அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரம் அறநிலையத்துறை.. உண்டியலில் காசு போட வேண்டாம் : ஆளுங்கட்சியை விமர்சித்து மதுரை ஆதீனம் பரபரப்பு பேச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
6 June 2022, 9:47 am

அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக, திருக்கோவில்கள் உள்ளது என மதுரை ஆதீனம் பேசியுள்ளார். இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும் எனவும் ஆன்மீகத்தை திருடிக் கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள் எனவும் பேசியது சர்ச்சையாகியுள்ளது.

மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய மதுரை ஆதீனம், பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால்
செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப டாஸ்மாக் வந்து பாயுது காதினிலே என்று பாடியிருப்பார்.

அதீனங்கள் அரசியல் பேச கூடாது என்கிறார்கள், அரசியலை நாங்கள் பேசாமல் யார் பேசுவது? அரசியல்வாதிகளுக்கு கோவிலில் என்ன வேலை. அரசியல்வாதிகள் கோவிலில் தர்க்காராக வந்து இருந்து கொள்கிறார்கள்.

கோவிலுக்குள் அரசியல் புகுந்துவிட்டது. ஆன்மீகவாதிகள் ஏன் அரசியல் பேச கூடாது, திருக்கோவில் சொத்துக்கள் தொலைந்து போகிறது. தமிழகத்தின் பண்பாடு கலாச்சாரம் திருக்கோவிலுக்குள் உள்ளது.

நகையை உறுக்குவதாக கூறுகிறார்கள் எங்கு உருக்குகிறார்கள் என தெரியவில்லை. திராவிட பாரம்பரிய என்று சொல்லும் அரசியல்வாதிகள் விபூதி பூச மறுக்கிறார்கள். ஆனால் ரம்ஜான் என்றால் குல்லா போட்டுக்கொள்கிறார்கள்.

இந்துக்களை அவமதிக்கும் வகையில் திரைப்படத்தில் பேசிய நடிகர் விஜய் திரைப்படத்தை பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கி என சொல்கிறார்கள்.

சாலமன் பாப்பையாவை பல்லக்கில் தூக்கும் போது தருமபுரம் ஆதீனத்திற்கு ஏன் பல்லக்கு தூக்க கூடாது. தற்பொழுது சாமி வருவது போல் உண்டியல் வருகிறது.

இந்து அறநிலையத்துறை கோவில் உண்டியலில் காசு போடாதீர்கள், அந்தந்த கோவிலுக்கு செல்வதில்லை, உண்டியல் பணம் வேறு எங்கோ செல்கிறது.

திருவாசகத்தை அரசியல்வாதிகள் திருடிவிட்டார்கள், என்னுயிர் தலைவா என்பதை தல என மாற்றி விட்டார்கள். திராவிட பூமி என்று சொல்லிக்கொண்டு இறந்தவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுகிறார்கள்.

கோவில் நம்மைவிட்டு போனால் நமது சமயமும் நம்மை விட்டு போய்விடும். கோவில் இடங்களை ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் எடுத்து கொண்டு குத்தகை கேட்டால் குத்துவதற்கு கை வருகிறது.

ஆன்மீகத்தை திருடி கொண்டு திராவிடம் என சொல்கிறார்கள். திராவிடர் என்பதற்கு அர்த்தம் என்ன என சீமான் கேட்ட கேள்விக்கு தற்பொழுது வரை யாரும் பதில் சொல்லவில்லை

கோவில்களில் குத்தகை மற்றும் வாடகை பாக்கி கொடுக்க மறுப்பவர்கள் அடுத்த பிறவியில் வவ்வாலாக பிறப்பார்கள் என சாபம் விட்ட அவர், அறநிலைய துறை பொல்லாத துறையாக உள்ளது. அறநிலையதுறை அதிகாரிகள் விபூதி பூசுவதில்லை, கோவிலில் என்ன நடக்கிறது என்பதே அவர்களுக்கு தெரிவதில்லை.

அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோவில்கள் உள்ளது. அறநிலையத்துறை கலைத்துவிட வேண்டும், கோவில்கள் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஊர் பெரியவர்கள் முன்னிலையில் இயங்க வேண்டும்.

சாமியார்கள் யாசகம் பெற்று சாப்பிட வேண்டும் என கூறிய சு.வெங்கடேசன் என்னுடன் ஒரு வாரம் தங்கி இருந்தால் சுருண்டு போய் விடுவார். விபூதி பூசுபவர்களாக பிறந்தால் புண்ணியம் கிடைக்கும்.

இலவசமாக கோவணமும் திருவோடும் கொடுக்கும் திட்டத்தை மட்டும் பாக்கி வைத்துள்ளது திராவிட கட்சிகள் என பேசினார்.

பாரத பிரதமர் நோய் நொடி இன்றி வாழ வேண்டும். தமிழகத்திற்கும் அவர் வரவேண்டும் என மதுரை ஆதினம் பேசியது தமிழக அரசியல் கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!