ரூ.100 கோடி பங்களா முடங்கிப் போச்சே?…ED செக்; அலறும் அசோக்குமார்!

Author: Udayachandran RadhaKrishnan
10 August 2023, 9:37 pm
VSB - Updatenews360
Quick Share

ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு விவகாரங்கள் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில் அவரை தனிப்பட்ட முறையில் கவலை கொள்ள வைக்கும் அளவிற்கு சில நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன. அதிலும் அமலாக்கத்துறையே ‘செக்’ வைத்திருப்பதுதான் இதில் ஹைலைட்டான விஷயம்!

திணற வைக்கும் அமலாக்கத்துறை

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் சாமிநாதன் தனது பினாமி ஒருவரிடம் கொடுத்து பதுக்கி வைத்திருந்த 60 நில ஆவணங்களின் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் ஒரு பக்கம் விசாரணை நடக்கிறது.

இன்னொரு பக்கம், அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை தருவதாக கூறி ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கிடுக்கு பிடி கேள்விகளை கேட்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரைத் திணறடித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக போக்குவரத்து துறைக்கு சம்பந்தமே இல்லாத உதவியாளர் சண்முகம், உங்கள் தம்பி அசோக்குமார் மற்றும் கார்த்திகேயன் மூலம் நடத்துனர், ஓட்டுனர், மெக்கானிக் பணிகளுக்கு ஆட்களை தேர்வு செய்தது ஏன்?… அது தொடர்பான விவரங்களை நீங்கள் ஏன் பென்சிலால் குறித்து வைத்திருந்தீர்கள்? என்று 2014ம் ஆண்டு பணி நியமனப் பட்டியலை காண்பித்து அமலாக்கத்துறையினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஞாபகம் வரவில்லை என பதில்

அங்கீகரிக்கப்படாத அதிகாரியால் பணி நியமன ஆணை ஏன் வழங்கப்பட்டது?… விதிமுறைகளை பின்பற்றாமலும் உரிய அனுமதி இல்லாமலும், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்தது ஏன்? இவை எல்லாம் முறைகேடு நடந்திருப்பதை உறுதி செய்வதாக உள்ளதே?என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பழைய சம்பவங்கள் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை என்று கூறியதாக தெரிகிறது.

முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் காலகட்டத்தில் உங்கள்
வங்கி கணக்கில் ஒரு கோடியே 34 லட்ச ரூபாயும், உங்கள் மனைவி மேகலா வங்கிக் கணக்கில் 29 லட்சத்து 55 ஆயிரம் ரூபாயும் நீங்கள் டெபாசிட் செய்ததற்கான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கூற அது எங்கள் பூர்வீக சொத்தை விற்றதன் மூலம் கிடைத்த பணம் என்று செந்தில் பாலாஜி மறுத்ததாக கூறப்படுகிறது.

அப்படியென்றால் ஒரு பாகப் பிரிவினையிலேயே இவ்வளவு பணம் கிடைத்ததா?…அதை நீங்கள் வருமானவரித் துறையிடம் காண்பித்து இருக்கிறீர்களா?.என்று கேட்டு அதற்கான பதிலையும் செந்தில் பாலாஜியிடமிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் பெற்றும் உள்ளனர்.

பங்களா குறித்து அடுக்கடுக்கான கேள்வி

அதேபோல இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர், செந்தில் பாலாஜிக்கும், அரசு பணிக்காக விண்ணப்பித்தவர்களுக்கும் இடையே தரகராக செயல்பட்டதாக கூறியுள்ளனர். அது தொடர்பான ஆவணங்களை செந்தில் பாலாஜியிடம் காண்பித்து
அதற்கான பதிலையும் அந்த அதிகாரிகள் பதிவு செய்து கொண்டுள்ளனர்.

அடுத்ததாக, கரூர் ராம் நகரில் அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வந்த பிரமாண்ட பங்களா தொடர்பாக உங்கள் தம்பி என்ன தொழில் செய்கிறார்?… உங்களுக்கு நன்கு அறிமுகமான அனுராதா என்ற பெண் 2.49 ஏக்கரை உங்கள் தம்பியின் மாமியார் பெயருக்கு 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை
வெறும் 11 லட்ச ரூபாய்க்கு விற்று இருக்கிறார். உங்கள் தம்பியின் மாமியாரோ பழைய நகைகளை விற்று அந்த நிலத்தை வாங்கியதாக கணக்கு காண்பித்து இருக்கிறார். அந்த நிலத்தை பினாமிகள் பெயரில் நீங்கள்தான் வாங்கி இருக்கிறீர்களா? என்று அடுத்தடுத்து பல கேள்விகளை கேட்டு இருக்கின்றனர்.

இந்தக் கேள்விகளுக்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி “இதுபற்றி எல்லாம் எனக்கு எதுவும் தெரியாது நிலம் வாங்கியது தொடர்பாக என் தம்பி என்னிடம் எதுவும் தெரிவித்ததாக ஞாபகம் இல்லை” என்று கூறியிருக்கிறார்.

திணறிய செந்தில்பாலாஜி

இந்த நிலையில்தான் அமலாக்கத்துறை அதிகாரிகள் எழுப்பிய இன்னொரு கேள்விக்கு சரி வர பதில் அளிக்க முடியாமல் செந்தில் பாலாஜி திணறியதாக கூறப்படுகிறது.

உங்களுக்கும் உங்கள் தம்பிக்கும் எந்த அளவிற்கு நெருக்கம் உண்டு? அவர் சென்னையில் இருக்கும் போது நீங்கள் வசிக்கும் அரசு இல்லத்தில்தான் தங்கி இருப்பாரா? என்று கேட்டதற்கு சில நேரங்களில் அவர் என் வீட்டில் தங்குவது உண்டு என்று செந்தில் பாலாஜி பதில் அளித்து இருக்கிறார்.

அப்படியென்றால் சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் வீட்டில் இருக்கும்போதே உங்களைத் தேடி வந்தவர்களிடம் நீங்கள் இல்லை என்று கூறி அவர்களை அசோக் குமார் அனுப்பிவைத்து விட்டு அவர்கள் சென்றபின்பு இன்னொரு அறையில் உங்கள் தம்பி ஏற்கனவே அழைத்து வந்திருந்த சிலரிடம் அவர் முன்னிலையில் எதற்காக டெண்டர் எடுப்பது தொடர்பான விஷயங்கள் குறித்து விரிவாக பேசினீர்கள்?…

அந்த அளவுக்கு நீங்கள் அசோக்குமாருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறீர்களா?… என்று அதற்கு ஆதாரமாக குறிப்பிட்ட நாளில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை காண்பித்து கேள்வி எழுப்ப அப்போது எனக்கு மயக்கம் வருவதுபோல இருக்கிறது என்று கூறி செந்தில் பாலாஜி தலையில் கையை வைத்தவாறு சோர்வாக உட்கார்ந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

இதனால் மூன்றாவது நாள் விசாரணையை அமலாக்கத்துறை அதிகாரிகள் அத்துடன் முடித்துக் கொண்டுள்ளனர்.

சிக்கிய பங்களா

இதற்கு இடையேதான், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள ராம் நகரில் அசோக்குமார் தனது மனைவி நிர்மலா பெயரில் கட்டி வந்த 3 மாடிகள் கொண்ட பிரமாண்ட பங்களாவில் ஆகஸ்ட் 9ம் தேதி மதியம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து பல மணி நேரம் சோதனை நடத்தினர்.

அதேபோல கரூர் ராமகிருஷ்ணா புரத்தில் அசோக்குமார் வீட்டிற்கும் அந்த அதிகாரிகள் சென்றனர். அங்கே வீடு பூட்டி கிடந்ததால் நிர்மலா விசாரணைக்காக அமலாக்கத்துறையிடம் நேரில் ஆஜராகவேண்டும் என்ற சம்மன் அறிவிப்பு நோட்டீசை ஒட்டவும் செய்தனர்.

அதுமட்டுமின்றி 65 சதவீதம் வரை கட்டப்பட்டு விட்ட அந்த பங்களாவை யாருக்கும் விற்பனை செய்து விட முடியாதபடி மேலக்கரூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஒரு நோட்டீசையும் அளித்தனர். அந்த நோட்டீசில்
“கரூர் ஆண்டான் கோவில் கிழக்கு முகவரியில் நிர்மலா பெயரில் இருக்கும் 2.49 ஏக்கர் நிலம் முடக்கப்பட்டு விட்டது. அந்த சொத்தை அமலாக்கத்துறையின் இணை இயக்குனர் முன் அனுமதி இன்றி வேறு யாருக்கும் மாற்ற முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“இது தலைமறைவாக உள்ள அசோக்குமாருக்கும், அவருடைய மனைவி நிர்மலாவுக்கும் மிகுந்த அதிர்ச்சி தரும் செய்தியாக அமைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

வாயை பிளக்க வைக்கும் சொகுசு பங்களா மதிப்பு

“ஏனென்றால் இரண்டரை ஏக்கர் நிலத்தின் மதிப்பு 25 கோடி ரூபாய். சுமார் 31 ஆயிரம் சதுர அடியில் இந்த மூன்று மாடி ஆடம்பர பங்களா கட்டப்படுவதாக கூறப்படுகிறது. 35 ஆயிரம் சதுர அடி என்று கூறுவோரும் உண்டு. இதன் 65 சதவீத காட்டுமான பணிகள் முடிந்துவிட்டன. இதுதவிர விலை உயர்ந்த கிரனைட் கற்கள், பளபளக்கும் பளிங்கு கற்களும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பங்களாவை வெளியிலிருந்து யாரும் எளிதில் பார்க்காத முடியாத அளவில் 25 அடி உயரத்திற்கு தகடுகளுடன் சுற்றுச்சுவரும் எழுப்பப்பட்டு இருக்கிறது.

இதனால் இந்த சொகுசு பங்களாவின் கட்டுமான பணிகளுக்காக மட்டும் இதுவரை
75 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு இருந்தால் இன்னும் 30 கோடி ரூபாய் செலவு பிடித்து இருக்கும் என்கிறார்கள்.

எனவே இந்த பிரமாண்ட பங்களாவின் தற்போதைய மதிப்பு நிலத்துடன் சேர்த்து 100 கோடி ரூபாய் என்று கணக்காகிறது. இதனால் இவ்வளவு பெரிய தொகையை அசோக்குமாரின் மனைவி நிர்மலா மட்டும் எப்படி தனிப்பட்ட முறையில் சம்பாதித்து இருப்பார் என்ற கேள்வியும் எழுகிறது. கணவர் பெரிய அளவில் பண உதவி செய்யாமல் இது நடந்திருக்க சாத்தியமே இல்லை. அதனால் அமலாக்கத்துறை முடக்கிய அமைச்சர் பொன்முடி வங்கியின் வைப்புத் தொகையாகயான 42 கோடி ரூபாயை விட இது இரண்டு மடங்கு அதிகம்.

சொகுசு பங்களாவால் சிக்கிய சகோதரர்கள்

ஆனால் அசோக்குமார் தனது மனைவி பெயரில் கட்டிய பிரமாண்ட பங்களா, அவர்களுக்கு மட்டுமின்றி அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தி விட்டது. ஏனென்றால் தனி ஒருவராக அசோக்குமாரால் சுமார் 130 கோடி ரூபாயை கடந்த இரண்டரை ஆண்டுகளில் சம்பாதித்திருக்கவே முடியாது. நிச்சயம் அவருடைய சகோதரரும் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் திருவிளையாடல்கள் இதில் நிறைய இருக்கும் என்று அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது.

அதனால்தான் கடந்த மூன்று மாதங்களாக வருமான வரித்துறை, அமலாக்கத்துறை மாறி மாறி செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் அலுவலகங்களை குறிவைத்து ரெய்ட் நடத்தி வருகின்றன. இதுபோன்ற சோதனைகள் இன்னும் அதிக அளவில் நடப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

அடடா! இந்த விவகாரம் இப்போதைக்கு ஓயாது போலத் தெரிகிறதே!

Views: - 438

0

0