ஆளுநரா…? நியமன எம்பியா…? ஆளுநருடன் அரசியல் பேசிய ரஜினி… !கொந்தளிக்கும் திமுக கூட்டணி..!

Author: Babu Lakshmanan
9 August 2022, 7:47 pm
Quick Share

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை, நடிகர் ரஜினி கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் சந்தித்து அரசியல் பேசியிருப்பது தேசிய அளவில் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

நடிகர் ரஜினி டெல்லி சென்று விட்டு இரு தினங்களுக்கு முன்புதான் சென்னை திரும்பி இருந்தார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமிர்த சுதந்திர பெருவிழா ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்றதாக ஒரு தகவல் உண்டு. இந்நிலையில் ஆளுநருடன் சந்திப்பு, நிகழ்ந்திருப்பதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இது கருதப்படுகிறது.

அதுவும் ஆளுநர் ரவியை சந்தித்த பின்னர் ரஜினி போயஸ் கார்டன் இல்லத்தில் 
செய்தியாளர்களிடம் பேசியபோது தெரிவித்த தகவல்கள், அனைவருடைய புருவங்களையும் உயர்த்திப் பார்க்க வைத்துவிட்டது.

இதற்கு பல பின்னணிக் காரணங்களும் உண்டு.

ஏனென்றால் 1995-ல் வெளியான முத்து படத்தில் “எப்போ வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்” என ரஜினி பஞ்ச் டயலாக் பேசி இருப்பார். இந்த வசனம் அரசியலுக்காகத்தான் அவர் பேசியதாக கூறப்பட்டது. இதனால் அவருடைய ரசிகர்கள் எப்போது ரஜினி அரசியலுக்கு வருவார் என ஆவலோடு எதிர்பார்க்கத் தொடங்கினர்.

இந்த நிலையில்தான் 1996 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கும், ஜி.கே மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரசுக்கும் ஆதரவாக ரஜினி வெளிப்படையாக ‘வாய்ஸ்’ கொடுத்தார். அந்தத் தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

இதைத்தொடர்ந்து ரஜினி, தான் நடித்த எல்லா படங்களிலும் அரசியல் தொடர்பான பஞ்ச் வசனங்களை பேசியது அவருடைய ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் வெகுவாக ஈர்த்தது. அதனால் அவர் எப்போது வேண்டுமானாலும் அரசியலில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் எழுந்தது.

2016-ம் ஆண்டு இறுதியில் ஜெயலலிதாவும், 2018-ல் கருணாநிதியும் மரணம் அடைந்ததை தொடர்ந்து அரசியல் கட்சி தொடங்கவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் தீவிரமடைந்தது. 2020-ம் ஆண்டில் அது அவரிடம் உச்சத்தை எட்டியது.

2021 சட்டப் பேரவை தேர்தல்தான் தனது இலக்கு என்றும், “இப்ப இல்லைன்னா.. எப்பவும் இல்லை…”என்று கூறி ரஜினி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தினார். இதனையடுத்து தான் தொடங்கவிருந்த கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்த ரஜினி, அதற்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணியையும் தொடங்கினார்.

ஆனால் இந்த நேரத்தில் நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவத் தொடங்கியது. மேலும் நடிகர் ரஜினியும் உடல்நலக் குறைவை சந்தித்தார்.
இதனால் 2020-ம் ஆண்டின் இறுதியில், தன் அரசியல் கட்சி தொடங்க போவதில்லை தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவித்துவிட்டு அரசியலுக்கு முழுக்கு போட்டார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அவருடைய ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்திற்கு ஆளாயினர்.

அதேநேரம் கொரோனா உச்சம் பெற்ற நிலையில், சில மாதங்களுக்கு பிறகு அண்ணாத்த படத்தில் அவர் நடித்தது, கடும் விமர்சனத்திற்கு உள்ளானதும்
குறிப்பிடத்தக்கது.

இப்படி அரசியல் என்றாலே ஒரு பெரிய கும்பிடாக போட்டுவிட்டு ஒதுங்கிய ரஜினிதான், தற்போது தமிழக ஆளுநர் ரவியிடம் அரசியல் பேசியதாக கூறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறார்.

பொதுவாக கலைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், ஆளுநரை சந்தித்துவிட்டு திரும்பும்போது செய்தியாளர்களிடம் அரசியல் பற்றி பேசியதாகவே காட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.

ஆனால் தமிழக ஆளுநரிடம் நான் அரசியல் குறித்துப் பேசினேன் என்பதை 71 வயது ரஜினி பகிரங்கமாக போட்டு உடைத்துவிட்டார்.

“தமிழக ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்தித்து 25 முதல் 30 நிமிடங்கள் வரை பேசினேன். பீகாரில் பிறந்து பெரும்பாலான ஆண்டுகள் வட இந்தியாவிலேயே அவர் இருந்துள்ளார். தமிழகத்தை மிகவும் நேசித்து வருகிறார். தமிழக மக்களுடைய நேர்மை, கடின உழைப்பு இதெல்லாம் ஆளுநருக்கு மிகவும் பிடித்துள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள ஆன்மீக உணர்வு மிகவும் ஈர்த்துள்ளதாகவும் ஆளுநர் என்னிடம் குறிப்பிட்டார்.

தமிழக நலனுக்காக என்ன பண்ணுவதற்கும் ஆளுநர்  தயாராக இருக்கிறார். அரசியல் தொடர்பாகவும் ஆளுநரிடம் பேசினேன். ஆனால் நாங்கள் என்ன பேசினோம் என்பதை  வெளியில் கூற இயலாது” என்று குறிப்பிட்டார்.

மீண்டும் அரசியலில் குதிக்கும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு அப்படியொரு எண்ணம் எதுவும் இல்லை என ரஜினி தெரிவித்தார். மேலும் ஆளுநருடனான சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பேசினீர்களா?.. என்ற கேள்விக்கு அது தொடர்பாக மீடியாவில் பேச முடியாது என பளிச்சென்று பதில் கூறினார்.

தயிர், லஸ்சி, மோர் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக எழுப்ப எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினி நோ கமெண்ட்ஸ் என்று முடித்துக் கொண்டார்.

ஆளுநரிடம் அரசியல் குறித்து பேசியதாக நடிகர் ரஜினி கூறியதை தொடர்ந்து, ஏராளமான செய்திகள் றெக்கை கட்டி பறக்க தொடங்கிவிட்டன.

இருவருடைய சந்திப்பு தொடர்பான புகைப்படத்தை ஆளுநர் மாளிகை தனது இணையதளத்தில் வெளியிட்டதால் அதுவும் வைரலானது.

ஆளுநர் அழைப்பின் பேரில்தான் ரஜினி சென்று சந்தித்துப் பேசியதாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு தெரிவித்துள்ள ஒரு முக்கிய தகவலை அவரிடம் ஆளுநர் கூறியதாக ஒரு செய்தியும் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ரஜினி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ள பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அவரை ஏதாவது ஒரு மாநிலத்தின் ஆளுநராகவோ, நாடாளுமன்ற மாநிலங்களவையில் எம்பியாகவோ நியமிக்க திட்டமிட்டு இருக்கலாம் என்றும் அதற்கு சம்மதம் பெற ரஜினியை அழைத்து பேசும்படி ஆளுநர் ரவி அறிவுறுத்தப்பட்டு இருக்கலாமென்று அந்த தகவல் கூறுகிறது.

திரையுலக வட்டாரத்தினரோ, சமீபகாலமாக குடும்ப பிரச்சினை காரணமாக ரஜினி சற்று மனநிம்மதி இழந்து தவிப்பதாக கூறப்படுவதை கேள்விப்பட்ட டெல்லி பாஜக மேலிடம், அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் விதத்திலும், கவலையை திசை திருப்பும் வகையிலும் ஆளுநர் பதவி அல்லது நியமன எம்பி பதவி வழங்க முடிவு செய்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

எனினும் ஆளுநர் ரவியிடம், ரஜினி இது தொடர்பாக எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை என்கிறார்கள். காரணம் அண்மையில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இதன் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது கருத்தை தெரிவிப்பதாக ஆளுநரிடம் ரஜினி கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

அதேநேரம் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் ஆளுநர் ரவியை சந்தித்து அரசியல் பேசியது குறித்து நடிகர் ரஜினி மீது கடும் கோபத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு உள்ளது. ஏனென்றால் ஆளுநருக்கும், ஆளும் கட்சிக்கும் இடையேயான உறவு சுமுகமாக இல்லாத நேரத்தில் ஆளுநர் ரவியை, நடிகர் ரஜினி புகழ்ந்து பேசியிருக்கிறார்.

தமிழகத்தின் நலனுக்காக என்ன பண்ணுவதற்கும் ஆளுநர் தயாராக இருக்கிறார். தமிழகத்தில் உள்ள ஆன்மீக உணர்வு ஆளுநரை மிகவும் ஈர்த்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருப்பது கடவுள் வழிபாட்டில் நம்பிக்கையே இல்லாத முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலைவர்களுக்கும் எரிச்சலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது என்று பரபரப்பாக பேசப்படுகிறது.

அதுவும் ஆளுநருடன் அரசியல் பற்றி பேசினேன் என்று ரஜினி கூறியிருப்பதையும், திமுக கூட்டணி கட்சிகளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்.

காரணம், கடந்த ஏப்ரல் மாதம் புத்தக முன்னுரை ஒன்றில் ‘பிரதமர் மோடியின் ஆட்சியைக் கண்டு அம்பேத்கர் பெருமைப்படுவார்’ என்று பிரபல இசையமைப்பாளர் இளையராஜா குறிப்பிட்டிருந்தார். அவருடைய ’மோடி, அம்பேத்கர் ஒப்பீடு’ குறித்து சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதமும் விமர்சனங்களும் எழுந்தது. காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் இதற்கு கண்டனமும் தெரிவித்தன.

அதேநேரம் மத்திய பாஜக அரசு இளையராஜாவுக்கு நியமன எம்பி பதவி வழங்கியபோது இந்த சத்தம் அப்படியே அமுங்கிப் போய்விட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நாட்டில் நாங்கள் மட்டுமே குரல் கொடுத்து வருகிறோம் என்று வாய்ஜாலம் பேசிவருவது அம்பலமாகி விடுமோ என பயந்து அந்த கட்சிகள் விமர்சிக்காமல் எப்படி அமைதி காத்தனவோ அதே போன்ற நிலை ரஜினிக்கு மத்திய அரசு பதவி வழங்கப்படும் போதும் ஏற்படும்.

ஏனென்றால் ரஜினி இன்று அரசியலில் இல்லாவிட்டாலும் கூட, தமிழக மக்கள் அனைவரிடமும் நன்மதிப்பைப் பெற்றவர். அவருடைய ரசிகர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருக்கிறார்கள் என்பது அனைத்து தலைவர்களுக்கும் நன்றாகவே தெரியும்.
அதனால் அவரை கடுமையாக விமர்சிக்கத் ரொம்பவே தயக்கம் காட்டுவார்கள்” என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

Views: - 475

0

0