பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்…குறைவாக இயக்கப்படும் பேருந்துகளால் பொதுமக்கள் அவதி: மின்சார ரயில்களில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்..!!

Author: Rajesh
28 March 2022, 8:24 am

சென்னை: சென்னையில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மத்திய அரசுக்கு எதிராக தொழிற் சங்கங்கள் நடத்தும் 2 நாள் வேலைநிறுத்த போராட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யு.சி., எல்.பி.எப். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்த அகில இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பு இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வேலை நிறுத்தத்துக்கு பல்வேறு தனித்தனி தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்து உள்ளன. இன்று காலை 6 மணி முதல் 30ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும் இந்த 2 நாள் வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் 20 கோடிக்கும் அதிகமான அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் பந்த் காரணமாக பேருந்துகள் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காலை நேர பேருந்துகள் இயக்கப்படாததால் அவதிப்பட்டனர். பாரிமுனை, அண்ணாநகர், வடபழனி, தியாகராய நகர், பெரம்பூரில் 90% பேருந்துகள் இயங்கவில்லை. மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் அதில் பயணிக்க பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. பந்த் கரணமாக தமிழகம் முழுவதும் குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

விழுப்புரம், விருதுநகர், திருவண்ணாமலை, நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தில் பெருமளவில் பயணிகள் காத்துக் கிடக்கின்றனர். குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஆட்டோக்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. மேலும், குறைந்த அளவிலான ஆட்டோக்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?