கார்த்திகை தீபம் ஏற்றுவதில் போட்டி… கோவில் பூசாரியின் வேட்டியை பிடித்து இழுத்த திமுகவினர்.. கடைசியாக என்ட்ரி கொடுத்த ஓபிஎஸ்!!

Author: Babu Lakshmanan
7 December 2022, 2:03 pm

தேனியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபத்தை யார் ஏற்றுவது என்பது தொடர்பாக ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அருகே உள்ள கைலாசபட்டி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக இந்தக் கோவில் பாழடைந்து கிடந்த நிலையில், 2002ம் ஆண்டு ஓபிஎஸ் அமைச்சரான போது, இந்தக் கோயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சாலைகள் அமைக்கப்பட்டு, 2012ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதன் காரணமாக, கடந்த 14 ஆண்டுகளாக கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, ஓபிஎஸ் குடும்பத்தினர், இந்தக் கோவிலில் தீபம் ஏற்றி வந்தனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தாலும், கார்த்திகை தீபத்திருவிழாவின் போது, கோவில் செலவுகளை ஓபிஎஸ் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமே ஏற்று செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

Ops - Updatenews360

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கைலாசநாதர் திருக்கோயிலில் ஓபிஎஸ் குடும்பத்தினர் தீபம் ஏற்றக் கூடாது என்று திமுகவைச் சேர்ந்த தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் ஆகியோர் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இந்த நிலையில், நேற்று வழக்கம் போல கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கைலாசநாதர் கோவிலில் தீபத்தை ஏற்ற ஓபிஎஸ் குடும்பத்தினர் கோவிலுக்கு சென்றனர். ஆனால், பெரியகுளம் பாலசுப்ரமணியர் திருக்கோவில் செயல் அலுவலர் ராம திலகம் என்ற பெண் செயல் அலுவலரை, கார்த்திகை தீபம் ஏற்ற திமுகவினர் மேடை ஏற்றி நிறுத்தினர்.

அதே சமயம், ஓபிஎஸின் இளைய மகன் ஜெயப்பிரதீப்புக்கு பரிவட்டம் கட்டப்பட்டதற்கு தங்கத்தமிழ்செல்வன் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனிடையே, கோவில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக தீபத்துடனும், செயல் அலுவலர் கார்த்திகை தீபம் ஏற்ற தீ பந்தத்துடனும் நின்ற இருவருக்குமிடையே போட்டி ஏற்பட்டது. அப்போது, கோவில் பூசாரி கார்த்திகை தீபம் ஏற்ற முற்பட்ட போது, பெரியகுளம் திமுக எம்எல்ஏ பூசாரியின் வேட்டியை பிடித்து பின்னே இழுத்துக் கொண்டிருந்தார். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இறுதியாக ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் கையில் வைத்திருந்த விளக்கை பெற்று, கார்த்திகை தீபத்தை ஏற்றி வைத்தார் கோவில் பூசாரி. இதனால், ஆத்திரமடைந்த தங்க தமிழ்ச்செல்வன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் திமுகவினர் ஓபிஎஸ் தரப்பினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்பு அந்த இடத்தை விட்டு ஆவேசமாக கிளம்பிச் சென்றனர்.

Courtesy : Asianetnews Tamil

இதனைத் தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கைலாசநாதர் திருக்கோவிலுக்கு வந்து கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட கொப்பறையில் ஒரு குடம் நெய் ஊற்றி கார்த்திகை தீபத்தை வழிபட்டு பின்பு கைலாசநாதர் சாமி தரிசனம் செய்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!