தத்தளிக்கும் தென்மாவட்டங்கள்… பாதிக்கப்பட்டவர்களுக்கு கைகொடுங்க ; திமுகவினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்!

Author: Babu Lakshmanan
18 December 2023, 11:38 am

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் உதவி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் இட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. கோவில்பட்டி பணிமனை சாலையை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பேருந்துகளை இயக்குவதில் சிரமமாகியுள்ளது. நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் மற்றும் முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோவில்பட்டியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இன்றும், நாளையும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களுக்கு மிக கனமழை அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேனி, விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கையில் கனமழையும், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுகவினர் உதவி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப்பதிவில் கூறியிருப்பதாவது :- அதி கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்களுடனும், அரசு உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசியும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளைக் கண்காணித்துக் கொண்டும் இருக்கிறேன்.

மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர், உடனடியாகக் களத்தில் பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் ; நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்குத் துணை நிற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளேன், என தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?