தமிழக மின்வெட்டுக்கு யார் காரணம்…? செயற்கை மின்வெட்டை உண்டாக்குகிறதா தமிழக அரசு.? நெருக்கடியில் முதலமைச்சர் ஸ்டாலின்…!!

Author: Babu Lakshmanan
23 April 2022, 7:00 pm
Quick Share

கடும் மின்வெட்டு

தமிழகத்தில் கோவை, கரூர், சிவகங்கை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, தென்காசி, நெல்லை, மயிலாடுதுறை உள்ளிட்ட10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வாழும் சுமார் 2 கோடி மக்கள் அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டால் கடந்த 10 நாட்களாக பெரும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கோடை வெயிலின் உக்கிரம் கடுமையாகி வரும் நிலையில் தினமும் 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையிலான மின்வெட்டு இந்த மாவட்டங்களில் சர்வ சாதாரணமாக காணப்படுகிறது, என்கிறார்கள்.

ஏராளமான கிராமங்களில், தினமும் 10 மணிநேர மின்வெட்டு வரை உள்ளது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. இது தமிழக மக்களுக்கு மிகவும் சோதனையான காலம்தான்.

இதன் காரணமாக தொழில் பாதிப்பு, வேலை இழப்பு, தேர்வுக்காக மாணவ- மாணவிகள் இரவு நேரத்தில் படிக்க முடியாமல் அவதி, குழந்தைகள் முதல் முதியோர் வரை தூக்கம் இன்றி தவிப்பு, குடும்பத் தலைவிகளுக்கு வீட்டு வேலைகளில் கூடுதல் சுமை என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் உருவாகி இருக்கின்றன.

இதனால் கொந்தளிப்புக்கு உள்ளான பொதுமக்கள் தமிழக மின் வாரியத்துக்கு எதிராக ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிகழ்வுகளையும் பரவலாக பார்க்க முடிகிறது.

அமைச்சர் விளக்கம்

இதுபற்றி மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சமூக வலைதளத்தில்
‘மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்க வேண்டிய 750 மெகாவாட் கிடைக்காததால்தான் மின் வெட்டு நிலவுகிறது. அதை சீர் செய்ய, மின் வாரியத்தின் உற்பத்தியை அதிகரிப்பதோடு, தனியாரிடம் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது’ என்று, தெரிவித்தார்.

மேலும் சட்டப்பேரவையில் விளக்கமளித்த, அவர் “நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரியை மத்திய அரசு வழங்கவேண்டும். ஆனால் 50 ஆயிரம் டன்னுக்கு குறைவாகவே வழங்குகிறது” என்று குறையும் கூறினார்.

கடிதம்

இந்நிலையில் மின்வெட்டு தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் “ஒடிசாவில் உள்ள தல்சர் சுரங்கங்களிலிருந்து போதுமான நிலக்கரி தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்க வேண்டியது அவசியமானது. தமிழகத்தின் தொழிற்சாலைகளுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50 ஆயிரம் டன் அளவிற்கு மட்டுமே உள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கோடை கால மின் தேவையைப் பூர்த்தி செய்திட நிலக்கரி உற்பத்தி போதுமானதாக இருந்தாலும், ரயில்களில் ரேக்குகளின் பற்றாக்குறை காரணமாக, அது துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதில்லை என்று தெரியவந்துள்ளது. இதன் விளைவாக, தமிழகத்தில் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு கவலை கொள்ளத்தக்க அளவிற்கு எட்டியுள்ளது.

உள்நாட்டு நிலக்கரிப் பற்றாக்குறை காரணமாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தடையற்ற மின் விநியோகத்தைப் பராமரிப்பதற்காக, அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை உள்ளது. இது கொரோனா பெருந்தொற்றிற்குப் பிந்தைய பொருளாதாரத்தைக் கணிசமாகப் பாதிக்கும். இந்த நிலை உடனடியாக கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில், எரிபொருள் வழங்கல் ஒப்பந்தத்தின்படி, நாளொன்றுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி வழங்குவதை உறுதி செய்திட நிலக்கரி அமைச்சகத்திற்கு தாங்கள் உத்தரவிடவேண்டும். இந்த நடவடிக்கையால் மட்டுமே தமிழகத்தில் தடையில்லா மின் விநியோகத்தைப் பராமரிக்க முடியும். இந்த விஷயத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

குற்றச்சாட்டு

ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியோ, தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்வெட்டுக்கு, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையே முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

“தமிழகத்திற்கு தினமும் 17,100 மெகாவாட் வரை மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் 13,100 மெகாவாட்தான் உற்பத்தியாகிறது. இதற்கு, தமிழக அரசு, மின்வாரியம் தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்யாததாலும், மத்திய தொகுப்பில் இருந்து உரிய நிலக்கரியை கேட்டு பெறாத காரணத்தினாலும் மின்உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அரசின் தவறான முடிவுகள்தான் காரணம். கோடை காலம் வரும்போது மின் தேவை அதிகரிக்கும். இந்த முன்யோசனையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். அதிமுக ஆட்சி காலத்தில் போதிய அளவு மின்சாரம் இருப்பு வைத்திருந்தோம். கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் உற்பத்தி செய்து வழங்கினோம். கோடையில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக இருந்தது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் மின்வெட்டு நிலவியது. இப்போதும் திறமையில்லாத ஆட்சியால் முறையாக மின்சாரம் வழங்கப்படவில்லை” என்று அவர் திமுக அரசை சாடினார்.

செயற்கை மின்வெட்டா..?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது,“ மத்திய அரசின் மின்சாரம் வரவில்லை என, அமைச்சர் செந்தில் பாலாஜி பொய் கூறி வருகிறார். இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 777 மில்லியன் டன். 2.2 கோடி டன் நிலக்கரி கையிருப்பில் உள்ளது. இது ஒரு மாதத்திற்கு போதுமானது.

தமிழகத்தில் செயற்கையாக மின்வெட்டை ஏற்படுத்தி அதன் காரணமாக தனியார் மின்சாரத்தை கொள்முதல் செய்து லாபம் பார்ப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை ஆகும். 2021 மார்ச் முதல் 2022 பிப்ரவரி வரை மட்டும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

Annamalai Protest - Updatenews360

சில நேரங்களில் தனியாரிடம் இருந்து கிலோ யூனிட்டை 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்ததை எல்லாம் நாம் பார்த்திருக்கிறோம். இந்த முறையும் செயற்கையாக மின்தட்டுப்பாட்டை ஏற்படுத்துகிறார்கள். தமிழகத்துக்கு ஒரு நாளைக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார். 72 ஆயிரம் டன் நிலக்கரி தமிழகத்துக்கு எப்போது தேவை? தமிழகத்தில் இருக்கக்கூடிய 5 மின் அனல் மின் உற்பத்தி நிலையங்களும் 85 சதவீதம் மின் உற்பத்தி செய்யம்போதுதான் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும்.

ஆனால் தமிழகத்தில் மின்சாரம் தயாரிக்கும் மின் உற்பத்தி ஆலைகளின் திறன் 57 சதவீதமாக மட்டுமே உள்ளது. அதை அதிகரிப்பதற்கான எந்த முயற்சியையும் கடந்த 11 மாதங்களில் திமுக அரசு எடுக்கவில்லை. தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக விசாரணை கமிஷன் வைத்து முழு விசாரணை நடத்த வேண்டும். மின்வாரியத்தின் செயல்பாடுகளை 2006 முதல் தற்போதுவரை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.

சுத்தப் பொய்
 
மேலும் இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில், “செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்கி தமிழக மக்களை துயரத்தில் தள்ளுவதில் வல்லவர்கள் திமுக. 2017லிருந்து இல்லாத மின் தட்டுப்பாடு தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை உள்ளதன் காரணத்தை கண்டறிந்து முதலமைச்சர் மக்களுக்கு விளக்கவேண்டும்.

Annamalai Stalin - updatenews360

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டதால் மின் வினியோகம் தடைபட்டதாக தங்களது குடும்ப நாளிதழின் மூலம் கூறுவது சுத்தப் பொய். TTPSல் ஏப்ரல் 20ம் தேதி அன்று 5 நாட்களுக்கு நிலக்கரி இருப்பு இருந்தது. பற்றாக்குறை எங்கே?

ஏப்ரல் 20-ம் தேதி அன்று ஒரே நாளில் 4 யூனிட்டுகள் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆலையை இயக்க 5 நாட்களுக்கு இயக்க போதுமான நிலக்கரி கையிருப்பில் இருந்த நிலையில் TTPS-ல் உள்ள 3 யூனிட்டுகள் ஒரே நாளில் நிறுத்தப்பட்டதன் காரணத்தை முதலமைச்சர் விளக்குவார் என்று நம்புவோமாக” என கேள்வியும் எழுப்பியுள்ளார்.

தனியாரிடம் மின்சாரம்

பாரதிய மஸ்துார் சங்க மின் வாரிய பிரிவின் அகில இந்திய தலைவர் முரளி கிருஷ்ணன் கூறும்போது “மத்திய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் கிடைக்கவில்லை என்பது முற்றிலும் தவறு. தமிழக மின் உற்பத்தி, சில நாட்களாகவே சிலரால் திட்டமிட்டு தடை செய்யப்படுகிறது. எதற்காக இப்படி செயற்கையாக மின் வெட்டை ஏற்படுத்த வேண்டும்? கோடையில் மின் தேவையை சமாளிக்க, 3000 மெகாவாட் வெளியில் இருந்து கட்டாயம் வாங்கியாக வேண்டும் என்று, மாநில மின் வாரிய தலைமை நிர்வாகி அறிவித்துள்ளார்.

Chapter 3 — Enabling Modernization of the Electric Power System |  Department of Energy

ஏற்கனவே, உதய் மின் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த முயன்றபோது, மின் வாரியத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்று சொல்லி எதிர்த்தது திமுகதான். ஆனால், ஆட்சிக்கு வந்ததும், தனியார் வாயிலாக மின்சாரம் வாங்குகிறது. எல்லா விஷயங்களையும் போல, இந்த விஷயத்திலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது” என்று குற்றம் சாட்டினார்.

திட்டமிடல் இல்லை

சமூக ஆர்வலர்களும் , அரசியல் விமர்சகர்களும் இதுபற்றி கருத்து தெரிவித்தபோது, “திமுக ஆட்சிக்கு வந்ததுமே மின்வெட்டும் சேர்ந்துகொண்டு விடுகிறது. கடந்த ஜூன் மாதம் மாநிலம் முழுவதும் பரவலாக மின்வெட்டு இருந்தது. அப்போது அதற்கு காரணம் அணில்கள்தான் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். பிறகு அதிமுக ஆட்சியில் பராமரிப்பு பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாததுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். பொதுவாகவே திமுக அரசிடம் பருவ மழை மற்றும் கோடை காலங்களில் சரியான திட்டமிடல் இல்லை என்பதை உணர முடிகிறது.

கடந்த நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த தொடர் கனமழையால் சென்னை நகரமும் அதன் புறநகர்ப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியபோது முந்தைய அரசைக் குற்றம் சாட்டினார்கள். ஆனால் ஜூன், ஜூலை மாதமே மழை நீர், வெள்ளம் தேங்காமல் இருப்பதற்கு சென்னை மாநகராட்சி முன் கூட்டியே தேவையான எந்த நடவடிக்கையையும் எடுத்ததாக தெரியவில்லை. அப்படி செய்து இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் தடுத்திருக்கலாம். சென்னை நகருக்குள் பல இடங்களில் மக்கள் பணம் கொடுத்து படகில் சவாரி செய்த காட்சிகளும் அரங்கேறி இருக்காது.

power cut 4 - updatenews360


தற்போதும் மார்ச் முதல் ஜூன் மாதம் முடிய கோடை வெயிலின் தாக்கத்தால் மக்களின் மின் தேவை அதிகரிக்கும் என்பதை திமுக அரசு முன்கூட்டியே உணர்ந்து செயல்பட்டதாக தெரியவில்லை. இப்போதுதான் விழித்து எழுந்ததுபோல எங்களுக்கு தினமும் 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்று மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறார்கள். இதை கடந்த பிப்ரவரி மாதமே கேட்டிருக்க வேண்டும். ஆனால் இன்னும் மூன்று மாதங்களுக்கு கோடை காலம் இருக்கும் என்பதாலும் தொடர் மின்வெட்டும் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாலும் மத்திய அரசு மீது பழிபோடுவதற்காக இப்படி திமுக அரசு செய்கிறதோ அல்லது தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை கொள்முதல் செய்ய இப்படி நடந்து கொள்கிறதோ
என்ற சந்தேகமும் எழுகிறது.

எல்லாவற்றுக்கும் மத்திய அரசு மீதே குறை கூறுவது ஏற்புடையதும் அல்ல. இதில் மத்திய அரசு மீது என்னதான் பழி சுமத்தினாலும் தமிழக அரசு ஏன் உஷாராக இல்லை என்ற கேள்விதான் முதலில் எழும். ஏனென்றால் ஏற்கனவே 2006 முதல் 2011வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கடுமையான மின்வெட்டை தமிழக மக்கள் சந்தித்துள்ளனர். இத்தனைக்கும் அப்போது எதைக் கேட்டாலும் செய்து தரும் திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிதான் மத்தியில் இருந்தது” என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

Views: - 565

0

0