நீதிபதிகள் நியமனத்தில் அரசியலா?திமுக, CPMக்கு பாஜக பதிலடி!

Author: Udayachandran RadhaKrishnan
7 February 2023, 9:32 pm
voctoria - Updatenews360
Quick Share

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் விதமாக வழக்கறிஞர்களான விக்டோரியா கெளரி, பாலாஜி, ராமகிருஷ்ணன் மற்றும் மாவட்ட நீதிபதிகளான கலைமதி, திலகவதி ஆகிய ஐந்து புதிய நீதிபதிகளை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மிக அண்மையில் உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அவர்களும் பிப்ரவரி 7ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.

பெண் நீதிபதிக்கு எதிர்ப்பு

இதில் பெண் நீதிபதி விக்டோரியா கௌரியை நியமித்தது முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்டது, அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திமுகவின் கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் போன்றவை உடனடியாக போர்க்கொடியும் உயர்த்தின.

இப்படி அவர்கள் திடீரென கொந்தளித்ததற்கு காரணம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கௌரி, பாஜகவின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுவதுதான்.

அதனால்தான் அவருக்கு நீதிபதி பதவியை கொடுத்து விட்டனர் என்றும் திமுக கூட்டணி கட்சியினர் புலம்புகின்றனர். திமுக தலைமையும் இந்த விஷயத்தில் கடும் அதிருப்தி கொண்டிருந்தாலும், அதை வெளிப்படையாக காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

கொந்தளித்த மார்க்சிஸ்ட்

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,
“இந்திய மக்களிடையே மத அடிப்படையில் வெறுப்பை மூட்டும் விதத்தில் கிருத்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக மோசமான பேச்சுக்களை பேசி வந்த பாஜக நிர்வாகி, விக்டோரியா கெளரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு இருப்பது நீதித்துறையின் மீதான நம்பிக்கையை பாதித்துள்ளது.

நீதிபதியாக செயல்படுவோர் தனிப்பட்ட அரசியல் கருத்துக்களை கொண்டிருக்கலாம். ஆனால் அரசமைப்புச் சட்டத்திற்கே விரோதமாக வெறுப்பு பேச்சுக்களை பேசியவர், அரசமைப்பு சட்டத்தின் விழுமியங்களை காக்க  செயல்படுவாரா? உச்ச நீதிமன்றம் இந்த நியமனத்தை‌ ரத்துச் செய்து நீதித்துறையின் மாண்பினை பாதுகாக்கவேண்டும்” என ஆவேசப்பட்டு உள்ளார்.

ஜனாதிபதியிடம் முறையிட்ட விசிக

விசிக தலைவர் திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், “கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்ட விக்டோரியா கௌரி அவர்களை மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்னும் கோரிக்கையை குடியரசுத்தலைவர் மாண்புமிகு திரௌபதி முர்மு அவர்களிடம் முன்வைத்துள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

மதிமுகபொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கெளரி நியமிக்கப்படுவதால் சட்டம் அனைவருக்கும் சமமானது என்ற கோட்பாடு கேள்விக்குறியாகி விட்டது” என கண்டனம் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் விக்டோரியா கெளரியை நீதிபதியாக பதிவியேற்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் 21 பேர் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர். இது அவரச வழக்காக விசாரணைக்கு எடுத்தும் கொள்ளப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

எதிர்க்கட்சிகிள் கோரிக்கை தள்ளுபடி

அப்போது இரு நீதிபதிகளும், “நீதிபதியை நியமிக்கும்போது அந்த நீதிமன்றத்தின் நீதிபதிகளிடம் கொலிஜியம் கருத்து கேட்கும். பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து தான் கொலிஜியம் தங்களுக்கு பரிந்துரை அளித்துள்ளது. மனுதாரர் வைக்கும் குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும்?” என்று கேள்வி எழுப்பினர்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில்,”அரசியல் பின்புலம் கொண்டவர்கள் ஏற்கனவே நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள வரலாறு உள்ளது. நான் மாணவனாக இருந்த பொழுது அரசியல் கட்சியுடன் தொடர்பில் இருந்தவனாக இருந்திருக்கிறேன். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக நீதிபதியாக இருக்கிறேன். நீதிபதியாக எனது அரசியல் பார்வையை நான் இதுவரை வர விட்டதில்லை. அதை விக்டோரியா கௌரி அவர்களுக்கும் பொருத்தலாம்தானே?” என்று கிடுக்குபிடி போட்டார். பின்னர் வழக்கை இரு நீதிபதிகளும் தள்ளுபடி செய்தனர். இதைத் தொடர்ந்தே சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி பதவி ஏற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விக்டோரியா கௌரி பற்றி இனிமேலும் திமுக கூட்டணி கட்சிகள் கொந்தளிப்புடன் பேசுவதற்கு எதுவும் இல்லை என்று ஆகிவிட்டது.

எச் ராஜா கிடுக்குப்பிடி

அதேநேரம் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச். ராஜா இந்த விவகாரத்தில் திமுகவையும், அதன் கூட்டணி கட்சிகளையும் ஒரு பிடி பிடித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “சத்யமேவ ஜெயதே. வாய்மையே வெல்லும். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக திருமதி.விக்டோரியா கௌரி அவர்களின் நியமனத்திற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

திமுகவின் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட செயலாளர் திரு. ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் நியமிக்கப்பட்டது தவறில்லை என்றால் இதில் என்ன தவறு உள்ளது?

கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக இருந்த திரு.சந்துரு நீதிபதி ஆனதை ஆட்சேபிக்காத கும்பல் இன்று கதறுவது ஏனோ. திரு சந்துரு அவர்கள் இந்த நாட்டின் நிதி அமைச்சர் அவர்களை ஊறுகா அம்மையார் என்று கூறி ஜாதிய வன்மத்தை கட்டியது உலகறியும்”என்று ஏற்கனவே அரசியல் பின்னணி கொண்டவர்கள் நீதிபதிகளாக பணியாற்றியுள்ளனர் என்பதை இந்தக் கட்சிகளுக்கு சுட்டி காண்பித்து குட்டும் வைத்து இருக்கிறார். இவர்களில் ரத்தினவேல் பாண்டியன் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது இங்கே நினைவு கூரத்தக்கது.

அச்சத்தில் திமுக அரசு?

அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறும் போது,”நீதிபதிகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல்படும்போது அதை யாரும் கேள்வி கேட்கவே முடியாது. அதே நேரம் ஒரு குறிப்பிட்ட வழக்குகளில் சில கருத்துகளை தெரிவிக்கும் போது அது அந்த நீதிபதிகளின் தனிப்பட்ட பார்வையாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். சமுதாயத்துக்கு பயன்படும் கருத்தாக இருந்தால் அது நீதிபதியின் தனிப்பட்ட பார்வையாக இருந்தாலும் கூட அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாக அமைந்து விடும்.

எனவே தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அச்சப்படுவது போல நடப்பதற்கு வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் இவர்களுக்கு இப்படி பயம் வர காரணம், பிரதான கட்சிகளின் ஒரு சில தலைவர்கள் தங்களுக்கு உள்ள ஆட்சி, அதிகார பலத்தின் மூலம் பலருக்கு உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதி பதவிகளை பெற்றுக் கொடுத்ததுதான் என்பதுநீதித்துறையில் உள்ளோர் அனைவரும் அறிந்த விஷயம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பிரபல கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது போட்ட பிச்சையால்தான் உங்களுக்கு நீதிபதி பதவியே கிடைத்தது என்று நீதித்துறையை அவமதிக்கும் விதத்தில் பேசி அதற்காக அவர் மன்னிப்பு கேட்க நேர்ந்ததையும் பார்க்க முடிந்தது” என்று அந்த அரசியல் சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Views: - 104

0

0