முதலமைச்சர் முன்பு கோஷம் போட்ட முன்னாள் மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள்… கவனித்த CM : உடனே ஆக்ஷன்?!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 9:21 pm
Tenkasi DMK - Updatenews360
Quick Share

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக இருந்த செல்லதுரை மாற்றப்பட்டு, ராஜா நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல்வர் ஸ்டாலின் வரும்போது செல்லதுரையின் ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

“வேண்டும் வேண்டும் செல்லதுரை வேண்டும்” என்ற திமுகவினரின் முழக்கத்தை முதல்வர் ஸ்டாலினும் கவனித்துள்ளதால், அடுத்தகட்ட ஆக்‌ஷன் எடுக்கப்போகிறாரா என தென்காசி திமுகவிற்குள் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயில் மூலம் நேற்று முன் தினம் இரவு சென்னையில் இருந்து கிளம்பி நேற்று காலை தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.

தொடர்ந்து, ரயில் நிலையத்தில் இருந்து குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அப்போது, அவருக்கு, தென்காசி மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், 182.56 கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அரசு விழா முடிந்து கடையநல்லூர் வழியாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மதுரை திரும்பியபோது, முதல்வரின் வாகனத்திற்கு அருகே திரண்டு பொதுமக்கள் சிலர் மனு கொடுத்தனர். அவற்றைப் பெற்றுக்கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது அங்கு திரண்டிருந்த தென்காசி திமுகவினர், “வேண்டும் வேண்டும் செல்லதுரை வேண்டும்” என தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். இதை முதல்வர் ஸ்டாலின் கவனித்தார்.

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் நடந்து முடிந்து மாவட்ட வாரியாக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு அக்டோபர் 9ஆம் தேதி திமுக பொதுக்குழுவும் நடந்தது. அப்போது திமுகவின் 72 கழக மாவட்டங்களில் 71 மாவட்டத்திற்கு மட்டுமே பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு மட்டும் நிர்வாகிகள் நியமிக்கப்படாமல் இருந்தனர். இந்நிலையில் சமீபத்தில் தான் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜா நியமிக்கப்பட்டார்.

தென்காசி வடக்கு மா.செவாக இருந்த செல்லதுரையை மாற்றுவதற்கு அவரது ஆதரவாளர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணா அறிவாலயத்தின் முன்பு தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். பின்னர் செல்லதுரையை அழைத்துப் பேசியது திமுக மேலிடம். பின்னர் தான் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அவர் தூக்கப்பட்டு, ராஜா எம்.எல்.ஏ நியமிக்கப்பட்டார்.

எனினும், செல்லதுரையின் ஆதரவாளர்கள் சமாதானம் அடையவில்லை. இந்நிலையில் தான் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மாற்றப்பட்டு 1 மாதம் கடந்துள்ள நிலையில், முதல்வர் வருகையின்போது செல்லதுரைக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டுள்ளனர்.

ஸ்டாலின் முன்பே திமுகவினர் கோஷமிட்டது தென்காசி திமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த முழக்கத்தை ஸ்டாலினும் கவனித்ததால், அடுத்து என்ன ஆக்‌ஷன் எடுக்கப்போகிறார் என திமுகவில் பரபரப்பு எழுந்துள்ளது.

Views: - 322

0

0