தமிழகத்தில் அதிகம் பேசப்படும் கட்சி பாஜக.. ஏழைகளுக்கு உழைப்பதே மோடி உத்தரவாதம் ; பல்லடம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு..!!

Author: Babu Lakshmanan
27 February 2024, 4:46 pm
Quick Share

அண்ணாமலை யாத்திரையை அமித்ஷா தொடங்கி வைத்த நிலையில் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். பல்லடம் பொதுக்கூட்ட மேடையை நோக்கி திறந்தவெளி வாகனத்தில் சென்ற பிரதமர் மோடியை, மலர் தூவி தொண்டர்கள் வரவேற்றனர்.

தொடர்ந்து, மேடையில் பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு காளை நினைவுச் சின்னத்தை பரிசாக அண்ணாமலை அளித்தார். பின்னர், மேடையில் பேசிய பிரதமர் மோடி ; மிகப்பெரிய அளவில் காவிக்கடல் போல் கூடியிருக்கும் மக்களைக் காண்பதில் மகிழ்ச்சி. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்கும் மாநிலம் என்பது இந்தக் கூட்டத்தின் மூலம் நிரூபணம்.

2024ல் ஆண்டில் தமிழகம் புதிய சரித்திரத்தை படைக்கும். தமிழகத்தில் பாஜகவுக்கு தனி இடம் உண்டு ; என் மீது அன்பு கொண்டவர்கள் தமிழக மக்கள். தமிழகத்தில் அரசியல் சரித்திரம் நடக்கிறது ; 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தை அலங்கரிக்கிறது. புனிதமான செங்கோலை தேசியத்தின் மிக உயரிய நாடாளுமன்றத்தில் இடம்பெறச் செய்துள்ளேன்.

என்னைப் பொறுத்தவரை தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காசி தமிழ் சங்கம், செங்கோல் மூலம் தமிழுக்கு மரியாதையை செலுத்தியிருக்கிறேன். காஷ்மீரில் லால் சவுக்கில் தேசியக்கொடி பறப்பதும், 356வது சட்டப்பிரிவை நீக்கியும் வரலாறு படைத்துள்ளோம். காங்கிரஸ், திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போது கொடுத்த வளர்ச்சி நிதியை விட, கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு 3 மடங்கு நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

மத்தியில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இடம்பெற்ற போதிலும், தமிழ்நாட்டுக்கு திமுக எதுவும் செய்யவில்லை. கூட்டணி ஆட்சியில் முக்கியமான துறைகளை முக்கிய தலைவர்கள் வைத்திருந்தும் உபயோகமில்லை. இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்ஜிஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவத்தை வழங்கியதால் இப்போதும் எம்ஜிஆர் நினைத்து பார்க்கப்படுகிறார். வாரிசு அரசியலை எதிர்த்து போராடியவர் எம்ஜிஆர். எம்ஜிஆர் குடும்பத்திற்காக பாடுபட்டவர் அல்ல ; மக்கள் நலனுக்காக பாடுபட்டவர். எம்ஜிஆரைப் போலவே ஜெயலலிதாவும் மக்களின் மனதில் நிலைப்பெற்றிருப்பவர்

தமிழகத்தில் மூன்றரை கோடி மக்களுக்கு இலவச அரிசி வழங்கி இருக்கிறோம். மோடியின் உத்தரவாதம் என்பது பல ஆண்டு காலத்திற்கு தொடரும். மோடி அளித்த உத்தரவாதத்தால் தமிழக மகளிருக்கு இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டது. இண்டியா கூட்டணி தமிழகத்தை கைப்பற்றினால் தமிழகம் வளர அனுமதிக்க மாட்டார்கள், எனக் கூறினார்.

Views: - 115

0

0