‘எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதி போல’… கேப்டனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பிறகு பிரேமலதா போட்ட சபதம்..!!

Author: Babu Lakshmanan
30 December 2023, 8:57 am
Quick Share

தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் கேப்டனுக்கு கிடைத்துள்ளதாக மறைந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

உடல்நலக்குறைவால் காலமான தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல் தீவுத்திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடலுக்கு 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு, விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதன்பிறகு, தமிழக அரசு, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- கேப்டனின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு தேமுதிக சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கேப்டனின் இறுதி ஊர்வலம் நடக்க உறுதுணையாக இருந்த போலீசாருக்கு ராயல் சல்யூட். அதேபோல, வழிநெடுகிலும் திரண்டு அஞ்சலி செலுத்திய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் யாருக்கும் கிடைக்காத ஒரு மிகப்பெரிய பெயர் கேப்டனுக்கு கிடைத்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 15 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தியுள்ளதாக நமக்கு கிடைத்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்க காரணம், கேப்டன் செய்த தர்மமும், அவரது எண்ணமும், மக்களுக்கு உதவும் குணமும் தான்.

ராகுல் காந்தி தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார். கேப்டன் கையில் அணிந்திருந்த மோதிரத்தை அவருடனே வைத்து நல்லடக்கம் செய்து விட்டோம். மெரினாவில் எப்படி அரசியல் தலைவர்களுக்கு சமாதி இருக்கிறதோ, அதைப்போல, கேப்டனுக்கு சமாதி அமைக்கப்படும். 24 மணிநேரம் விளக்கு எரியும். தினமும் பூஜை செய்து கோவில் போல பராமரிப்போம். அவர் சொர்க்கத்தில் இருந்து நம்மை வாழ்த்தி கொண்டுதான் இருப்பார், எனக் கூறினார்.

Views: - 347

0

0