வன்னியர் இட ஒதுக்கீடு விவகாரம்… உங்க இஷ்டத்துக்கு தாமதிக்க முடியாது ; திமுகவை எச்சரித்த ராமதாஸ்..!!

Author: Babu Lakshmanan
11 April 2024, 11:46 am

பரிந்துரை அளிக்க அவகாசம் முடிந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்து விட்டதாகவும், தி.மு.க. அரசே….. வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வளவு காலம் தாழ்த்துவாய்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்க தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு முதன்முதலில் வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அதன் பின் இரு முறை நீட்டிக்கப்பட்ட தலா 6 மாத காலக் கெடுவும் இன்றுடன் நிறைவடைகிறது. ஆனாலும் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்த நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கது.

மேலும் படிக்க: மோடிக்கு புத்தி கெட்டு போச்சா..? பாஜகவை வேரடி மண்ணோடு அழிக்கனும்… வைகோ ஆவேசம்…!!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த 31.03.2022-ஆம் நாள் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், தமிழக அரசு நினைத்திருந்தால் அடுத்த இரு வாரங்களில் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம். ஆனால், அதன்பின் 9 மாதங்கள் கழித்து நவம்பர் 17-ஆம் தேதி தான் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்பின் இரு மாதங்கள் கழித்து 12.01.2023-ஆம் நாள் தான் வன்னியர் உள் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி ஆணையம் 3 மாதங்களுக்குள், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ஆம் நாளுக்குள் பரிந்துரை செய்திருக்க வேண்டும். ஆனால், அதன்பின் இரு முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது; நீட்டிக்கப்பட்ட காலக்கெடுவும் இன்றுடன் நிறைவடைந்து விட்டது. ஒட்டுமொத்தமாக 15 மாதங்களாகியும் ஆணையம் எதையும் செய்யவில்லை; ஆணையம் கேட்ட தரவுகளையே தமிழக அரசு தரவில்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு குறித்த தரவுகளை ஆய்வு செய்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பது கடினமல்ல. அது ஒரு சில வாரங்களில் முடிவடையக் கூடிய பணி தான். ஆனால், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க திமுக அரசு விரும்பவில்லை. சமூகநீதி வேடம் போடும் திமுகவின் உண்மை முகம் சமூக அநீதி தான் என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

மேலும் படிக்க: ஊழல் பற்றி பாஜக பேசலாமா..? மிரட்டி வாங்கிற காசுக்கும்.. பொருளுக்கும் வித்தியாசம் இருக்கா..? கனிமொழி பாய்ச்சல்…!!

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை திமுக அரசு அதன் விருப்பம் போல தாமதிக்க முடியாது. பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. அந்த எல்லையைக் கடந்து போராடித் தான் இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்றால் அதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி தயாராகத்தான் இருக்கிறது. இதை உணர்ந்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!