குடும்பக் கட்டுப்பாடு செய்த இளம்பெண் திடீர் மரணம் : அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
5 June 2022, 5:05 pm
Woman Dead After Family Plan - Updatenews360
Quick Share

குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்த இளம்பெண் திடீரென உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை முகலிவாக்கம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 35). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வினோதினி (வயது 30). இவர்களுக்கு சோனியா (வயது 5) என்ற மகளும், மோனிஷ் (வயது 3) என்ற மகனும் உள்ளனர்.

கடந்த 30-ந் தேதி வினோதினி, சின்னபோரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்ப்புற சமுதாய நல ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன் செய்து கொண்டார்.

2 நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தநிலையில் வினோதினிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் மீண்டும் நகர்ப்புற சமுதாய நல ஆஸ்பத்திரிக்கு சென்றார். உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் திடீரென வினோதிபதி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோதினியின் உறவினர்கள், அரசு டாக்டர்களின் கவனக்குறைவாலும், தவறான சிகிச்சையாலும்தான் வினோதினி இறந்ததாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டாக்டர்களிடமும் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். அதேநேரத்தில் சின்னபோரூரில் உள்ள நகர்ப்புற சமுதாய நல ஆஸ்பத்திரியிலும் வினோதியின் உறவினர்கள் சிலர் அங்கிருந்த டாக்டர்கள், ஊழியர்களிடமும் தவறான சிகிச்சை அளித்ததாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போரூர் போலீசார் சமாதானம் செய்து அனைவரையும் கலைந்து போக செய்தனர். இந்தநிலையில் வளசரவாத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறும்போது, “இளம்பெண் வினோதினி உயிரிழந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளோம். அதில் தவறு நடந்து இருப்பது தெரிந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.

Views: - 274

0

0