நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் : விலை குறைப்பை ஈடுசெய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை

Author: Babu Lakshmanan
31 May 2022, 11:17 am
Quick Share

தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் சில்லரை விற்பனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்பை வழங்கக் கோரி இன்று ஒரு நாள் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த 21ம் தேதி பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் கலால் வரியை மத்திய அரசு தலா 6 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை குறைத்தது. இதனால் சில்லரை விற்பனையாளர்கள் சேமிப்பு தொட்டியில் வரி செலுத்தி வாங்கி வைத்திருக்கும் சரக்குகளால் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

எனவே, விலை குறைப்பால் ஏற்பட்ட இழப்பை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கக் கோரி இன்று தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்கத்தினர் அகில இந்திய அளவில் இன்று ஒரு நாள் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கரூரை அடுத்த ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் கார்பரேசனுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து கரூர், திண்டுக்கல், சேலம், மதுரை, காஞ்சிபுரம், நாகை உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 500 டேங்கர் லாரிகளில் சில்லரை விற்பனைக்காக பெட்ரோல், டீசல் அனுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான டேங்கர் லாரிகளுக்கு மட்டும் எரிபொருள் நிரப்பப்பட்டு அனுப்பப்படும் நிலையில், பெட்ரோல் நிலையங்களுக்கு சொந்தமான டேங்கர் லாரிகள், ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் டேங்கர் லாரிகளில் கொள்முதல் நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

டெர்மினலுக்கு முன்பாக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கத்தினர் காத்திருப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நிர்வாகிகளும், பெட்ரோல் பங்க் உரிமையாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.

Views: - 544

0

0