தலைமறைவானாரா செந்தில் பாலாஜியின் தம்பி? உளவுத்துறையின் உதவியை நாடிய அமலாக்கத்துறை.. அடுத்த ஸ்கெட்ச்!!

Author: Udayachandran RadhaKrishnan
23 July 2023, 4:57 pm
SenthilBalaji - Updatenews360
Quick Share

2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை. அதிலும் இந்த முறை கொஞ்சம் சீக்கிரமாகவே லோக்சபா தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திடீரென அமலாக்கத்துறை ரெய்டுகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. சமீபத்தில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை ரெய்டுக்கு உள்ளானார். அதோடு அமலாக்கத்துறை மூலம் கைதும் செய்யப்பட்டார்.

அவர் வீட்டில் ரெய்டு மற்றும் கைதுக்கான காரணத்தை அமலாக்கத்துறை பொதுவில் வெளியிடவில்லை. அதே சமயம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்.

தற்போது நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கிற்கு 3-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனின் கெடு 27-ந்தேதி முடிவடைகிறது. அதற்குள் அமலாக்கத்துறையின் இயக்குநர் அலுவலகத்தில் நேரில் அவர் ஆஜராக வேண்டும். 27-ந்தேதி வரை தான் அவருக்கு கடைசி கெடு.

அன்றைய தினம் அவர் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தால், அவரை தலைமறைவு குற்றவாளியாகவும், தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவித்து அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் அறிவிக்க அமலாக்கத்துறை முடிவு செய்திருக்கிறதாம். 27-ந்தேதி ஆஜராகச் சொல்லி அனுப்பப்பட்ட சம்மனுக்கு, இதய நோய் சிகிச்சையில் நான் இருந்து வருவதாலும், அந்த சிகிச்சை முடிய சில மாதங்கள் ஆகுமென்பதாலும் நேரில் ஆஜராக 6 மாத கால அவகாசம் தர வேண்டும் என கடிதம் மூலமாக கோரிக்கை வைத்தார் அசோக்.

அந்த கோரிக்கை கடிதம் அமலாக்கத்துறையால் நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் அசோக்கின் இருப்பிடத்தை மத்திய உளவுத்துறை கண்டறிந்து அமலாக்கத்துறைக்கு தெரியப்படுத்தி விட்டது.

அந்த வகையில், அசோக் எங்கு பதுங்கியிருக்கிறார் என்பது அமலாக்கத்துறைக்கு தெரியும். அதனால், 27-ந்தேதி அவர் ஆஜராகாமல் தவிர்த்தால், அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து விட்டு, அவரை கைது செய்யும் அதிரடி நடவடிக்கையில் குதிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறதாம்.

Views: - 281

0

0