வடமாநிலத்திவர்களை குறி வைத்து தாக்குதல்? வைரலாகும் வீடியோ : டிஜிபி சைலேந்திரபாபு விளக்கம்!!

Author: Udayachandran RadhaKrishnan
3 March 2023, 11:57 am

தமிழகத்துக்கு வேலைக்கு வந்துள்ள பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று 2 வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் பரவின.

இதுகுறித்து கவலை தெரிவித்த பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, தங்கள் மாநில தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பீகார் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், அந்த வீடியோக்களுக்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் 2 போலி வீடியோக்கள் பரவி வருகிறது.

அந்த வீடியோக்கள் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுவதுபோல காட்டப்பட்டுள்ளன. அந்த வீடியோக்கள் தவறானவை, போலியானவை. இரு வீடியோக்களும் ஏற்கனவே முன்பு நிகழ்ந்த இருவேறு சம்பவங்களை திரித்து வெளியிடப்பட்டுள்ளன.

இதில் ஒரு வீடியோ திருப்பூரில் பீகார் தொழிலாளர்கள் இரு பிரிவாக மோதிக் கொண்டது ஆகும். மற்றொரு வீடியோ கோவையில் உள்ளூர்வாசிகள் மோதிக் கொண்டது ஆகும். இதுதான் உண்மை.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது. பொதுமக்கள் யாரும் போலியான வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!