முன்னாள் அமைச்சர்களை டார்கெட் செய்யும் திமுக : நாளை நடக்கும் பட்ஜெட் கூட்டம் குறித்து முக்கிய முடிவை எடுத்த அதிமுக…?

Author: Babu Lakshmanan
17 March 2022, 2:40 pm
Quick Share

முன்னாள் அமைச்சர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, தமிழக அரசு நாளை தாக்கல் செய்யும் பட்ஜெட்டை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த ஆண்டு பொறுப்பேற்று, தனது முதல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. தமிழக அரசுக்கு கடன் சுமை அதிகம் இருப்பதால், தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற முடியாது என்றும் அறிவித்து, பணபலன் சார்ந்த வாக்குறுதிகளை கிடப்பில் போட்டுள்ளது. மேலும், புதிய அறிவிப்புகளை வெளியிடாமல், ஏற்கனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, செயல்படுத்தாமல் இருந்த திட்டங்களிலேயே தமிழக அரசு கவனம் செலுத்தி வந்தது.

இந்த நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது முதல் முழு பட்ஜெட்டை நாளை தாக்கல் செய்கிறார். இதில், மகளிர் உரிமை தொகையான ரூ.1,000 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதால், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனிடையே, கள்ள ஓட்டுப் போட வந்த திமுக பிரமுகரை பிடித்து தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், அவர் மீது நில அபகரிப்பு உள்பட மேலும் 2 வழக்குள் போட்டு ஜாமீனில் வெளிவர முடியாத நிலையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தற்போது, அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

அதேபோல, நேற்று முன்தினம் 2வது முறையாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு மற்றும் அவருக்கு நெருக்கமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. ஏற்கனவே, முன்னாள் அமைச்சர்கள், கி.வீரமணி, விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோரின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

திமுக பழிவாங்கும் நோக்கில் முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதிமுக மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்தநிலையில், நாளை நடைபெறவுள்ள சட்டபேரவை பட்ஜெட் தாக்கல் கூட்டத்தை அதிமுக புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படும் திமுக அரசின் செயலை கண்டிக்கும் விதமாக, பட்ஜெட் கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேடு, முன்னாள் அமைச்சர் கைது மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் தொடர் சோதனைகளுக்கு அதிமுக கண்டனத்தை பதிவு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 533

0

0