மோடி, அமித்ஷா விசிகவில் சேருவார்கள்… எச்.ராஜா ஒரு பைத்தியம் ; சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவன் காட்டமான பேச்சு…

Author: Babu Lakshmanan
10 June 2023, 10:42 am
Quick Share

தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டில் சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முதலமைச்சர் அறிக்கையாக கேட்டுப் பெற வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் உட்பட தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை நிலைநிறுத்திட வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன், திராவிட கழக தலைவர் கி வீரமணி உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில், விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலில் பட்டியலினத்தவரை நுழைய விடாமல் தடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்ட மேடையில் திராவிட கழக தலைவர் கி. வீரமணி மேடை பேசியதாவது :- கோவிலை திறப்பதை விட அதனை நிரந்தரமாக மூடி விட்டாலும் நான் அதை வரவவேற்பேன். ஆனால் இப்பொழுது கோவிலை திறக்க கூறுவது பக்திக்காக அல்ல, புத்திக்காக சமத்துவதுக்காக. கோவில்களில் நுழைய விடாத இந்த சம்பவத்திற்கு பின்னால் ஆழமான பின்னணி இருக்கிறது. இதை உணர்வுபூர்வமாக மட்டும் அணுக கூடாது.

திருவிழாக்கள் என்பது இப்பொழுது ஜாதி கலவரங்களை ஏற்படுத்தும் களமாக மாற்றபட்டடு வருகிறது. தற்பொழுது நடைபெற்று வருவது மனித உரிமைக்கான போர், தமிழக அரசு உடனடியாக இதற்கான பரிகாரத்தை தேட வேண்டும். இந்த சூழ்நிலை தொடர கூடாது, தொடர்ந்தால் அது யாருக்கும் நல்லதல்ல, என்று கூறினார்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் கோபண்ணா மேடையில் பேசியதாவது :- சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் கோவிலுக்கும் நுழைய ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம். இது மிக பெரிய அவலம். மேல்பாதியில் நடந்திருப்பது மிகப்பெரிய அநீதி, இது போன்ற செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும், என்று கூறினார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மேடையில் பேசியதாவது :- சாதி ஒழிப்பு போராட்டத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
கோவில் என்பது கடவுளை வழிபடுவதற்கான இடம் , எனவே கோவில் என்பது பொதுவானதாக தான் இருக்க வேண்டும், தனியார் கோவில் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.

கோவிலுக்குள் விடாதவர்கள் மீதும் வழக்கு இருக்கிறது , கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க கூறுவோர் மீதும் வழக்கு இருக்கு. இது சமத்துவம் அல்ல, காவல்துறைக்கு உள்ளே இருக்கிற ஜாதி வெறி ஒருசிலரை ஆட்டிப்படைக்கிறது. இதற்கு மேலும் அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காது என்றால் நாங்களே சென்று காவல்துறை, அரசு செய்ய தவறிய காரியத்தை செய்வோம். அந்த கோவிலில் வைக்கபட்டிருக்கும் சிலை உடைத்துக் கொண்டு தலித் மக்களை உள்ளே அழைத்து செல்வோம்.

வட மாவட்டங்களில் இது போன்ற செயல்கள் நடக்க பாமக தான் காரணம், கேவலம் ஓட்டு வாங்க எதை வேண்டுமானாலும் செய்வதா? சீல் வைக்க முடிந்த உங்களால் உள்ளே அழைத்து செல்ல முடியாதா..? இதற்கு முன்பு இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்கள் யார் என்றே தெரியாது. ஆனால் சேகர்பாபு அவ்வாறல்லாமல் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். எனவே, அறநிலையத்துறை வேடிக்கை பார்க்கலமா, இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

சிவ பெருமான் ஏர் ஓட்டுகிறாரா? சாமி வந்து விவசாயம் செய்கிறதா? கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நிலம் இல்லாத ஏழைகளுக்கு தர வேண்டும், என்று கூறினார்.

விசிக தலைவர் திருமாவளவன் மேடை பேச்சு: பூட்டப்பட்டிருக்கும் கதவுகள் திறக்கப்பட வேண்டும். அனைவரும் வழிபட வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை. அதிகாரிகள் சட்டப்படி நடந்தால் அதுவே போதுமானது, சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று முனைப்பு காட்டி இருந்தால், அதிகாரிகள் அடுத்த நாளே இவர்களை கோவிலுக்குள் அழைத்து சென்று இருக்க முடியும்.

இளைய தலைமுறையினர் மத்தியிலும் ஜாதி வெறி ஊட்டப்பட்டுள்ளது. சமூகம் அந்தளவுக்கு ஜாதி இருக்கம் கொண்டதாக மாறி இருக்கிறது. அதனுடைய வெளிப்பாடு தான் சக மாணவர்களாக இருந்தும் கூட கோவிலுக்குள் நுழையும் எண்ணம் உனக்கு இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் பட்டியலின இளைஞர்களிடம் கூறி இருக்கிறார்கள்.

தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட உடன் காவல்துறை தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறை இந்த விவகாரத்தில் சரியாக செயல்படவில்லை. சம்மந்தப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் தான் வருகிறது. ஆனால், அங்கு உள்ள ஒரு சிலர் இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வராது என்று கூறுகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இருக்கும் கோவில்களில் தலித்துகள் வழிபட உரிமை இருக்கிறதா..? இல்லையா..? என்பதுதான் இப்பொழுது கேள்வியாக எழுந்துள்ளது. ஆட்சியாளர்களின் அணுகுமுறை தலித் மக்களுக்கு எதிரான அணுகுமுறையாகவே உள்ளது.

ஓபிசி மக்களை சரியாக வழிநடத்தக்கூடிய அறிவார்ந்த தலைமை இல்லை. இதே போல தான் ஒரு மூடன் மேல்பாதி கிராமத்திற்கு சென்று சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று ஐயா சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளான்.

சட்டம் படித்தவனுக்கு அறிவு இருக்க வேண்டாமா..? சொந்த மக்களை இப்படி தவறாக வழி நடத்தலாமா..? அட மூடர்களே சொந்த ஜாதி மக்களையே தவறாக கேடாக வழி நடத்துகிறீர்களே,
சுப்ரீம் கோர்ட் போனாலும் கோவிலுக்குள் விடமாட்டோம் புடுங்கிவிடுவோம் என்று கூறினார்கள். அறிவு கெட்ட முண்டங்கள் இப்படித்தான். இந்த மக்களை நீங்கள் பலிகடா ஆக்குகிறீர்கள். உங்கள் ஜாதி புத்தி உங்களுக்கு கொள்கையும் ஏறாது கோட்பாடும் ஏறாது.

இப்பொழுது கோவிலுக்கு பூட்டு போட்டு விட்டார்கள். பூட்டை போய் ஆட்ட போகிறீர்களா..? தொங்குகிற பூட்டை பிடித்து ஆட்டப் போகிறீர்களா…? அறியாமையில் உழலும் தற்குறிகள் தான் ஓபிசி மக்களை வழி நடத்துகிறார்கள். கோபுரங்கள் செய்யவும் சிலைகள் செய்யவும் பட்டியல் இனத்தவர்கள் தான் தேவைபடுகிறார்கள். ஆனால் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க மாட்டார்கள், அதிகாரம் கோரும் இடத்தில் மட்டும் தான் தீண்டாமை பிரச்சனை வருகிறது.

ஒரு நாள் போலீசை ஒதுக்கி வைத்து விட்டாலே ஜாதியை ஒழித்து விடலாம். ஜாதியை ஒழிக்க விடாமல் தடுப்பது போலீஸ் புத்தி தான். பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலையை காவல்துறை கொண்டுள்ளது. இந்துக்களிடம் இருக்கிற கடவுள் நம்பிக்கையை ஆன்மீக நம்பிக்கையை தங்களுடய ஆதாயத்திற்காக பாஜக பயன்படுத்திக் கொள்கிறது. அதற்கு பெயர் தான் இந்துத்துவா.

காவல்துறையினருக்கு இருக்கும் ஜாதி புத்தியை மறைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று பெரும்பாலும் மக்கள் மீது பழியை போடுகிறார்கள். அப்படிதான் மேல்பாதியிலும் நடந்துள்ளது. கொள்கை சார்ந்து மோடியும், அமித்ஷாவும் சிந்தித்தால், அவர்கள் விசிகவில் சேர்ந்து விடுவார்கள்.

அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் அதற்கு முன்பு பல ஆண்டுகள் மனுஸ்மிருதி தான் நடைமுறையில் இருந்தது. அதனால்தான் பால்ய விவாகத்தை ஆளுநர் நியாயப்படுத்துகிறார்.
அதனால்தான் குழந்தை திருமணத்தை அவர் ஆதரிக்கிறார். எனக்கும் குழந்தையாக இருக்கும் போது தான் கல்யாணம் ஆச்சு. அதனால் எல்லோரும் பண்ணிக்கோங்க என்று கூறுகிறார்.

தமிழ்நாடு அரசியலில் காரைக்குடியை சேர்ந்த பைத்தியம் ஒருவர் இருக்கிறார். அவருக்கு மூளை கெட்டுவிட்டது, பைத்தியத்திலே ராஜாவாகிவிட்டார். எங்காவது ஏதாவது பிரச்சனை நடந்தால் கூட அதற்கு திருமாவளவன் தான் காரணம் என்று கூறுகிறார். ( எச். ராஜாவை விமர்சித்த திருமாவளவன்)

இதுபோல தவறாக வழிநடத்தக்கூடிய தலைவர்களை ஓபிசி மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் அதுதான் அவர்களுக்கு உதவும். எனவே தமிழக அரசுக்கும், முதல்வருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக நாங்கள் கொடுக்கக்கூடிய வேண்டுகோள். சமூக நீதி மேல் நம்பிக்கை உள்ள அரசு திமுக என்பதால் நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

சட்டம் அனைவரையும் சமம் என்று கூறுகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் சட்டம் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை தருகிறது. இந்து சமய அறநிலைத்துறை சட்டவிதிகளின்படி தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள 43,283 கோயில்களுக்கும் அறங்காவலர் குழுக்கள் உடனடியாக அமைக்கப்பட வேண்டும். தற்போது 780 கோயில்களில் மட்டும் தான் அறங்காவலர் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது

அதேபோல தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் அறங்காவலர் குழுக்களை அமைக்கும் போது சட்டப்படி ஆதிதிராவிடர் ஒருவரும் பெண் ஒருவரும் அறங்காவலர்களாக நியமிக்கப்பட வேண்டும்.

இதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயில்கள் அனைத்திலும் வழிபாட்டில் சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை இந்து சமய அறநிலையத்துறை ஆணையரிடம் முதலமைச்சர் அறிக்கையாக கேட்டுப் பெற வேண்டும். இந்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கும் வைக்கப்பட வேண்டும், என்று கூறினார்.

Views: - 276

0

0