தாயகம் திரும்பிய பிரக்ஞானந்தா… மேளம், தாளத்துடன் உற்சாக வரவேற்பு : காத்திருக்கும் ரூ.30 லட்சம் பரிசுத்தொகை!!!

Author: Udayachandran RadhaKrishnan
30 August 2023, 11:51 am
Pragnanandha - Updatenews360
Quick Share

உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்றது. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி, 21 ஆண்டுகளுக்கு பிறகு உலக செஸ் தொடரின் இறுதிப்போட்டிக்குச் சென்ற வீரர் என்ற சாதனை படைத்தார்.

உலகின் இரண்டாம் நிலை வீரரை வென்று இறுதிப்போட்டிக்குச் சென்ற பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார்.

இந்த போட்டியானது டை பிரேக்கர் சுற்றுவரை சென்றது. இறுதியில் மேக்னஸ் கார்ல்சன் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இதனையடுத்து, உலகக்கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவை மட்டுமல்லாமல் தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்த பிரக்ஞானந்தாவுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உலக கோப்பை முடிந்து அஜர்பைஜானில் இருந்து சென்னை விமான நிலையம் வந்தடைந்த பிரக்ஞானந்தாவுக்கு, மலர்கள் தூவியும், மலர் கிரீடம் அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரக்ஞானந்தாவை விளையாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் பூங்கொத்துக்கொடுத்து வரவேற்றனர்.

இதன்பின் திறந்த வெளி வாகனம் மூலம் மேள தாளம் முழங்க, பிரக்ஞானந்தாவை ஊர்வலமாக கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து, நேரு விளையாட்டு அரங்கில் பிரக்ஞானந்தாவுக்கு தேநீர் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின் 12 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை, அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டுக்களை பெற உள்ளார்.

மேலும், உலக கோப்பை செஸ் இறுதி போட்டியில் இரண்டாவது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு தமிழக அரசு சார்பில் 30 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 399

0

0