தமிழக கோவில்களில் ராமர் கோவில் நிகழ்ச்சி நேரலை… தமிழக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

Author: Babu Lakshmanan
22 January 2024, 11:31 am
Quick Share

தமிழக கோவில்களில் ராமர் கோவில் திறப்பு விழாவை நேரலை செய்ய அனுமதி வழங்கக்கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள கோவில்களில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களால் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழக கோவில்களில் பாஜகவினரால் சிறப்பு பூஜைகள் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், ராமர் கோவிலுக்கான சிறப்பு பூஜைகளை செய்ய அனுமதிக்கக் கூடாது என்று இந்து அறநிலையத்துறை சார்பில் வாய்மொழி உத்தரவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், இதுபோன்று எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே, தமிழக கோவில்களில் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நேரலையில் ஒளிபரப்ப உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ராமர் கோவில் நிகழ்ச்சியை தமிழக கோவில்களில் நேரலை செய்ய சட்டப்படி அனுமதி வழங்க வேண்டும் என்றும், வாய்மொழி உத்தரவை கேட்டு காவல்துறையினர் செயல்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், ஜன.,29ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனிடையே, அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும், ராமர் கோவில் நிகழ்வை நேரலை செய்ய எந்த தடையும் விதிக்கப்படவில்லை என தமிழக அரசு வாதிட்டது.

Views: - 266

0

0