3வது பெரிய கட்சியாக உருவெடுத்த பாஜக.. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிகளை அள்ளிக் குவித்து அபாரம்…!! எங்கெங்கு தெரியுமா..?

Author: Babu Lakshmanan
22 February 2022, 1:57 pm
Quick Share

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடும் போட்டிக்கு நடுவே பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றிருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 19ம் தேதி தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் திமுக, கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அமைத்த அதே கூட்டணியுடன் தேர்தல் சந்தித்துள்ளது. அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அமமுக, தேமுதிக மற்றும் சுயேட்சைகள் என பலமுனை போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

BJP_Lotus_Symbol_UpdateNews360

நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகிறது. அதிமுகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை. இப்படியிருக்கையில், தனித்துப் போட்டியிட்ட பாஜகவுக்கு நினைத்ததைப் போன்று பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சி 14வது வார்டு பாஜக வெற்றி பெற்றுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி 9வது வார்டில் மீனா தேவ் வெற்றியடைந்துள்ளார். மதுரை மாநகராட்சி 86வது வார்டில் பாஜக வேட்பாளர் பூமா ஜனாஸ்ரீ வெற்றி பெற்றுள்ளார். இதேபோல, காஞ்சிபுரம் மாநாகராட்சி 21வது வார்டு பாஜக வேட்பாளர் விஜிதா அருண்பாண்டியன் வெற்றி பெற்றார்.

BJP_FLAG_UpdateNews360

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் பேரூராட்சியில் 4,5,6,7,8,9,10,12 வார்டுகளில் பாஜக வெற்றி பெற்று, அப்பேரூராட்சியைக் கைப்பற்றினர். முதன்முறையாக கிருஷ்ணகிரி நகராட்சியில் 10வது வார்டில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். வடுகபட்டி பேரூராட்சி 5வது வார்டில் பாஜக வேட்பாளர் வசந்த் பாலாஜி வெற்றி பெற்றார். கோவை தெற்கு மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சி 2மற்றும் 3ம் வார்டுகளில் பாஜக வெற்றி பெற்றது.

திருமலையம்பாளையம் பேரூராட்சியில் 3வது வார்டில் பாஜக வேட்பாளர் தமிழரசி வெற்றி பெற்றது. திருவட்டார் 1வது வார்டு மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்களம் பேரூராட்சி 3வது வார்டில் பாஜக வெற்றி பெற்றது.

கன்னியாகுமரியில் குலசேகரம் பஞ்சாயத்து 2 வார்டிலும், திற்பரப்பு 2, 3 மற்றும் 4வது வார்டிலும், கன்னியாகுமரி பேரூராட்சி 1வது வார்டிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். நீலகிரி மாவட்டம் கீழ்குந்தா பேரூராட்சி வார்டு 6ல் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். பல்லடம் நகராட்சியில் பாஜக இரண்டு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது.

விருதுநகர் கிழக்கு மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி வார்டு 26 பாஜக வேட்பாளர் முருகானந்தம்‌ வெற்றி பெற்றுள்ளார். அதேபோல, ஈரோடு மாவட்டம் கிளாம்பாடி பேரூராட்சி 13வது வார்டில் பாஜக வேட்பாளர் ஜெகதாம்பாள் வெற்றி பெற்றுள்ளார். இன்னும் வாக்கு எண்ணிக்கை நடந்து வருவதால், பாஜகவுக்கு மேலும் பல இடங்களில் வெற்றி வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் வெடித்த நிலையில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், திமுக, அதிமுகவை தொடர்ந்து அதிக இடங்களில் வென்ற 3வது கட்சி என்ற பெருமையை பாஜக பெற்றுள்ளது. இதுவரையில் 119 பேரூராட்சி உறுப்பினர்களும், 29 நகராட்சி உறுப்பினர்களும், 3 மாநகராட்சி உறுப்பினர்களும் பாஜக தரப்பில் வெற்றி பெற்றுள்ளனர்.

annamalai bjp - updatenews360

இதனிடையே, தமிழகத்தில் பாஜக வளராது என்று எதிர்கட்சியினர் கூறி வந்த நிலையில், தற்போது பல இடங்களில் பாஜக வெற்றி இருப்பது அக்கட்சியினரிடையே மேலும் உற்சாகத்தை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, #நாங்கவந்துட்டோம்னுசொல்லு என்னும் ஹேஷ்டேக்கை பாஜகவினர் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Views: - 986

1

0