கூட்டணியை உறுதி செய்யாத அதிமுக- பாஜக… திமுகவை நோக்கி பாமக நகர்கிறதா…? ‘அப்செட்’டில் கூட்டணி கட்சிகள்!

Author: Babu Lakshmanan
24 June 2023, 7:58 pm
Quick Share

2024ல் நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக அதிமுக, பாஜக உள்ளிட்ட தமிழகத்தின் அத்தனை பிரதான கட்சிகளும் இப்போதே தீவிரமாக தயாராகி வருகின்றன.

அதுவும் முதலமைச்சர் ஸ்டாலின், பாட்னாவில் 16 எதிர்க்கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சென்னை திரும்பிய பிறகு இந்த விஷயத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டி வருகிறார்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களாக ‘நாற்பதும் நமதே நாடும் நமதே’
என்று அவர் தொடர்ந்து முழங்கி வருவதையும் காண முடிகிறது.

ஆனாலும் விஸ்வரூபம் எடுத்துள்ள கள்ளச்சாராய விவகாரம், டாஸ்மாக் மதுபான விற்பனையில் கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள், சட்டம்- ஒழுங்கு சீர் குலைவு, கடுமையான விலைவாசி உயர்வு, 505 தேர்தல் வாக்குறுதிகளில் ஒரு சிலவற்றை மட்டுமே நிறைவேற்றிவிட்டு மற்ற முக்கிய வாக்குறுதிகளை கண்டு கொள்ளாமல் இருப்பது போன்ற பல பிரச்சினைகள் திமுக தலைமை நினைக்கும் அளவிற்கு வெற்றியை தேடித் தருமா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

அதுவும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர்
கைது செய்த பின்பு தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் பொதுமக்களால் விவாதிக்கப்படும் நிலையை ஏற்படுத்திவிட்டது. போதாக்குறைக்கு செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் மீதும் அமலாக்கத் துறையின் பிடி இறுகி வருவது திமுகவுக்கு மட்டுமல்ல அதன் கூட்டணி கட்சிகளுக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இதனால் தற்போதுள்ள கூட்டணியை மட்டுமே வைத்து தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கைப்பற்றுவது அவ்வளவு சுலபம் அல்ல என்பதை அறிவாலயம் நன்றாகவே உணர்ந்துள்ளது.

இந்த நிலையில்தான் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இணைந்து தர்மபுரி,விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 7 தொகுதிகளில் போட்டியிட்ட
டாக்டர் ராமதாஸின் பாமக தனது பார்வையை திமுகவை நோக்கி திருப்பி இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அதிமுகவும், பாஜகவும் தங்களது கூட்டணியை இன்னும் உறுதி செய்யாமல் இருப்பதுதான் என்று கூறப்பட்டாலும் கூட அண்மையில் அமைச்சர் துரைமுருகன் பாமகவை தங்கள் பக்கம் இழுக்கும் விதமாக பேசியதுதான்.

கடந்த 11-ம் தேதி சேலத்தில் நடந்த கூட்டத்தில் அமைச்சர் துரை முருகன், முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பேசும்போது ‘தப்பி தவறிக்கூட எதிர்க்கட்சி பக்கம் போய் விடாதீங்க’ என்று இந்த கூட்டத்தில் பங்கேற்ற, பாமக எம்எல்ஏக்களை கேட்டுக்கொண்டார்.

இது பாமக எம்எல்ஏக்களிடம் வைக்கப்பட்ட வேண்டுகோள் என்றாலும் கூட டாக்டர் ராமதாசுக்கு துரைமுருகன் விடுத்த மறைமுக அழைப்பாகவே பார்க்கப்படுகிறது.

இதனால் திமுக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, காந்தி மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயலாளர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளில் பாமக உடனடியாக இறங்கியும் விட்டது.

பாமகவை தங்களது கூட்டணியில் சேர்க்க வேண்டியதன் அவசியம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்துமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணியில் குறைந்தபட்சம் 5 தொகுதிகளை எதிர்பார்க்கும் பாமக, திமுக கூட்டணியில் நான்கு எம்பி சீட்டுகளை கொடுத்தால் கூட போதும் என்ற வேண்டுகோளை வைத்திருக்கிறது, என்கிறார்கள்.

ஆனால் திமுக கூட்டணியில் பாமக இணைவதற்கு திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சி முட்டுக்கட்டையாக உள்ளது.

ஏனென்றால் “பாஜக-பாமக இருக்கும் கூட்டணியில் ஒருபோதும் விசிக இருக்காது. பதவிக்காக எங்கள் கொள்கையில் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்” என கடந்த மார்ச் மாதம் திருமாவளவன் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால் பாமகவை கூட்டணிக்குள் சேர்த்தால் விசிகவின் எதிர்ப்பை சமாளிக்க வேண்டிய நெருக்கடியும் திமுகவுக்கு உள்ளது.

அதேநேரம் விசிகவை வெளியேறவிடாமல் பார்த்துக் கொண்டு பாமகவை கூட்டணிக்குள் வரவழைத்துவிட்டால் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளையும் எளிதில் கைப்பற்றி விடலாம் திமுக தலைமை கணக்கு போடுகிறது.

குறிப்பாக துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்தையும், பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியையும் மீண்டும் எம்பி ஆக்கிட விரும்புகிறார்கள். ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு எதிரான மனநிலை தமிழக மக்களிடம் உருவாகி இருப்பதால் 2019 தேர்தல் போல 2024-ல் வெற்றி பெற முடியாது என்பதே எதார்த்தமான உண்மை. அதனால்தான் வட மாவட்டங்களில் 15 நாடாளுமன்ற தொகுதிகளில் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ள பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு அமைச்சர்கள் துரைமுருகனும், பொன்முடியும் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேநேரம் திமுக கூட்டணிக்கு பாமக வருவதை விசிக மட்டுமல்ல காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவையும் விரும்பாத நிலைதான் காணப்படுகிறது. குறிப்பாக தமிழக காங்கிரஸ், பாமக வேண்டவே வேண்டாம் என்கிற மனநிலையில் இருக்கிறது. ஏனென்றால் இந்த முறை எப்படியாவது திமுகவிடம் 15 தொகுதிகளை பெற்றுவிடவேண்டும் என்று அக் கட்சி துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறது.

அதுபோன்ற சூழலில் பாமக தங்கள் கூட்டணிக்கு வந்தால் 2019-ல் திமுக ஒதுக்கியது போல ஒன்பது தொகுதிகள் கிடைத்தாலே பெரிய விஷயமாக இருக்கும் என்று கேஎஸ் அழகிரி, தங்கபாலு, திருநாவுக்கரசர் போன்ற மூத்த தலைவர்கள் கருதுவதற்கு வாய்ப்பும் உண்டு.

மார்க்சிஸ்ட்டும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தங்களுக்கு திமுக ஒரு சீட் மட்டுமே வழங்கும் நிலை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகின்றன. தமிழக வாழ்வுரிமைக் கட்சி சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடவில்லை என்றாலும் கூட கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ டாக்டர் ராமதாசுடன் ஏற்பட்ட மோதலால் தனிக் கட்சி தொடங்கி திமுக கூட்டணிக்கு வந்தவர். அவர் பாமகவை வரவேற்பார் என்று எதிர்பார்க்க முடியாது.

இப்படி பல்வேறு கோணங்களில் திமுக கூட்டணியில் பாமகவுக்கு எதிர்ப்பு எழலாம்.

“உண்மையிலேயே அதிமுக-பாஜக கூட்டணியில் ஐந்து தொகுதிகள் கிடைத்தால் கூட அதில் நான்கில் வெற்றி பெற்று விட முடியும் என்ற நம்பிக்கை பாமகவிடம் உள்ளது. அதுவும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளவே அக்கட்சி விரும்பவும் செய்கிறது. ஏனென்றால் வட மாவட்டங்களில் ஓபிஎஸ் அணிக்கு ஒரு சதவீத ஆதரவு கூட இல்லை என்பது டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணி ராமதாசுக்கும் நன்றாகவே தெரியும்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகதான் ஆர்வத்துடன் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

அதனால்தான் அதிமுக-பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்சும் இடம் பெறவேண்டும் என்ற பாஜகவின் நிபந்தனை குறித்து பாமக கண்டு கொள்ளவே இல்லை. தவிர தென் மாவட்டங்களில் பாமக போட்டியிட வேண்டிய கட்டாயமும் கிடையாது.

எனவே அதிமுகவும், பாஜகவும் விரைவில் தேர்தல் கூட்டணியை அமைத்து தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டால் இதற்கு முடிவு கட்டிவிட முடியும். திமுக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்துவதில் கடுகளவு கூட ஆர்வம் காட்டாத ஓபிஎஸ்சையும், டிடிவி தினகரனையும் அவர்களுக்கு இருப்பதாக கூறப்படும் ஓரிரு சதவீத ஓட்டுகளுக்காக அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வரவேண்டும் என்ற எண்ணத்தை பாஜக கைவிட்டால் அதிமுக- பாஜக தலைமையில் அமையும் கூட்டணி குறைந்தபட்சம் 30 தொகுதிகளை கைப்பற்றும் வாய்ப்பு உள்ளது.

தேர்தல் கூட்டணி கணக்கின்போது சில புள்ளி விவரங்கள் தவிர்க்க முடியாதவை.

தமிழக பாஜக 2014ல் பாமக, தேமுதிக, மதிமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டபோது 18 சதவீத வாக்குகளை பெற்றது உண்மைதான். அதனால் இந்த முறை பாமக, தேமுதிக மற்றும் ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனின் அமமுக, இன்னும் சில சிறு சிறு கட்சிகளை சேர்த்துக்கொண்டு மூன்றாவது அணி அமைத்து போட்டியிடலாமா? என்ற சிந்தனையில் தமிழக பாஜக இருப்பதுபோல் தெரிகிறது.

2009ல் தேமுதிக வாங்கிய 10 சதவீத ஓட்டு 2014ல் 5 சதவீதமாக குறைந்து போனது. 2021தேர்தலில் தேமுதிகவுக்கு கிடைத்த ஓட்டு ஒரு சதவீதத்துக்கும் கீழே போய்விட்டது. அதனால் தேமுதிகவை மட்டுமே தங்கள் கூட்டணியில் இணைத்துக் கொண்டு தனித்து போட்டியிடுவது பாஜகவுக்கு எந்த வகையிலும் பயன் தராது. அதேபோல 2014 தேர்தலில் பாஜக கூட்டணியில் 4.4 சதவீத ஓட்டு வாங்கிய மதிமுகவின் இன்றைய நிலை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை. தவிர அக்கட்சி தற்போது எந்த கூட்டணியில் இருக்கிறது என்பதையும் கவனிக்கவேண்டும். பாமக மட்டுமே, 2014ல் தான் வாங்கிய ஐந்து சதவீத ஓட்டுகளை இன்று வரை அப்படியே தக்க வைத்து இருக்கிறது.

மேலும் 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

அண்ணாமலையின் அதிரடி அரசியலால் தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இருந்தபோதிலும் அதை மட்டுமே மனதில் வைத்து முந்தைய தேர்தல் கணக்குகளை தமிழக பாஜக இப்போது போடுவது சரியாக இருக்குமா? என்பது தெரியவில்லை.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு யாருடன் கூட்டணி என்பதை பாஜக விரைவில் முடிவு செய்யவேண்டும். இல்லையென்றால் வட மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் பாமகவை திமுக தங்கள் பக்கம் இழுத்து விடக்கூடும்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 213

1

0