கட்டுக்கடங்காத கூட்டம்… சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் : புல்மேடு பகுதியில் அதிகரித்த மருத்துவ முகாம்கள்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 December 2023, 12:23 pm
Sabarimalai -Updatenews360
Quick Share

கட்டுக்கடங்காத கூட்டம்… சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் : புல்மேடு பகுதியில் அதிகரித்த மருத்துவ முகாம்கள்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் காலம்தான் அதி உச்ச சீசன். தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு நாளும் சுமார் 80,000 முதல் 90,000 வரை பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுவாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பம்பை வந்து அங்கு பம்பை ஆற்றில் புனித நீராடி 5 கிலோ மீட்டர் மலையில் அப்பச்சிமேடு, நீலிமலை, சரங்குத்தி வழியே சன்னிதானத்தை சென்றடைவர். தற்போது கீழ் பகுதியான பம்பையிலேயே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து நீண்ட வரிசைகளில் காத்திருந்து மலைக்கு யாத்திரையாக அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதேபோல பெருவழிப்பாதை எனப்படும் எருமேலியில் இருந்து 35 கி.மீ. தொலைவு வனப்பகுதியில் நடந்து வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து 3-வது பாதையான வண்டி பெரியார்- புல்மேடு வழியாகவும் பக்தர்கள் சன்னிதானத்தை சென்றடையும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது சுமார் 5,000க்கும் அதிகமான பக்தர்கள் புல்மேடு வழியாக சன்னிதானத்தை அடைகின்றனர். புல்மேடு பகுதியில் மலை இறக்கம் என்பதால் பக்தர்கள் அதிகமாக இந்த பாதையையும் பயன்படுத்துகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் முடிந்து புல்மேடு வழியாக பக்தர்கள் திரும்பும் போது கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி 100க்கும் அதிகமான பக்தர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து புல்மேடு பாதையை பயன்படுத்த கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.

தற்போது புல்மேடு பகுதியை பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்துவதால் அங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் புல்மேடு பாதை வழியாக சன்னிதானம் சென்ற கேரளா பக்தர் ஒருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருந்தார். அதேபோல புல்மேடு பாதையில் பயணித்த போது தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்புசாமி என்ற 32 வயது இளைஞரும் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் புல்மேடு பகுதியில் மருத்துவ வசதிகளை வழங்கும் முகாம்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.

Views: - 203

0

0