14 எம்பிக்களுக்கு சீட் அம்போ?… திமுக போடும் புது கணக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
20 January 2024, 9:17 pm
DMK Mp
Quick Share

14 எம்பிக்களுக்கு சீட் அம்போ?… திமுக போடும் புது கணக்கு!

நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகியவை கடந்த 6 மாதங்களுக்கு முன்பே ஆயத்தமாகிவிட்டன என்பது வெளிப்படையாக தெரிந்த விஷயம். தங்களது கட்சி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு அமையும் என்பதை இந்த மூன்று பிரதான கட்சிகளும் கள ஆய்வில் இறங்கி பலமுறை சர்வேக்களையும் எடுத்துவிட்டன.

தங்களது கட்சி சார்பிலும், சில தனியார் ஏஜென்சிகள் மூலமும் எடுக்கப்பட்ட இந்த ரகசிய சர்வேக்களின் அடிப்படையில் பூத் கமிட்டிக்கு பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளையும் தொடங்கிவிட்டன.

அதிலும் குறிப்பாக தங்கள் கட்சி மிகப் பலமாகவும், பலவீனமாகவும் உள்ள தொகுதிகளை அறிந்து அதற்கேற்ப புதுப் புது வியூகங்களை அமைத்து களப்பணி ஆற்றியும் வருகின்றன.

இதற்கிடையே முன்னணி ஆங்கில டிவி செய்தி சேனல் ஒன்று தனியார் கருத்துக்கணிப்பு நிறுவனத்துடன் இணைந்து வாக்காளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு ஓட்டு போடுவார்கள் என்ற சர்வேயை தமிழகத்தில் இரண்டு முறை எடுத்தது. இதில் கடந்த நவம்பர் மாதத்துக்கு முந்தைய சர்வேவுக்கும், 2024 ஜனவரி முதல் வாரம் எடுக்கப்பட்ட சர்வேவுக்கும் இடையே ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதை காண முடிகிறது.

நவம்பர் மாத சர்வேயில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அதிகபட்சமாக 32 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அதிமுகவுக்கு ஆறு சீட்டுகளிலும், பாஜகவுக்கு ஒரு தொகுதியிலும் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால் ஜனவரியில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு திமுகவுக்கு மேலும் இறங்கும் முகமாக அமைந்தது. திமுக கூட்டணி 12 தொகுதிகளில் தோல்வியை தழுவலாம் என்றும் மேலும் ஆறு இடங்களில் இழுபறி நிலைமை காணப்படுவதாகவும் அதில் கணிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் திமுகவுக்காக மிக அண்மையில் எடுத்ததாக கூறப்படும் ஒரு சர்வேயில் தமிழகத்தில் 16 தொகுதிகளில் திமுக கூட்டணி மிகவும் பலவீனமாக இருப்பது தெரிய வந்துள்ளது என்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணம் இந்த 16 எம்பிக்களும் சொல்லிக் கொள்கிற மாதிரி தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை, மக்களுடன் ஓரளவு நெருக்கமான தொடர்பையும் கூட ஏற்படுத்திக் கொள்ளவில்லை, அரசு சார்பாக நடக்கும் விழாக்களில் மட்டும் கலந்து கொண்டு விட்டு ஒதுங்கிக் கொள்கிறார்கள். சில எம்பிக்கள் தேவையின்றி சர்ச்சையை ஏற்படுத்தியும் விடுகிறார்கள் என்று கூறப்படுவதுதான்.

குறிப்பாக வேலூர், கடலூர், தர்மபுரி, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, சேலம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி தொகுதிகளின் திமுக எம்பிக்கள் செயல்பாடுகள்
திருப்திகரமாக இல்லை. சிவகங்கை, கரூர், திருச்சி, திருவள்ளூர் தொகுதிகளின் காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டணியில் அவ்வப்போது சலசலப்பை ஏற்படுத்தும் விதமாக எதையாவது பேசி விடுகிறார்கள். தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றுவதும் கிடையாது. எப்போதாவது அபூர்வமாகத்தான் தொகுதிக்குள் தலையை காட்டுகிறார்கள் என்பதும் சபரீசன் எடுத்த சர்வேயில் தெரியவந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் இந்த எம்பிக்களுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்றே தெரிகிறது.

திமுகவின் இந்த 10 எம்பிக்களில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகனின் மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழுவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நியமித்த ஏழு பேரில் ஒருவரான முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி தொகுதி எம்பியுமான கௌதம சிகாமணி, பசு மாட்டு மூத்திர மாநிலங்களில்தான் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று நாடாளுமன்றத்தில் ஆவேசமாக பேசிவிட்டு, அது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய பிறகு மறுநாள் அதற்காக மன்னிப்பு கேட்ட தர்மபுரி எம்பி டாக்டர் செந்தில்குமார் ஆகிய மூவரும் மிக முக்கியமானவர்கள்.

மற்ற திமுக எம்பிக்கள் ஏழு பேரும் தங்களுக்கு தேர்தலில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றால் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்கள். செந்தில்குமாரோ திமுக தலைமையை எதிர்த்து கேள்வி கேட்கப் போவதில்லை.
ஆனால் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் தனது தந்தை கட்சியின் பொதுச் செயலாளராக இருப்பதால் அவரிடம் மல்லுக்கட்டி எப்படியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பைப் பெற்றுவிடுவார் என்பது நிச்சயம்.

அதேபோல் அமலாக்கத்துறையின் பிடியில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி எம்பி கௌத சிகாமணியை அவருடைய தந்தை பொன்முடி எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டார். எப்படியும் மகனை அதே தொகுதியில் மறுபடியும் போட்டியிட வைத்து விடுவார் என்கிறார்கள்.

ஆனால் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை திமுக தலைமை உணராமலும் இல்லை. அதனால்தான் வேலூர் தொகுதியை முஸ்லிம் லீக் கட்சிக்கும், கள்ளக்குறிச்சியை காங்கிரசுக்கும் ஒதுக்க அறிவாலயம் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேநேரம் கூட்டணி கட்சியான காங்கிரசை பொறுத்தவரை திருச்சி தொகுதி எம்பியான திருநாவுக்கரசரும், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரமும் தேர்தலில் போட்டியிடுவதை திமுக விரும்பவில்லை என்கின்றனர்.
திருநாவுக்கரசர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறப்பட்டாலும் கூட திருச்சி மாவட்ட திமுகவினர் தொகுதி பக்கமே வராத அவருக்கு தலைமை சீட் ஒதுக்க கூடாது என்று போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றனர். இதேபோல்தான் சிவகங்கை தொகுதி திமுகவினரும் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக உள்ளனர்.

கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கும், இலாகா இல்லாத அமைச்சராக சிறைக்குள் அடைபட்டு இருக்கும் செந்தில் பாலாஜிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் என்பதால் இந்த முறை கரூரை காங்கிரசுக்கு திமுக ஒதுக்குமா? என்பதும் மில்லியன் டாலர் கேள்விதான்.

இதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடாமல் திருவள்ளூரை குறி வைத்திருக்கிறார் என்று கூறப்படுவதால் இதில் அறிவாலயம் அவருக்கே முன்னுரிமை கொடுக்க வாய்ப்புள்ளது.

இதனால் திமுக எம்பிக்கள் 10 பேருக்கும் காங்கிரஸ் எம்பிக்கள் 4 பேருக்கும் வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்!

இது பற்றி அரசியல் நோக்கர்கள் கூறுவது இதுதான். “சமீபத்திய கருத்துக் கணிப்புகளில் திமுக கூட்டணி 12 தொகுதிகளில் வெற்றி பெறுவது மிகவும் கடினம்,
6 இடங்களில் இழுபறி நிலைமை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தற்போதைய எம்பிக்களில் 14 பேரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்று திமுக தலைமை கருதுவதையும் கணக்கில் சேர்த்தால் மொத்தம் 32 தொகுதிகளில் அதிமுக, பாஜக கட்சிகளிடம் கடும் போட்டியை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு திமுக கூட்டணி தள்ளப்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்தம்.

இப்படி பலத்த மும்முனைப் போட்டி தேர்தல் நடந்து முடியும் வரை நீடித்தால் திமுக கூட்டணி அதிகபட்சமாகவே 22 தொகுதிகளில்தான் வெற்றி பெற முடியும். மற்ற 17 தொகுதிகளையும் அதிமுகவும், பாஜகவும் தான் கைப்பற்றும்.

ஆனால் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளையும் வென்று விட வேண்டும் என்று துடிக்கும் திமுக, தனது கூட்டணியை மேலும் வலுப்படுத்த விரும்புகிறது. அதனால்தான் பாமகவை எப்படியும் தங்களது கூட்டணிக்குள் கொண்டு வந்து விடவேண்டும் என விடா முயற்சியிலும் அது இறங்கி இருக்கிறது.

திமுகவின் எண்ணப்படி தேர்தல் கூட்டணி மேலும் வலுப்பெறுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

Views: - 172

0

0