உண்மை தெரியாமல் பொய்களை பரப்பும் திமுக ; கோபாலபுரத்தால் தமிழகத்திற்கு தலைகுனிவு… அண்ணாமலை பதிலடி..!!

Author: Babu Lakshmanan
9 August 2022, 1:07 pm
Quick Share

சென்னை : விளையாட்டுத் துறையில் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் என்று திமுகவினர் கூறி வந்த நிலையில், அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்திற்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக திமுக அரசு தொடர்ந்து மத்திய அரசை குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, ஜிஎஸ்டி தொகை வழங்குவதில் ஓரவஞ்சனை செய்வதாகவும் திமுக தலைமையிலான தமிழக அரசு கூறியிருந்தது. அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் கூட, நிலுவை தொகை ஏதும் வழங்கப்படத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார்.

மத்திய அரசு மீது திமுக குறை சொல்வதும் அதற்கு பாஜகவினர் ஆதாரங்களுடன் விளக்கமளிப்பது தொடர்ந்து வாடிக்கையாகி விட்டது.

அந்த வகையில், விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக திமுக நாடாளுமன்ற எம்பிக்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதாவது, குஜராத்திற்கு ரூ.608 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு ரூ.503 கோடியும் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிலையில், தமிழகத்திற்கு வெறும் 33 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், திமுகவினரின் இந்தக் குற்றச்சாட்டு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலளித்துள்ளார்.

Annamalai - Updatenews360

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- Khelo India திட்டத்தின்‌ மூலமாக அனைத்து மாநிலங்களிலும்‌ விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும்‌ விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும்‌ மாநில அரசின்‌ திட்டப்‌ பரிந்துரைகளின்‌ அடிப்படையில்‌ மத்திய அரசு நிதி வழங்கி வருகிறது.

ஆனால்‌ இந்த திட்டத்தைப்‌ பற்றி எதுவுமே தெரியாமல்‌, தெரிந்து கொள்ள எந்தவித முயற்சியையும்‌ எடுக்காமல்‌ பொய்களைப்‌ பரப்பி வரும்‌ பாராளுமன்ற உறுப்பினர்கள்‌, திமுகவினர்‌ மற்றும்‌ கோபாலபுரம்‌ குடும்பத்தின்‌ ஊடகங்களால்‌ தமிழகத்திற்குத்‌ தலைகுனிவு.

இது ஒரு Demand driven திட்டம்‌. மற்ற மாநிலங்கள்‌ இந்த திட்டத்தைச்‌ சரியாகப்‌ பயன்படுத்தி மத்திய அரசிடம்‌ நிதி பெற்று தங்களது மாநில விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளனர்‌.

மாநில பட்டியலில்‌ உள்ள விளையாட்டுத்‌ துறைக்கு நமது மத்திய அரசு நிதி உதவி வழங்கி வருகிறது, அதைச்‌ சரியாகப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள இந்த திறனற்ற திமுக அரசு தவறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 160

0

0