சொந்த மாவட்டத்திலேயே வலுக்கும் எதிர்ப்பு : இபிஎஸ் பக்கம் சாய்ந்த தேனி முக்கிய பொறுப்பாளர்கள்… அதிர்ச்சியில் ஓபிஎஸ்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 June 2022, 11:14 am
EPS Vs OPS- Updatenews360
Quick Share

கடந்த 2017ம் ஆண்டு முதல் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக, அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என்ற குரல் ஒலித்து வருகிறது.

இதனிடையே, அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வரும் 23ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் ஒற்றைத் தலைமை குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. எனவே, கடந்த 5 தினங்களாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருவரும் தங்களின் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை நடத்த நேற்று காலை தன்னை சந்திக்குமாறு அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதிமுகவில் 75 மாவட்ட செயலாளர்கள் இருக்கும் நிலையில், அவரின் அழைப்பை ஏற்று, தேனி, விருதுநகர் உள்பட 9 மாவட்ட செயலாளர்கள் மட்டுமே பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சேலம் மாவட்ட செயலாளர் இளங்கோவன், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கரூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், தங்கமணி, பி.வி. ரமணா, செல்லூர் ராஜு, எஸ்பி வேலுமணி என 60க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தேனி மாவட்ட முக்கிய பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்தில் உள்ள அதிமுக பொறுப்பாளர்களான தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலை ராஜா, தேனி மாவட்ட முன்னாள் துணை செயலாளர் ராமர், கம்பம் ஒன்றிய செயலாளர் இளையநம்பி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தனக்கு ஆதரவு குறைந்து வருவதால் ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக சொல்லப்படும் நிலையில், தற்போதைய சூழலை பார்க்கையில், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை அவர் ஏற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உருவாகி வருகிறது.

Views: - 519

0

0