பிரதமருக்கு கருப்பு பலூனா…? தமிழகத்தில் நீர்த்துப்போன மோடி எதிர்ப்பு…? ‘U-turn’ அடித்த திமுக கூட்டணி கட்சிகள்!!

Author: Babu Lakshmanan
3 January 2022, 5:38 pm
Quick Share

பிரதமர் மோடி வருகை

தமிழகத்தில் கட்டப்பட்டுள்ள 11 புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி வருகிற 12-ம் தேதி விருதுநகருக்கு வருவது உறுதியாகிவிட்டது. இதைத்தொடர்ந்து அவருடைய வருகைக்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும், திமுக அரசும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

PM Modi Himachal -Updatenews360

இந்த 11 மருத்துவக் கல்லூரிகளும் முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை என்பதால் பிரதமரை வரவேற்பதில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் இருவரும் தமிழக பாஜக தலைவர்களுக்கு இணையாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Go Back Modi

சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக தமிழகம் வருவதால் ஆளும் கட்சிக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சில கேள்விகளும் எழுந்தன.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், முஸ்லிம்லீக், கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்டவை அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்டுவது, கருப்பு பலூன்களை பறக்க விடுவது, Go Back Modi என்று ட்ரென்ட் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தன.

விருந்தாளி மோடி

இப்போது, திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் இவர்கள் எந்த மாதிரியான நிலைப்பாட்டை எடுக்க போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டத்தை கடந்து பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது.

திமுக ஆளும் கட்சியாக இருப்பதால் பிரதமரின் வருகையை எதிர்க்காது என்பது தெரிந்த விஷயம்.
அதை ஊர்ஜிதம் செய்வதுபோல திமுக பொருளாளர் டி ஆர் பாலு எம்பி அண்மையில் கூறும்போது, “தமிழகத்திற்கு புதிய 11 மருத்துவ கல்லூரிகளை திறப்பதற்காக பிரதமர் வருகிறார். அதை எப்படி திமுக அரசு வேண்டாம் என்று சொல்லும்?”எனக் கேள்வி எழுப்பினார்.

அதுமட்டுமன்றி, பிரதமர் மோடி இப்போது எங்களது விருந்தாளியாக வருகிறார் என்று திமுகவின் இன்னொரு எம்பியான ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.

Kanimozhi Minister - Updatenews360

தற்போது, திமுகவின் மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி எம்பியுமான கனிமொழி, “மாநில அரசின் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக வரும் பிரதமரை வரவேற்பது நமது கடமை. கருத்தியல் விஷயங்களில் எதிர்மாறான கருத்துகள் இருந்தாலும், அடிப்படையில் ஒரு அரசாங்கம், ஒரு அரசாங்கத்திடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும், மக்களுக்கு எது நல்லது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்”என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இதன் மூலம் பிரதமருக்கு வரவேற்பு அளிப்பதில் திமுக உறுதியாக இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

சரண்டரான திமுக கூட்டணி கட்சிகள்

அதேநேரம் முன்பு, வீராவேசம் பேசி கொந்தளித்துப் போய் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட்டி, கருப்பு பலூன்களை பறக்கவிட்ட விசிக தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி போன்றோர் வரிந்து கட்டிக்கொண்டு பிரதமரை கடுமையாக எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிச்சம்.

இதுகுறித்து வைகோவிடம் செய்தியாளர்கள், “இம்முறை பிரதமர் தமிழகம் வரும்போதும் கோ பேக் மோடி என்ற முழக்கத்தை எழுப்புவீர்களா?’ என்று கிடுக்குப்பிடி கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “இதுபற்றி கூட்டணியில் ஆலோசித்துதான் முடிவெடுக்க முடியும்” என்று பதிலளித்தார்.

விசிக தலைவர் திருமாவளவன் ஒரு தனியார் டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், “இதுகுறித்து அனைத்து கூட்டணி கட்சியினரும் கலந்து பேசி முடிவு செய்வோம்” என்று
வைகோவின் கருத்தை வழிமொழிந்து இருக்கிறார்.

பதுங்கிய காங்.,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, ஆதரிக்கிறோம், எதிர்க்கிறோம் என்பது பற்றி இதுவரை வெளிப்படையாக எதையும் சொல்லாவிட்டாலும் கூட அவருடைய கட்சியைச் சேர்ந்த விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி எம்பி மாணிக்கம் தாக்கூர் பிரதமர் மோடியின் வருகையை வெண்சாமரம் வீசி வரவேற்றுள்ளார்.

அவர் கூறும்போது “2-வது முறையாக பிரதமராக மோடி விருதுநகர் வருகிறார். அவரை வரவேற்கிறோம். மாவட்டத்தில் பல்வேறு முக்கிய பிரச்சினைகள் உள்ளன. அவைகளுக்கு தீர்வுகாணும் வகையில் மோடியின் வருகை அமையவேண்டும்.மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பிரதமர் அறிவிக்கவேண்டும். சிவகாசி பட்டாசு பிரச்சினை குறித்தும் அவர் பேச நேரம் ஒதுக்கவேண்டும்.

கடந்த முறை பிரதமர் மோடி மதுரை வந்தபோது தி.மு.க, எதிர்க்கட்சியாக இருந்தது. தமிழகத்திற்கு பிரதமர் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. அதனால் ஸ்டாலின் ‘கோ பேக் மோடி’ என்றார். தற்போது பிரதமர் பங்கேற்பது அரசு விழா. முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். அதனால் ‘கோ பேக் மோடி’ என்று சொல்வது சரியானது அல்ல” என்றார்.

திமுக கூட்டணியில் உள்ள இதர சிறு கட்சிகளும் மோடி என்றாலே சீறிப்பாயும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூட்டணி தர்மம் கருதி அமைதி காப்பார்கள் என்று கூறப்படுகிறது.

நல்ல முடிவு

அதனால் ‘கோ பேக் மோடி’ என்ற வார்த்தையே திமுக கூட்டணி கட்சிகளிடமிருந்து இம்முறை எழாது என்று டெல்லியைச் சேர்ந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“திருமாவளவனும், வைகோவும் கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிப்போம் என்று கூறுவது கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் கதைதான். உண்மையைச் சொல்லப்போனால் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டினாலோ, கருப்பு பலூன்களை பறக்க விட்டாலோ அது மாநிலத்தை ஆளும் திமுகவுக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். அதனால் மத்திய- மாநில அரசுகள் இடையேயான உறவு விரிசல் அடையும் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால் இச்செயல்களில் நிச்சயமாக ஈடுபட மாட்டார்கள்.

பொதுவாகவே எந்தவொரு மாநில அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் வந்தாலும் அவருக்கு அரசியல் கட்சியினர் கருப்பு கொடி காட்டுவது அநாகரீகமானது. அது அரசியல் பண்பாடும் அல்ல. அவர் பாஜக பிரதமர் என்றாலும் சரி, காங்கிரஸ் பிரதமராக இருந்தாலும் சரி வேறு யார் பிரதமராக இருந்தாலும் சரி. அது நாட்டின் நலத்தை விரும்பாமல் தனி மனிதன் மீது வன்மத்தை காட்டுவதுபோல ஆகிவிடும்.

Stalin Wish Modi - updatenews360

4 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்தில் ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்தார். அப்போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கருப்பு கொடி காண்பித்து கருப்பு பலூன்களையும் பறக்க விட்டன. இது ஏற்கக்கூடியதல்ல.

ஏனென்றால் அப்போது அவர் வந்தது, நமது ராணுவத்தின் முன்னேற்றத்திற்காக. நாட்டின் ராணுவம் வலிமையாக இருந்தால்தான் மக்கள், பாதுகாப்பாக, நிம்மதியாக இருப்பார்கள் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

இப்போது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பிரதமரின் தமிழக வருகை விஷயத்தில் நல்ல முடிவை எடுத்திருக்கின்றன. இதே அணுகு முறையை எப்போதும் தொடர்ந்தால் அது மிகவும் பாராட்டுக்குரியதாக இருக்கும். இது, குறிப்பிட்ட கட்சிகளுக்கு மட்டுமல்ல. எல்லா மாநிலக் கட்சிகளுக்குமே பொருந்தும்” என்று டெல்லி அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

Views: - 547

0

0