தஞ்சை தேர் விபத்தில் 11 பேர் பலி… மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நிவாரணம் அறிவிப்பு.. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!

Author: Babu Lakshmanan
27 April 2022, 10:28 am
Quick Share

தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ களிமேடு கிராமத்தில்‌ மின்சார விபத்தில்‌ உயிரிழந்த குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகளின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது :- தஞ்சாவூர்‌ மாவட்டம்‌, களிமேடு கிராமத்தில்‌ இன்று அதிகாலை நடைபெற்ற தேர்‌ திருவிழாவில்‌ எதிர்பாராத விதமாக தேர்‌ மின்கம்பியில்‌ உரசியதால்‌ ஏற்பட்ட விபத்தில்‌ 11 பேர்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டனர்‌ என்ற துயரமான செய்தியினைக்‌ கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன்‌.உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

மேலும்‌, இவ்விபத்தில்‌ 15 நபர்கள்‌ தற்போது சிகிச்சையில்‌ உள்ளதாக அறிகிறேன்‌, அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும்‌ விபத்து பகுதியில்‌ மிட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும்‌ மாவட்ட நிர்வாகத்திற்கும்‌, காவல்‌ துறைக்கும்‌ உத்தரவிட்டுள்ளேன்‌.

இந்த விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தாருக்கு தலா ஐந்து இலட்சம்‌ உடனடியாக முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்‌, எனக் குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த இரங்கல் தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் முன்மொழிந்தார்

அதேவேளையில், தஞ்சையில் பலியான 11 பேரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைந்து மீண்டு வர வேண்டுவதாக கூறினார்.

மேலும், உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,”தஞ்சாவூர்,களிமேடு அப்பர் கோவில் தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், சிகிச்சை பெற்று வருவோர் பூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறேன். மரணமடைந்தோர் குடும்பத்துக்கு உரிய இழப்பீடும் , காயமடைந்தோர்க்கு தக்க நிவாரணமும் வழங்கி தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தஞ்சை களிமேடு தேர் பவனி விபத்து செய்தியை கேள்விபட்டு மிகவும் துயரத்தில் உள்ளேன். 3 சிறுவர்கள் உட்பட மொத்தம் 11 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர் என்பதை மனம் ஏற்க மறுக்கின்றது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன். இனி இது போன்ற தேர் விபத்துக்கள் மூலம் உயிரிழப்புகள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு உயர்மட்ட குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்!, என வலியுறுத்தினார்.

இதேபோல, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் ஆர்என் ரவி, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும் இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.

Views: - 604

0

0