விஜய்ன்னா மட்டும் திருமாவளவன் பொங்குறது ஏன்…? வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்.. விளாசும் ரசிகர்கள்…!

Author: Babu Lakshmanan
22 June 2023, 4:59 pm
Quick Share

நடிகர் விஜய் அண்மையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்
தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியபோது அவர் மாணவர்களுக்கு அறிவுரையாக சில வேண்டுகோள்களையும் விடுத்தார்.

குறிப்பாக மாநிலம் முழுவதும் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த 1500 மாணவ- மாணவிகளை தேர்வு செய்து அவர் பரிசு வழங்கியது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

விழாவில் விஜய் பேசும்போது, “உங்கள் பாடப்புத்தகங்களை தாண்டி நீங்கள் படிக்கவேண்டும். அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்களை பற்றியும் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள்தான் நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய, நல்ல தலைவர்களை தேர்வு செய்யப்போகிறீர்கள். ஆனால் என்ன நடக்கிறது?…நம் விரலை வைத்து, நம் கண்ணை குத்துவதுதான் தற்போது நடக்கிறது. அதாவது, காசு வாங்கிக் கொண்டு ஓட்டு போடுகிறோம். ஒரு தொகுதியில், ஓட்டுக்கு 1,000 ரூபாய் வீதம், 1.50 லட்சம் பேருக்கு கொடுத்தால், 15 கோடி ரூபாய் செலவாகும். அவ்வளவு கொடுப்பவர், முன்பு எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்… சிந்தித்து பாருங்கள். ஒவ்வொரு மாணவ – மாணவியும் தங்கள் பெற்றோரிடம், ‘காசு வாங்கி ஓட்டு போடாதீர்கள்’ எனக் கூறுங்கள். நீங்கள் கூறினால் நடக்கும்; இது நடக்கும்போது, கல்வி முறை முழுமை அடையும்” என அட்வைஸ் செய்தார்.

அவர் மாணவர்களுக்கு அறிவுரை கூறியது கூட பெரிய விஷயமாக பார்க்கப்படவில்லை. ஆனால் 234 தொகுதிகளைச் சேர்ந்த 1500 மாணவ- மாணவிகளை விஜய் தேர்வு செய்து, பாராட்டுச் சான்றிதழுடன் பரிசுத்தொகையும் வழங்கியதுதான் 2026-ம் ஆண்டு தேர்தலின்போது அவர் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பை அனைவரிடமும் ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் அவரிடம் பரிசு பெற்ற பிளஸ் 2 மாணவ மாணவிகள் 2026 தேர்தலின்போது வாக்களிக்கும் உரிமையை பெற்று இருப்பார்கள். அதனால் அவர்களை தனது ஆதரவாளர்களாக மாற்றும் நோக்கில்தான் இப்போதே விஜய் தயார் படுத்துகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

விஜய் அரசியல் கட்சி தொடங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது பற்றி தமிழக அரசியல் கட்சித் தலைவர்களிடம் கருத்து கேட்டபோது, அத்தனை பேருமே அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என்றுதான் பெருந்தன்மையோடு கூறினார்கள். ஆனால், ஒரேயொரு தலைவர் மட்டும் விஜய் அரசியலுக்கு வருவதை
மறைமுகமாகவும், அதேநேரம் மிகக் கடுமையாகவும் எதிர்த்திருக்கிறார். அவர் வேறு யாருமல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன்தான்.

“விஜய் அரசியலுக்கு வரட்டும். அதனால் ஒன்றுமில்லை. நல்ல எண்ணத்தின் அடிப்படையில் அவரது கருத்தை வரவேற்கிறோம். பொது வாழ்கைக்கு எந்த பருவத்திலும் வரலாம். அதில் தவறு கிடையாது.

பொதுவாக ’சினிமா’வில் உள்ள அனைவரும் ’சினிமா பாப்புலாரிட்டி’ இருந்தால் போதும் உடனே ’முதலமைச்சர்’ ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு வருகிறார்கள். தமிழகத்தில் மட்டும்தான் இந்த சாபக்கேடு உள்ளது.

இந்தியாவில் மற்ற எல்லா மாநிலத்திலும் திரை உலகத்தை சேர்ந்தவர்கள் அவர்கள் வேலையை மட்டும்தான் செய்கிறார்கள். ஆனால் நமது மாநிலத்தில் மட்டும்தான் சினிமாவில் உள்ளவர்கள் எல்லா வேலையையும் முடித்துவிட்டு ’மார்க்கெட்’ போகும்போது அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலுமே ’சினி ஸ்டார்ஸ்’ கடைசி காலத்தில் ’பவரு’க்கு வரலாம் என்று கணக்குப்போடுவது கிடையாது.

ரஜினி வருவாரா? ரஜினி வருவாரா? என்று காலம் முழுவதும் கேட்டீங்க.. இப்போ விஜய் வருவாரா? என்று கேட்கிறீர்கள். அவர் அரசியலுக்கு வருவதால் இங்கு யாருக்கும் பதற்றம் கிடையாது. இதுபோன்ற கேள்வியே முட்டாள்தனமாக உள்ளது.
ஊடகங்கள்தான் இதை பெரிது படுத்துகின்றன” என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

விஜய் அரசியலுக்கு வருவதை திருமாவளவன் முதலில் வரவேற்பது போல் தெரிந்தாலும், அவர் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியின் பெரும் பகுதியில் விஜயை கேலி செய்து நீங்கள் எல்லாம் அரசியலுக்கே லாயக்கற்றவர்கள் என்று சொல்வதைப் போல்தான் உள்ளது.

ஆனால் விஜய் ரசிகர் மன்றத்தினரோ அவர் திட்டமிட்டு படிப்படியாகத்தான் அரசியலில் குதிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறுகின்றனர்.

“2008ல் எங்கள் தளபதி விஜய் இலங்கைத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜூலை மாதம் விஜய் மக்கள் இயக்கம் என்னும் நற்பணி அமைப்பை தொடங்கிய தளபதி புதுக்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், ‘அரசியல் என்னும் கடலில் இறங்கணும்னா ஆழம் பார்க்கணும். அதற்கான முயற்சியில் இருக்கிறேன். என்னைப் போலவே நீங்களும் இந்த இயக்கத்தை நடத்தினால் என் குடும்பம் என் தொழிலைவிட இந்த கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அரசியல்தான் என் நோக்கம். ஆனால் நிதானமாக வருவேன்’ என்று கூறியும் இருக்கிறார்.

2011ம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுகவிற்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. 2018ல் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், “நான் முதலமைச்சரானால் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிப்பேன்” என்றும் தளபதி பேசி இருக்கிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 165 பேர் சுயேச்சைகளாக போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால் இதையெல்லாம் அறியாதவர் போல திருமாவளவன் பேசியிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. இதன் மூலம் எங்கள் தளபதி திடீரென அரசியலில் குதிக்க விரும்புகிறார் என்ற வாதமே தவறானது” என்று ஆவேசமாக கொதிக்கிறார்கள்.

அரசியல் விமர்சகர்களின் கருத்தோ வேறு கோணத்தில் உள்ளது.

“நடிகர்களாக இருந்து அரசியலில் குதித்த விஜயகாந்த், சீமான் போன்றோர் மீது ஒரு நாளும் திருமாவளவன் இவ்வளவு காட்டமாக தாக்கிப் பேசியது இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அரசியலில் குதித்து திமுகவின் அடுத்த தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்து விட்ட அமைச்சர் உதயநிதி பற்றி திருமாவளவன் எதுவுமே கூறவில்லை.

இதில் வேடிக்கை என்னவென்றால் அரசியலில் குதிக்கும் நடிகர்களை கேலி செய்யும் திருமாவளவனின் விசிக 2016 தேர்தலில், தமிழ் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நல கூட்டணியில் இணைந்துதான் போட்டியிட்டது. அப்போது ஒரு பிரபல நடிகரை தலைவராக ஏற்றுக்கொண்டு இருக்கிறோமே என்ற உணர்வு திருமாவளவனுக்கு இருந்ததா என்பது தெரியவில்லை. அதேபோல சீமானை இன்று வரை அவர் கடுமையாக விமர்சித்ததும் கிடையாது.

இங்கேதான் சூட்சமமே இருக்கிறது. ஏனென்றால் தற்போது தமிழ் நடிகர்களில் அதிக ரசிகர்களை கொண்டிருப்பது விஜய் தான். தமிழகத்தில் மட்டும் அவருக்கு 48 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்களில் பட்டியல் இன வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களும் மிக அதிகம். இவர்கள் சமூக ரீதியாக தற்போது திருமாவளவனின் விசிகவை ஆதரித்து வருகின்றனர். நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கினால் இவர்களில் பெரும்பான்மையானோர் விஜய் பக்கம் சாய்வது உறுதி. இதனால் 2026 தேர்தலில் விசிக யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது கடினமாகவே இருக்கும்.

தவிர, இதுவரை உயர் கல்வி படிக்க முடியாமல் வறுமையில் வாடும் மாணவர்களுக்கு மட்டுமே தானும், தனது ரசிகர் நற்பணி மன்றத்தின் மூலமும் உதவிகளை செய்து வந்த நடிகர் விஜய் தற்போது 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி இருப்பதன் மூலம் அந்த மாணவர்களது பெற்றோரின் ஆதரவையும் விஜய் பெற்று விடுவார் என்ற எண்ணம் திருமாவளவனுக்கு வந்திருக்கலாம். இது திமுக கூட்டணிக்கு 2026 தேர்தலில் பாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் அவர் கருத வாய்ப்பும் உண்டு.

அதேபோல் ஒவ்வொரு மேடையிலும் தான் போற்றி புகழும் சட்டமேதை அம்பேத்கரை நடிகர் விஜய்யும் தற்போது உயர்த்திப் பிடிப்பது திருமாவளவனுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தி இருக்கும் என்றே சொல்லவேண்டும். அந்த கோபத்தில்தான் விஜய் அரசியலுக்கு வருவதை அவர் மிகக்கடுமையாக எதிர்க்கிறார், ஏளனமாக பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது” என்று அந்த அரசியல் விமர்சகர்கள் உண்மையை உடைக்கிறார்கள்.

Views: - 245

0

0