2019ல் நடந்த இலங்கை ஈஸ்டர் பயங்கரவாத நிகழ்வில் மிகப்பெரிய சதி? வழக்கை தூசு தட்ட சொல்லும் தமிமுன் அன்சாரி!!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2023, 10:00 pm
Thamimun Ansari - Updatenews360
Quick Share

2019ல் நடந்த இலங்கை ஈஸ்டர் பயங்கரவாத நிகழ்வில் மிகப்பெரிய சதி? வழக்கை தூசு தட்ட சொல்லும் தமிமுன் அன்சாரி!!!

இலங்கை ஈஸ்டர் பயங்கரவாத நிகழ்வு குறித்து முழுமையான விசாரணை தேவை என மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு; கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கை தலைநகர் கொழும்புவில் ஈஸ்டர் பண்டிகையின்போது சஹ்ரான் என்ற தற்கொலை படை பயங்கரவாதியின் கொடூர தாக்குதலில் பெரும் உயிர் பலிகள் ஏற்பட்டு உலகமே அதிர்ந்தது.

அந்த பயங்கரவாதியின் உரைகளுக்கும், வலைதள பதிவுகளுக்கும் எதிராக இலங்கை முஸ்லிம்களின் சார்பில் பல புகார்கள் கொடுத்தும் இலங்கை அரசும், காவல்துறையும், புலனாய்வு துறையும் எந்த முன் நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு, அந்த பழி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மீது சுமத்தப்பட்டு, அவர்களது இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டது. கல்வி சாலைகளுக்கு அச்சுறுத்தல், மார்க்க பணிகளுக்கு கட்டுப்பாடு, வணிக ஒடுக்கம், அரசியல் நெருக்கடி என பெரும் துயரங்களுக்கு அவர்கள் ஆளானார்கள்.

இதில் மாபெரும் சதி இருப்பதாகவும், அன்னிய சக்திகளின் சூழ்ச்சி இருப்பதாகவும் முஸ்லிம்கள் எழுப்பிய குரல்கள் யாவும் கவனம் பெறவில்லை. இது குறித்து தமிழ் சமூக செயல்பாட்டாளர்கள், சிங்கள ஜனநாயக சக்திகள் மற்றும் கிருத்தவ அறிஞர்களின் நியாயக் குரல்களும் எடுபடாமல் போனது.

தற்போது இதன் பின்னணியில் இலங்கை புலனாய்வு துறையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவும், ராஜபக்ஷே குடும்பத்திற்கு விசுவாசமான அதிகாரிகளும் உடந்தையாக இருந்தனர் என்றும், இலங்கை புலனாய்வு துறை தலைவர் சுரேஷ் சாலே மற்றும் i.s பயங்கரவாத தலைவருடனான ரகசிய சந்திப்பு 2018 ஆம் ஆண்டு நடந்ததாகவும் லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறியுள்ளது.

இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் வேண்டும் என்றும், அப்போது தான் ராஜபக்க்ஷேவை மீண்டும் தேர்தலில் வெற்றி பெற செய்ய வைக்க முடியும் என்ற நோக்கில் அரசு ஆதரவோடு இப்பயங்கரவாத சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இது ஒரு கொடூரமான சூழ்ச்சியின் வெளிப்பாடாகும்.

இச்சம்பவத்திற்கு பிறகு இது தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டு, ஆர்வமுடன் பணியாற்றிய அதிகாரிகளும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதிகாரம் மற்றும் பதவிக்காக சொந்த மண்ணின் மக்களை கொன்றுள்ளனர். ஒரு சமூகத்தின் மீது பழி போடப்பட்டு, சமூகங்களுக்கிடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளனர். இந்த இழிவான அரசியல் சூழ்ச்சி ராஜபக்க்ஷே குடும்பத்தினரால் அரங்கேற்றப்பட்டுள்ளது.

தற்போது ராஜபக்க்ஷே குடும்பம் மக்கள் புரட்சியால் விரட்டப்பட்டுள்ள நிலையில், இந்த அறிக்கை இலங்கையில் வாழும் மூன்று இனத்தவர் – நான்கு மதத்தவர்களுக்கு மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து இலங்கை அரசு விரிவான புதிய விசாரணை குழுவை அமைக்க வேண்டும். உண்மை வெளி உலகுக்கு தெரியப்படுத்தப்பட்டு, இலங்கையில் சகல சமூகத்தினரும் ஒற்றுமையுடன், அமைதியுடன் வாழ வழி செய்ய வேண்டும்.

இலங்கையின் அமைதியில் தெற்காசியா மகிழ வேண்டும். இது குறித்து இலங்கையில் உள்ள சகல ஜனநாயக சக்திகளும், அரசியல் பேதங்களை கடந்து குரல் எழுப்ப வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

Views: - 290

0

0