விசிக – விஜய் சமரசம்? மாநாட்டின் மாயாஜாலம்!

Author: Udayachandran RadhaKrishnan
28 அக்டோபர் 2024, 7:16 மணி
Vijay Plans
Quick Share

தமிழக அரசியலில் ஆளுங்கட்சி மீது நேரடியாக, அச்சமோ பதட்டமோ இல்லாமல் விஜய் எறிந்த பிரம்மாஸ்திரம் அரசியலை ஒரு ஆட்டு ஆட்டியுள்ளது.

தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜயின் தவெக கட்சியின் முதல் மாநாடு நடந்து முடிந்துள்ளது. கட்சிக் கொடி ஏற்றுவதில் புதுமையை புகுத்தியிருந்த நடிகர் விஜய், கட்சியின் கொள்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். தவெக கட்சியின் கொள்கை வழிகாட்டிகள், கொள்கை எதிரி, அரசியல் எதிரி, 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் வியூகம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் நடந்தது.
நடிகர் விஜய், மாநாட்டுக்கு வந்து, திடலில் இருந்த ரசிகர்களைச் சந்தித்தார். அதன்பின், கட்சியின் கொள்கைகளை விளக்கும் ஒரு காணொளி திரையிடப்பட்டது. அதில் கட்சி ‘மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கைகள்’ கொண்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பின், விஜய் தனது கட்சியின் கொடியை பட்டன் அழுத்தி ஏற்றினார். இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசியல் களத்தில் ஓர் அரசியல் தலைவராக தவெக மாநாட்டில் தனது கன்னிப் பேச்சை விஜய் தொடங்கினார். அவர் பேசுகையில், “அரசியல் பாம்பு, அதை பயமறியா ஒரு குழந்தையை போலக் கையில் பிடித்து விளையாடுகிறேன்.

அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பாம்பைக் கண்டு எனக்கு பயமில்லை. அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, போர்க்களம். சீரியஸாக சிரிப்போடு எண்ணங்களை செயல்படுத்துவதுதான் என் வழி. கவனமாகக் களமாடவேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா. அரசியலும் மாறவேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும், இன்று இருக்கும் தலைமுறையை புரிந்துகொண்டால்தான் சுலபமாக முன்னெடுத்துச் செல்லமுடியும். மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப்போவதில்லை. ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை.
தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள், என்றார்.

தனது செயல்திட்டத்தின் முக்கிய விஷயமாக, அதிகாரப் பகிர்வைக் கூறினார் விஜய். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம். செயல்தான் முக்கியம். சமரசம், சண்டை நிறுத்தத்திற்கு இடமில்லை. ஆனால் வெறுப்பு அரசியலுக்கும் இடமில்லை. ஆரம்பத்தில் தானும் தனக்கு எதற்கு அரசியல் என்றுதான் நினைத்ததாகவும் ஆனால், அபப்டி நினைப்பது சுயநலம் என்றும் தெரிவித்தார். என்னை, வாழவைத்த மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்று யோசித்தபோது, அதற்குக் கிடைத்த விடை அரசியல்,என்றார்.

கட்சியின் கோட்பாடு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று கூறிய அவர், கட்சியின் குறிக்கோள், மதம், சதி, நிறம், இனம், மொழி, பாலினம், பொருளாதாரம் ஆகியவற்றால் தமிழக மக்கள் சுருங்கிவிடாமல், அனைத்து மக்களின் தனிமனித சமூகப் பொருளாதார அரசியல் உரிமைகளை நிலைநிறுத்திச் சமநிலைச் சமூகம் உருவாக்குவது’, என்றார்.
மேலும்,ஆட்சி, சட்டம், நீதி, அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்தி மக்களின் அடிப்படைச் சுதந்திரத்தைப் பறிக்கும் மாநில ஒன்றிய ஆட்சியாளர்களின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து ஜனநாயக உரிமைகளை நிலை நாட்டுவது,கட்சியின் கொள்கை.

விகிதாச்சார இடப்பங்கீடு தான் உண்மையான சமூகநீதி. சாதி ஒழியும் வரை அனைத்துப் பிரிவினருக்கும் அனைத்துத் துறையிலும் விகிதாச்சாரத்தின் படி பிரதிநிதித்துவம் வழங்குவது,” கட்சியின் கொள்கை. பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகளுக்குச் சமத்துவம் வழங்கப்படும்.

அதேபோல, மாநிலத்தின் தன்னாட்சி உரிமைகளை மீட்பதும், தமிழ் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையைப் பின்பறுவதும் கட்சியின் கொள்கை. திராவிட மாடல் என்று கூறி ஊழல் செய்யும் அரசியலைக்கும், தமிழகத்தை சுரண்டும் குடும்ப அரசியலை வெறுப்பதாகவும். அதுதான் தங்கள் முதல் எதிரி என்றும் அவர் ஆணித்தரமாக பேசினார்.

மாநாட்டிற்கு காலை முதலே ஆயிரக்கணக்கில் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
திடலில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டேங்குகளில் மதியம் 12 மணியளவிலேயே குடிநீர் தீர்ந்துவிட்டது. ஒரு குடிநீர் பாட்டில் வாங்க வேண்டுமென்றாலும், திடலுக்குள் இருந்து குறைந்தது 1-2 கி.மீ வரவேண்டும். மாநாட்டுத் திடலில் வைக்கப்பட்டிருந்த டேங்குகளிலும் குடிநீர் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும், அந்தப் பகுதியைச் சுற்றிப் பெரியளவில் கடைகள் இல்லாததால், உணவு கிடைப்பதும் ஒரு பிரச்னையாக இருந்தது.

மாநாட்டிற்கு வந்துள்ளவர்களில் பலர் மயக்கம் அடைந்துள்ளனர். மிகக் கடுமையான வெயில், குடிநீர் மற்றும் உணவு கிடைப்பதில் சிக்கல், அதீத கூட்டம், இருக்கைகளின் போதாமை ஆகியவற்றால் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டனர். சுமார் 75,000 இருக்கைகள் வரை மாநாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், லட்சக்கணக்கான மக்கள் வந்துள்ளனர்.

மாநாட்டிற்காக அமைக்கப்பட்டிருக்கும் கார் நிறுத்துமிடங்கள் முழுமையாக நிறைவடைந்துவிட்ட நிலையில், புதிதாக வாகனங்கள் நிறுத்தப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மாநாட்டிற்கு வரும் மக்கள் கூட்டத்தால் சுமார் 10கி.மீ தொலைவுக்குக் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

விஜய் கட்சி மாநாடு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், விஜய்யின் புதிய முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், விஜய் தனக்கு நீண்டநாள் நண்பர், அவரைத் தனக்குச் சிறுவயதிலிருந்தே தெரியும் என்று கூறினார். நான் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் அவருடையது தான்,என்றார்.

‘75 ஆண்டுகால திராவிட சித்தாந்தத்துக்கு மாற்றாகவும் சவாலாகவும் புதிய கட்சிகள் அமையுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, அவர் கூறியதாவது:
எந்தக் கட்சியும் வரக்கூடாது என்று சட்டம் இல்லை, யார் வேண்டுமானாலும் கட்சி துவங்கலாம், அவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கிறது.

இந்த 75 ஆண்டுகாலமாக வேறெந்த கட்சியும் துவங்கப்பட்டதில்லை என்று கூற முடியாது. பல கட்சிகள் வந்திருக்கின்றன, பல கட்சிகள் காணாமல் போயிருக்கின்றன. மக்கள் பணி தான் முக்கியம். மக்கள் யாரை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது மிக முக்கியம். கொள்கைகள் தான் முக்கியம்,என்றார்.

அதே நேரத்தில் விஜய் தி.மு.கவை நேரடியாகவே தாக்கியதால் அதிமுகவினர் உற்சாகமடைந்துள்ளனர். இதுகுறித்து எச் ராஜா கூறும் போது: விஜயின் கொள்கைகளில் தடுமாற்றம் உள்ளது. சரியான பாதையை அவர் இன்னும் தேர்வு செய்யவில்லை, என்றார். முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் கூறும் போது: திமுகவை விஜய் எதிர்ப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் பாஜகவை பற்றி புரிதல் இல்லாமல் அவர் பேசியது வருத்தம் அளிக்கிறது, என்றார்.

இது குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறியதாவது: இந்த வானத்து மீதினிலே..
வண்ணத்து அழகினிலே… தமிழ் அன்னைக்கு பெருமை சேர்த்து கட்அவுட் வைத்தது மட்டும் அல்லாமல். தமிழ் அன்னையின் கன்னத்திலே அவர் தமிழ் பால் குடித்தது போன்றுபொங்கி எழுந்து உணர்ச்சிவசமாக பேசியது அனைவரையும் கவர்ந்தது. எதார்த்தமான பேச்சு,ஏற்றமான வார்த்தை,.எம்ஜிஆர் திமுகவுக்கு எதிராக பேசியது போலவே இருந்தது. வள்ளுவன் தண்ணை வான் புகழ் கொண்ட தமிழ்நாடு என்பதை உணர்த்தும் வகையில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்போவா என் உணர்த்தும் தத்துவத்தை முன்மொழிந்தது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

ஆனால் அவர் சொன்ன லிட்டில் ஸ்டோரி சங்க காலத்தில் பாண்டிய மன்னன் கதையை எடுத்துரைப்பதாகவே இருந்தது. இளம் தலைமுறையினருக்கு சங்க கால தமிழை சங்கநாதமாக ஒலித்திருக்கிறார் விஜய். முன் வைத்த காலை பின் வைக்காத மனதிடம் அவரிடம் குடி கொண்டிருப்பதை காணப்படுகிறது. முதலில் வாழ்த்து தெரிவித்த சீமான், தற்போது பின்னங்கால் பிடறி அடிக்கும் அளவுக்கு அவர் கொள்கை வேறு எங்கள் கொள்கை வேறு என ஓடுகிறார்.

இதையும் படியுங்க: உயிர் போயிடுச்சு.. இரங்கல் சொல்லாத விஜய் வருங்கால முதல்வரா? புஸ்ஸி ஆனந்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்!

அதே நேரத்தில் விஜய் சொல்லியும் கேட்காமல் தொண்டர்கள் பலர் குடித்துவிட்டு உருண்டதும் மாநாட்டில் மறக்க முடியாத நிகழ்வாக உள்ளது. காசு, பணம், குவாட்டர் ,கோழி பிரியாணி கொடுக்காமல் கட்டுக்கடங்காது கூட்டத்தை விஜய் கூட்டியது, திமுக ,அதிமுகவை வியப்படைய செய்துள்ளது. ஆனால் வெறுப்பு அரசியல் அல்ல, எதிர்ப்பு அரசியலை திமுக மீது அவர் பாய்ச்சி இருப்பது இளைஞர்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்தி உள்ளது. தன்வீடு ,தன்பொண்டு, தன்மக்கள் என்று வாழும் அரசியல் தலைவர்கள் இடையே நானும் ஒரு தொண்டன், உங்களில் ஒருவன் என அவர் பேசியது மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழத்தியுள்ளது. வழக்கமாக அவர்களே ,இவர்களே என நேரத்தை வீணடிக்காமல் விஷயத்தைப் பேசி உள்ளார்.

அரசியலில் குழந்தை என நினைத்த தலைவர்கள், அவர் சாதாரண குழந்தை அல்ல, சர்க்கஸ் குழந்தை என தற்போது வியப்பில் இருந்து மீளவே இல்லை. அதே நேரத்தில் தனது தலைமையில் தான் கூட்டணி என்ற அவர் கூறியது வாழைப்பழத்தில் ஊசியை நுழைப்பது போல் உள்ளது. ஆட்சியில் பங்கு என்று விசிகாவை மறைமுகமாக கூட்டணிக்கு அவர் அழைத்துள்ளது அனைவருக்கும் புரிகிறது. இதனால் விசிக இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஊழலை அழிக்க விஜய் எடுத்துள்ள புதிய அவதாரம் அரசியல்வாதிகளுக்கு ஒரு சிம்ம சொப்பனமாக மாறியுள்ளது. என்று தனியும் இந்த ஊழலின் மோகம் என்ற வார்த்தைக்கு புதிய அத்தியாயம் கிடைத்துள்ளது.

வங்கத்து சிங்கமாய், வரலாற்று தங்கமாய் அவர் அரசியலில் இடம் பிடிப்பாரா.. தொண்டர்கள் அவருக்கு வடம் பிடிப்பார்களா … மக்கள் மனதில் சிம்மாசனம் கொடுப்பார்களா…என்பது 2026 தேர்தலில் வெளிச்சம் ஆகும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

  • VIJAAAA காமராஜரும், விஜயும் ஒன்றா? எஸ்.வி.சேகர் சொன்ன லாஜிக்!
  • Views: - 125

    0

    0

    மறுமொழி இடவும்