ஆளுநருக்கே பாதுகாப்பில்லை… தமிழக காவல்துறை மீது விழுந்த கரும்புள்ளி… எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
20 April 2022, 2:15 pm

சென்னை : ஆளுநரின் பாதுகாப்பு வாகனம் தாக்க முயற்சி செய்த சம்பவம், தமிழக காவல்துறையின் மீது விழுந்த கரும்புள்ளி என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கேள்வி – பதிலுக்கான நிகழ்வு நடைபெற்றது. அப்போது, ஆளுநர் மீது தாக்குதல் நடைபெற்றது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை என்று அதிமுக உறுப்பினர்கள் முழுக்கங்களை எழுப்பினர்.

அதிமுக உறுப்பினர்கள் அமைதி காக்குமாறு சபாநாயகர் அப்பாவு கோரிக்கை விடுத்தார். ஆனால், அதனை ஏற்க மறுத்து தொடர்ந்து முழக்கமிட்ட அதிமுக எம்எல்ஏக்கள், அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இவர்களை தொடர்ந்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.

பின்னர் அதிமுக எம்எல்ஏ.,க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது :- நேற்று ஆளுநர் மயிலாடுதுறையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அவரது பாதுகாப்புக்கு சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசியும், கருப்பு கொடிகளை வீசியும் தாக்கியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அவர்களை போலீஸ் அப்புறப்படுத்தாதது ஏன்? இது தமிழக காவல்துறை மேல் விழுந்த கரும்புள்ளி ஆகும். நான் முதல்வராக இருந்தபோது ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டியபோதும் சட்டம் ஒழுங்கு முழுமையாக காக்கப்பட்டது. ஆனால், தற்போது ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாதபோது சாமானிய மக்களின் நிலை குறித்து கேள்வி எழுகிறது. தமிழக காவல்துறை ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையாக போற்றப்பட்ட நிலையில், இன்று அரசின் கைப்பாவையாக இருக்கிறது, என்று கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!