மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி: முதல் கட்டமாக ரூ.1,627 கோடியை ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்..!!
Author: Rajesh5 May 2022, 10:39 am
மதுரை: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு முதல் கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கியுள்ளது.
மதுரை தோப்பூரில் 224 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு முன்னதாகவே மாணவர் சேர்க்கை நடைபெற்று வேறொரு இடத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு முதல் கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பான் நிறுவனம் ஒதுக்கி உள்ளது. இதன்படி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு மொத்த திட்ட மதிப்பான ரூ.1,977 கோடி என திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ரூ.1,627 கோடியை ஜப்பானை சேர்ந்த ஜைக்கா நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் மீதி தொகை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், தோப்பூரில் விரைவில் கட்டுமான பணிகள் துவங்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.