ஜோதிமணிக்கு தமிழக காங். தலைவர் பதவியா?…செந்தில் பாலாஜிக்கு புதிய தலைவலி!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2023, 9:41 pm
Jothi - Updatenews360
Quick Share

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக காங்கிரஸ் தலைமை பல மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமிக்கத் தொடங்கி இருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த விஷயத்தில் காங்கிரஸ் பலவீனமாக உள்ள மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

புதிய காங்கிரஸ் தலைவர் நியமனம்

அதன்படி காங்கிரஸ் மேலிடம் சில மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்தும் உள்ளது. புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக இருந்த இருந்த சுப்ரமணியன் அப்பொறுப்பிலிருந்த விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளார்.

இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த சட்டப் பேரவை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலக விரும்புவதாக சுப்பிரமணியம் தெரிவித்திருந்த நிலையில் இப்போதுதான் அதற்கு விடிவுகாலம் பிறந்திருக்கிறது.

மேலும் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக மாநிலங்களவை எம்பி ஷக்திசின் கோஹிலும், அரியானா மற்றும் டெல்லி காங்கிரஸ் தலைவராக தீபக் பபாரியாவும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர். மும்பை காங்கிரஸ் தலைவராக வர்ஷா கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கேஎஸ் அழகிரி நீக்கம்?

இந்த நிலையில்தான் தமிழகத்தில் நான்கு வருடங்களுக்கும் மேலாக காங்கிரஸ் தலைவர் பதவியை வகித்து வரும் கே எஸ் அழகிரியை நீக்கிவிட்டு புதிய தலைவரை நியமிக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது.

மாநில காங்கிரஸ் தலைவர்களின் பதவி காலம் மூன்று ஆண்டுகள்தான். அதன்படி பார்த்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதமே கே.எஸ் அழகிரிக்கு பதிலாக புதிய தலைவர் ஒருவரை டெல்லி தலைமை நியமித்திருக்கவேண்டும். ஆனால் உட்கட்சி பிரச்சனையால் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

கேஎஸ் அழகிரிக்கு எதிர்ப்பு

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கே எஸ் அழகிரியின் ஆதரவாளர்களுக்கும், ரூபி மனோகரன் எம்எல்ஏவின் ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் மூன்று பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது. இந்த மோதல் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக கட்சிக்குள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் சிலர் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் மாநில தலைவர்கள் திருநாவுக்கரசர், இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கடந்த ஆண்டு இறுதியில் டெல்லிக்கே சென்று அழகிரியை மாற்றும்படி வேண்டுகோளும் வைத்தனர். அதற்கு பதிலடியாக கே எஸ் அழகிரி தரப்பினரும், அவரை மாற்றக்கூடாது என்று கூறி செல்வப்பெருந்தகை, ரூபி மனோகரனுக்கு எதிராக புகார்களை அடுக்கினர்.

அப்போதே மல்லிகார்ஜுன கார்கே, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு புதியவர் ஒருவரை நியமிப்பதற்கு முடிவு செய்துவிட்டார்.

தலைமைக்கு வேண்டுகோள்

இருந்தபோதிலும் கே.எஸ். அழகிரி தலைமையில் தமிழக காங்கிரஸ் 2019 நாடாளுமன்ற தேர்தலில் 9 இடங்களில் போட்டியிட்டு 8 இடங்களிலும், 2021 தமிழக தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களிலும் வெற்றி பெற்றதால், அவர் மீது காங்கிரஸ் தலைமை நல்ல அபிப்ராயத்தையே வைத்து இருந்தது.

இதை பயன்படுத்திக் கொண்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த மகளின் திருமணத்தை காரணம் காட்டி இந்த நேரத்தில் எனது பதவியை பறித்து விடவேண்டாம் என்று கே எஸ் அழகிரி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல்,மல்லிகார்ஜுன கார்கே மூவரிடமும் வேண்டுகோள் வைத்ததால் அதை மேலிடம் அப்படியே ஏற்றுக்கொண்டதாக கூறப்படுவதும் உண்டு.

அதேநேரம் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கே எஸ் அழகிரி அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை, இதனால் கட்சியின் வளர்ச்சி தேக்கமடைந்திருப்பதாக எதிரணியினர் தொடர்ந்து கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனாலும் கேஎஸ் அழகிரிக்கு எதிரான தமிழக காங்கிரஸ் தலைவர்களில்
பீட்டர் அல்போன்ஸ், செல்வ பெருந்தகை உள்ளிட்ட பல தலைவர்கள் கூட்டணி கட்சியான திமுகவையும், மாநிலத்தை ஆளும் திமுக அரசையும் ஆதரித்தும், புகழ்ந்தும் பேசுவதில் அழகிரியை விட பல மடங்கு முன்னே இருக்கும் தகவல் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் புதிய தலைவர் நியமனத்தில் அவர் அவசரம் காட்டவில்லை.

தயாரான பட்டியல்

இந்த நிலையில் பாஜகவிற்கு எதிரான வியூகம் வகுக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள மாநில தலைவர்களை களப்பணியில் தீவிரம் காட்ட காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது. மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் தேர்தல் பணிகளை தொடங்கவும் உத்தரவிட்டு இருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் வேறு வழியின்றி தமிழக காங்கிரசுக்கு புதிய தலைவரை நியமிக்க மல்லிகார்ஜுனா கார்கே உறுதியாக முடிவு செய்துள்ளார்.

இப் பதவியை கைப்பற்ற மாணிக்கம் தாகூர், செல்லக்குமார், ஜோதிமணி, விஜயதாரணி, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட பலரும் முட்டி மோதி வருகின்றனர். இதற்காக கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்ட சிலரிடம் அடுத்த தலைவராக யாரை நியமனம் செய்யலாம் என்று கார்கே ஆலோசனையும் கேட்டிருக்கிறார்.

அவர்கள் அளித்த பட்டியலின் அடிப்படையில் விரைவில் கே.எஸ். அழகிரியை மாற்றி விட்டு துடிப்பான இளைய தலைமுறை தலைவர் ஒருவரை நியமனம் செய்ய மல்லிகார்ஜூன கார்கே முடிவு எடுத்து இருக்கிறார்.

ஜோதிமணிக்கு வாய்ப்பு?

குறிப்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கரூர் தொகுதி எம்பி ஜோதிமணி நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ராகுல்காந்தி 12 மாநிலங்களில் நடத்திய 140 நாள் இந்திய ஒற்றுமை யாத்திரையில் நான்காயிரம் கிலோ மீட்டர் தூரம் ஜோதிமணியும் பங்கேற்று துடிப்புடன் நடந்தார். அது தொடர்பான நிகழ்வுகளை சமூக ஊடகங்களில் வெளியிட்டும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். இதனால் ராகுல் காந்தியின் நன்மதிப்பு புத்தகத்தில் ஜோதிமணி தானாகவே இடம் பிடித்துவிட்டார். அதன் காரணமாகவே அவருக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று காரணம் கூறப்படுகிறது.

ஜோதிமணி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால், அவர்தான் தமிழகத்தின் முதல் பெண் காங்கிரஸ் தலைவர் என்ற பெருமையையும் பெறுவார். ஏனென்றால் இதற்கு முன்பாக பதவி வகித்த 14 பேருமே ஆண் தலைவர்கள்தான்.

ஜோதிமணி – செந்தில்பாலாஜி மோதல்?

அதேநேரம் ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிமணிக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஏழாம் பொருத்தமாக உள்ளது. இருவருக்கும் சுமுகமான நட்புறவு இல்லாத நிலையில் ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டால் கரூர் மாவட்டத்தில் திமுகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என்றும் கூறப்படுகிறது.

ஏனென்றால் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் கரூர் மாவட்ட கலெக்டருக்கு எதிராக ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டு நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி தமிழகத்தையே ஜோதிமணி ஒரு உலுக்கு உலுக்கினார். மத்திய அரசு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் மாற்றுத்திறனாளிகள் முகாமை நடத்தக் கோரி ஆட்சியருக்கு 3 முறை கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதற்காக இந்தப் போராட்டத்தை அப்போது அவர் முன்னெடுத்தார்.

ஆனால் இதை அமைச்சர் செந்தில் பாலாஜி கண்டுகொள்ளவே இல்லை. தன்னை விளம்பரப்படுத்தி கொள்வதற்காக ஜோதிமணி இப்படி நடந்து கொள்கிறார் என்று கிண்டலாக கூறினார். அதன்பின்பு கடந்தாண்டு பிப்ரவரி மாதம் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. காங்கிரசுக்கு கேட்ட வார்டுகளையும், நகராட்சி, பேரூராட்சி தலைவர்,துணைத் தலைவர் பதவிகளையும் ஒதுக்காமல் திமுகவே எடுத்துக் கொண்டது ஜோதிமணிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.

செந்தில்பாலாஜிக்கு நெருக்கடி

இத்தனைக்கும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிட்டபோது அவருக்காக ஒரே வாகனத்தில் உடன்சென்று தீவிரப் பிரச்சாரம் செய்தவர்தான் செந்தில் பாலாஜி. அதேபோல 2021 சட்டப்பேரவை தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜிக்காக ஜோதிமணியும் அவருடன் சென்று சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“ஜோதிமணி தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படுவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நிச்சயம் நெருக்கடியை தரும்” என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் முக்கிய அமைச்சர் பதவியில் இருந்தாலும் கூட திமுக தலைவர் ஸ்டாலினுடன் தேர்தலில் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையின்போது
தேசிய கட்சியின் ஒரு மாநில தலைவர் என்கிற முறையில் ஜோதிமணிதான் முக்கியத்துவம் பெறுவார். தவிர கரூர் மாவட்டம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்திலும் அவருடன் செல்ல வேண்டிய கட்டாயமும் செந்தில் பாலாஜிக்கு உருவாகும்.

அதேநேரம் முதலமைச்சர் ஸ்டாலின் முதல் மரியாதை தரும் அமைச்சராக, தான் இருப்பதால் தனக்குள்ள இமேஜை செந்தில் பாலாஜியும் குறைத்துக்கொள்ள விரும்ப மாட்டார்.

காத்திருக்கும் சவால்

ஆனால் தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து 25 பேர் பலியான துயர நிகழ்வுக்கு பின்பும் கரூர், கோவை, ஈரோடு, சென்னை நகரங்களில் செந்தில் பாலாஜியின் சகோதரர் மற்றும் அவருடைய நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 210க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் எட்டு நாட்கள் அண்மையில் நடத்திய அதிரடி சோதனைக்கு பிறகும் செந்தில் பாலாஜி சற்று அடக்கி வாசித்து வருவதை காண முடிகிறது. இதுவும் கூட ஜோதிமணிக்கு சாதகமாக அமையும் வாய்ப்பாகவே தெரிகிறது.

அதேநேரம் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிடம் தமிழகத்தில் 15 தொகுதிகளை கேட்டு பெற விரும்பும் அகில இந்திய தலைமையின் எண்ணத்தை நிறைவேற்றித் தரவேண்டிய மிகப் பெரியதொரு சவாலும் ஜோதிமணிக்கு காத்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று அந்த அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Views: - 294

0

0