பட்ஜெட்டில் எங்களை கைவிடுவதா…? கொதிக்கும் அரசு ஊழியர்கள்… மறுபுறம் கொந்தளிக்கும் அதிமுக, பாஜக!

Author: Babu Lakshmanan
20 March 2023, 9:17 pm
Quick Share

2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வதற்கு முன்பு வரை 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்றுதான் அனைவருமே எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்ற வாக்குறுதி தவிர மற்றவை கண்டுகொள்ள படவே இல்லை என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

2021ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் தேதி திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில்
அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், “நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும்
1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும்”என்று அறிவித்தார்.

அதேபோல அனைத்து மாநகரப் பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற இன்னொரு கவர்ச்சி வாக்குறுதியையும் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டபோது ஸ்டாலின் அளித்தார்.

இந்த இரண்டு வாக்குறுதிகளும் திமுகவின் வெற்றியை அப்போதே உறுதி செய்வதாக அமைந்துவிட்டது என்றே சொல்லவேண்டும்.

அதேபோல திமுக அளித்த இன்னும் சில முக்கிய வாக்குறுதிகளும் உண்டு.

  • அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
  • இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன் அளவீடு செய்யப்படுவதால் அதிகமாக மின் கட்டணம் வசூலிப்பதை தவிர்க்கும் வகையில் மாதம் ஒருமுறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டு வரப்படும். இதனால் இரண்டு மாதங்களுக்கு ஆயிரம் யூனிட்டுகளுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்துவோர் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரையில் பயன் பெறுவர்.
  • மாதந்தோறும் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ஒரு சிலிண்டருக்கு மட்டும் எரிவாயு மானியம் 100 ரூபாய் வழங்கப்படும்.
  • அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு
    4 ரூபாயும் குறைக்கப்படும்.

அதேநேரம் திமுக ஆட்சி அமைத்ததும் மாநகரப் பேருந்துகளில் மகளிர் இலவசப் பயணம் மேற்கொள்ளும் திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டார். அப்போது எல்லாம் மாநகர பேருந்துகளிலும் தங்கள் விருப்பம் போல் பெண்கள் பயணம் செய்து விட முடியாது என்பதை அறிவுறுத்தும் விதமாக சாதாரண வெள்ளை போர்டு கொண்ட மாநகர பேருந்துகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல் விலையை திமுக அரசு குறைக்கவில்லையே? என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடமும் எழுந்தபோது 3 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல் விலையில் மட்டும் திமுக அரசு ஒரு லிட்டருக்கு மூன்று ரூபாயை குறைத்தது. டீசல் விலையை குறைக்கவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் வலுத்தபோதும் கூட அதை இன்று வரை திமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நிலையில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
பிரச்சாரத்தின்போது குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன்னு சொன்னீங்களே, அது என்ன ஆச்சு? அப்படி கொடுத்தா திமுக ஆட்சிக்கு வந்த மாதங்களை கணக்கில் கொண்டு 22,000 ரூபாயை குடும்பத் தலைவிகளுக்கு வழங்கவேண்டும்” என்ற கோரிக்கையை அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முன்னெடுத்தார். அதேபோல மாநில பாஜக தலைவர் அண்ணாமலையும் உரக்க குரல் கொடுத்தார்.

இதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. திமுக அரசு 2023-24க்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்குவது பற்றி அறிவிக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலினும் தேர்தல் பிரச்சாரத்தில் உறுதி அளித்தார்.

அதை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக, வரும் நிதி ஆண்டில் ஏழாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைப்பார் என்றும் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார்.
இந்த அறிவிப்புடன் கூடவே ஒரு கண்டிஷனும் போடப்பட்டுள்ளது. அதாவது தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இது கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகி இருக்கிறது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுபற்றி கூறும்போது, “திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் என்று சொல்லிவிட்டு இப்போது தகுதியான குடும்ப தலைவிக்கு மட்டும் வழங்கப்படும் என்கிறார்கள். 1000 ரூபாய் உரிமைத்தொகையை பெறுவதற்கான தகுதி என்னவென்று தெரிவிக்கவில்லை. 7000 கோடி ரூபாயை ஒதுக்கிவிட்டு 2.15 கோடி பேருக்கு 1000 ரூபாய் கொடுக்க முடியுமா?” என்று காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மாநில பாஜக தலைவர் அண்ணாமலையோ தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29000 ரூபாயாக வழங்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று மடைமாற்றாமல், தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்றும் தமிழக பாஜக சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை என்று கூறிவிட்டு இப்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என சூடாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.

ஆயிரம் ரூபாய் உரிமை தொகை அறிவிப்பு ஒரு பக்கம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும் நிலையில் அரசு ஊழியர்களோ மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருப்பது தெரிகிறது.

அதற்குக் காரணம் திமுக தனது தேர்தல் அறிக்கையில் மட்டுமல்லாமல் அதற்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் எழுப்பி வரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக தலைவர் ஸ்டாலின் ஆதரித்து பேசி வந்ததுதான். இதனால் திமுக ஆட்சி அமைத்ததும் தங்களுடைய கோரிக்கையை முதலமைச்சர் ஏற்று கொண்டு விடுவார் என்றே அரசு ஊழியர்கள் பெரிதும் நம்பினர்.

ஆனால் திமுக அரசு மூன்றாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து விட்டபோதும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து ஒரு சிறிய அறிகுறி கூட தென்படவில்லை.

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், குறைந்தது 30 ஆண்டுகள் பணியில் இருந்த அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும்போது, அவர்கள் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைக்கும். ஆனால், 2003-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், பணி ஓய்விற்குப் பின் கிடைக்கும் ஓய்வூதியம் மிகக் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர் கூறும்போது, “பழைய ஓய்வூதிய திட்டத்தை மறுபடியும் கொண்டு வரவேண்டும் என்பதற்காக முதலமைச்சரை இதுவரை ஆறு முறை சந்தித்து பேசி விட்டோம். ஆனால் எந்த பயனும் கிடைக்கவில்லை. திமுக அரசு எப்போதுமே தனது ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்களுக்கு அனுசரணையாகத்தான் நடந்து கொள்ளும். ஆனால் இப்போது ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை. இந்த திட்டத்தை கொண்டு வந்தால் ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 50 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும் என்று ஒரு காரணத்தை சொல்கிறார்கள்.

அதேநேரம், கனிமவளங்களை எடுத்துப் பயன்படுத்துவதில் அரசுக்கு வரவேண்டிய வருவாய் சரியாக வருவதில்லை. அதை முறைப்படுத்தி அந்த வருவாய் மூலம் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எங்களிடம் நம்பிக்கையுடன் தெரிவித்து இருந்தார். ஆனாலும் எங்களது வேதனை தொடர்கிறது” என்று குறிப்பிட்டனர்.

தமிழகத்தில் சுமார் 14 லட்சம் அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பொதுத் தேர்தல் பணியின்போது இவர்களில் பெரும்பான்மையானோர் மறைமுகமாக திமுகவுக்கு ஆதரவாக பணியாற்றுபவர்கள் என்பதால் அவர்களுடைய கவலையும், கோபமும் 2024 நாடாளுமன்றத் தேர்தல், 2026 சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெளிப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Views: - 119

0

0