உக்ரைன் மீதான ரஷ்ய போரால் பதற்றம்: ரஷ்யாவில் இருந்தும் நாடு திரும்பும் தமிழக மாணவர்கள்…பாசத்துடன் வரவேற்ற பெற்றோர்..!!

Author: Rajesh
9 March 2022, 1:41 pm
Quick Share

கோவை: உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியா திரும்ப வரும் நிலையில் ரஷ்யாவில் இருந்தும் மாணவர்கள் கோவை வந்துள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையே நடைபெறும் போர் காரணமாக, உக்ரைன் நாட்டிற்கு படிக்கச் சென்ற மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பல்வேறு கட்டங்களாக மாணவர்கள் இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே ரஷ்ய நாட்டிற்குள் போர் நடக்காத போதிலும் கூட ரஷ்ய நாட்டிற்கு மருத்துவம் படிக்கச் சென்ற தமிழக மாணவர்கள் இன்று விமானம் மூலமாக கோவை திரும்பினர்.

அவ்வாறு கோவையைச் சேர்ந்த புவனேஷ் கார்த்திக் மற்றும் டீனா ஜெனிபர் என்ற இருவர் கோவை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களுக்கு பெற்றோர்கள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர். செய்தியாளர்களிடம் கூறியதாவது, நாங்கள் ரஷ்யாவில் உள்ள கிரீமியா மாகாணத்தில் உள்ள கிரிமியன் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மருத்துவம் படிக்க சென்றோம்.

நாங்கள் இருக்கும் பகுதி ரஷ்யா மற்றும் உக்ரைன் எல்லைப் பகுதி என்பதால் எங்களது பெற்றோர்கள் பதற்றம் அடைந்தனர். எங்கள் பல்கலைக்கழகத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே எங்களது பல்கலைக்கழகம் விருப்பப்பட்டால் வீட்டிற்குச் செல்லலாம் என்று அறிவித்தது. மேலும் எங்களது பெற்றோரும் நாடு திரும்ப நிர்ப்பந்தித்ததால் 70 சதவீதம் மாணவர்கள் தற்போது நாடு திரும்பியுள்ளனர்.

நாங்கள் இருக்கும் பகுதியில் விமானம் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கிரிமியா மாகாணத்திலிருந்து மாஸ்கோ வரை ரயிலில் பயணித்து, பின்னர் அங்கிருந்து துபாய் வழியாக கோவை வந்துள்ளோம். எங்களது மருத்துவப் படிப்பு மொத்தத்திற்கும் ரஷ்யாவில் ரூ. 35 லட்சம் வரை செலவாகும்.

ஆனால் இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.25 லட்சம் வரை செலவாகிறது. இதனால் தான் அங்கு படிக்கச் சென்றோம். தற்போது ஆன்லைன் மூலமாக எங்களுக்கு வகுப்புகள் நடைபெற உள்ளது. இவ்வாறு மாணவர்கள் கூறினர்.

Views: - 734

0

0