கம்!!

Author: Babu Lakshmanan
14 February 2023, 10:35 am
Quick Share

புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது, அந்த வாகனத்தின் மீது வெடிகுண்டு நிரப்பப்பட்ட காரை மோதச் செய்து, தற்கொலைப்படை தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தினர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 40 பேர் வீரமரணமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பிப்ரவரி 26-ம் தேதி பாகிஸ்தானின் பாலக்கோட்டில் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் 4-ம் ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 வீரர்களுக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், இந்த நாளில் புல்வாமாவில் நாம் இழந்த நமது வீரம் மிக்க வீரர்களை நினைவு கூர்வோம். வீரர்களின் உயிர் தியாகத்தை நாம் ஒருபோதும் மறக்கமாட்டோம். வீரர்களின் தைரியம் வலுவான மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்க நம்மை ஊக்குவிக்கிறது, என பதிவிட்டுள்ளார்.

Views: - 328

0

0