திமுகவினரை பார்த்து காவல்துறை நடுங்கும் நிலை மாற வேண்டும் : பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 7:08 pm

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், குற்ற வழக்கு ஒன்றில் ஆஜராக, கோவை மாவட்ட நீதிமன்றம் வந்த கோகுல், மனோஜ் ஆகியோரை, நீதிமன்றம் அருகிலேயே, ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி விட்டு சாவகாசமாக தப்பிச் சென்றுள்ளது.

இதில் கோகுல் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். படுகாயமடைந்த மனோஜ் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பட்டப்பகலில் நீதிமன்றம் அருகே நடந்த இச்சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு எந்த அளவுக்கு சீரழிந்து வருகிறது என்பதற்கும், தி.மு.க. ஆட்சியில் குற்றவாளிகள் எந்த அச்சமும் இன்றி, குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதும் இந்த சம்பவம் மூலம் உறுதியாகிறது.

காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட விடாமல், தி.மு.க.வினரின் தலையீடு அதிகரித்திருப்தால், தமிழகத்தில் நகை கடைகளை உடைத்து கொள்ளை, ஏ.டி.எம்.மை உடைத்து கொள்ளை, கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன.

நாளிதழ்களை புரட்டினால், செய்திச் சேனல்களை சில நிமிடங்கள் பார்த்தால் கொலை, கொள்ளை பற்றிய செய்திகள் தான் அதிகம் காண முடிகிறது.

எனவே, தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

தி.மு.க.வினரை கண்டு, காவல் துறையினர் அச்சப்படும் நிலையை மாற்றி, காவல் துறையினரை கண்டு, குற்றவாளிகள் அச்சப்படும் நிலையை உருவாக்க வேண்டும் என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?