இன்று சென்னை வருகிறார் திரவுபதி முர்மு… ஓபிஎஸ் – இபிஎஸ்-ஐ தனித்தனியே சந்திக்க வாய்ப்பு என தகவல்

Author: Babu Lakshmanan
2 July 2022, 10:20 am

குடியரசு தலைவர் பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு, அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக இன்று சென்னை வருகிறார்.

குடியரசு தலைவர் பதவிக்கான இந்த மாதம் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் திரெவுபதி முர்முவும், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இருவரும் தங்களின் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில், நேற்றுமுன்தினம் சென்னை வந்த எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

இந்த நிலையில், பாஜக வேட்பாளர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார். இன்று பகல் 1:30 மணிக்கு புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில் மதியம் 2 மணிக்கு சென்னை வருகிறார். அவருக்கு பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டலில் மாலை 4 மணிக்கு பா.ஜ.க, அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு கோர உள்ளார். மாலை 5 மணிக்கு தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார்.

தற்போது, அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ளதால், ஓ. பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமியை தனித்தனியே திரவுபதி முர்மு சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!