திமுக சின்னத்தில் போட்டியிட மறுக்கும் விசிக, மதிமுக?…திடீர் போர்க்கொடியின் ரகசியம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2024, 9:17 pm
DMK All
Quick Share

நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டு குழு தலைவர்கள் ஒரு சுற்று பேச்சுவார்த்தையை முடித்து விட்டனர். ஆனாலும் அதில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்பிய பிறகு இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கீடு சுமுகமாக முடிந்துவிடும் என்று
திமுக தரப்பில் கூறப்படுகிறது.

இது தவிர விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சை திமுக நடத்த வேண்டியுள்ளது.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த நான்காம் தேதி மதிமுகவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் விருதுநகர், திருச்சி, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய 6 தொகுதிகளின் பட்டியலை ஒப்படைத்தனர். அதில் தங்களுக்கு இரண்டு தொகுதிகளை ஒதுக்கி தாருங்கள். கண்டிப்பாக ஒரு ராஜ்யசபா எம்பி பதவியும் வேண்டும் என அவர்கள் அப்போது வலியுறுத்தியும் இருக்கின்றனர். அது மட்டுமல்ல, இந்த முறை நாங்கள் திமுக சின்னத்தில் நிற்க விரும்பவில்லை. எங்களது கட்சியின் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் என்று கறார் காட்டியும் உள்ளனர்.

இதனால்தான் ஸ்டாலின் சென்னை திரும்பிய பிறகு இது குறித்து பேசிக் கொள்ளலாம் என திமுக தொகுதி பங்கீட்டு குழுவினர் நழுவி விட்டனர் என்று கூறப்படுகிறது.

அதே நேரம் வரும் 12ம் தேதி விசிகவை பேச்சு வார்த்தைக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு அந்த கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் 8 தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமையிடம் ஒப்படைத்து இருந்தது. அதிலும் குறிப்பாக சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரு தனித் தொகுதிகளையும், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், ஆகிய மூன்று பொதுத் தொகுதிகளையும் கேட்டிருந்தது.

இந்த 3 பொதுத் தொகுதிகளில் ஏதாவது ஒன்றை தங்களுக்கு திமுக ஒதுக்கி தரவேண்டும். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் போட்டியிட்ட விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், இந்த முறை எங்களது கட்சி சின்னத்தில்தான் போட்டியிடுவார். அதையும் திமுக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் உறுதிப்பட கேட்டு இருக்கிறார்.

இப்படி மதிமுகவும், விசிகவும் இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளை விடாப்பிடியாக கேட்பது எதனால் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மதிமுகவை பொறுத்தவரை 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுகவின் தேர்தல் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றது. தொடர்ந்து வேறு கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட்டால் மதிமுகவின் சின்னமான பம்பரம் அக்கட்சிக்கு கிடைக்காமல் போய் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் அக்கட்சி இழக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விடும். அதனால்தான், தங்களது சொந்த சின்னத்திலேயே போட்டியிட மதிமுக விரும்புகிறது.

இதேபோன்ற நெருக்கடி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக தனது சின்னமான பானையில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு நான்கில் வெற்றி பெற்று விட்டதால் உடனடியாக அங்கீகாரத்தை இழந்து விடக்கூடிய நிலை எதுவும் இல்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தங்கள் கட்சிக்கென கிடைத்த சின்னத்தை பறிகொடுக்கும் நிலை விசிகவுக்கு ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.
அதனால்தான் திருமாவளவனும் எங்களது சின்னத்தில் போட்டியிட விசிக விரும்புகிறது என்று அண்மைக்காலமாக தொடர்ந்து அடம் பிடித்த மாதிரி கூறி வருகிறார்.

ஆனால் இதையெல்லாம் கடந்து, தமிழகத்தைச் சேர்ந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம் எல் ரவி உச்ச நீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள ஒரு பொது நல வழக்குதான் மதிமுகவும், விசிகவும் தங்களது சின்னத்தில் போட்டிட விரும்புவதற்கு முக்கிய காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூரிலும், மதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கணேசமூர்த்தி ஈரோட்டிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் முக்கிய நிர்வாகியான சின்ராஜ் நாமக்கல் தொகுதியிலும் திமுகவின் சின்னமான உதய சூரியனில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதேநேரம் தென்காசியில் அதிமுக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இவர்கள் நால்வருக்கும் எதிராக 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரவி ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார். “நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாரிவேந்தர், கணேசமூர்த்தி, சின்ராஜ், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகிய நால்வருமே வேறு கட்சிகளின் தலைவர்கள். ஆனால் இவர்களில் மூவர் திமுக சார்பிலும், இன்னொருவர் அதிமுக தரப்பிலும் வேட்பாளர்களாக களம் இறக்கப்பட்டனர். தேர்தல் வெற்றிக்கு பின்பு ஒருவர் எந்த கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டாரோ அந்தக் கட்சியின் பிரதிநிதியாகவே நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவையிலும் பார்க்கப்படுகிறார்.

ஆனால் மக்கள் மன்றத்தில் அவர்களுக்கு என தனியாக ஒரு கட்சியும், கொடியும் உள்ளது. இது சின்னங்கள் ஒதுக்கீடு சட்டப்படி செல்லுமா?…ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் இன்னொரு கட்சியில் சேர்ந்து போட்டியிடுவது சட்டப்படி செல்லாது. எனவே இதற்கு தடை விதிக்கவேண்டும்” என்று அந்த மனுவில் கூறியிருந்தார்.

நான்கு ஆண்டுகளுக்கு பின்பு இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அண்மையில் அதை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்துத்தான் மனுதாரர் ரவி தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடி இருக்கிறார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டும் உள்ளது.

திமுக தரப்பில் போட்டியிட்ட மூவருக்கும் தேர்தல் சின்னத்தை ஒதுக்க கோரும் பி பார்ம் படிவத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும், அதிமுக சார்பாக நின்ற டாக்டர் கிருஷ்ணசாமிக்கு அப்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர்
ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரும் கையெழுத்திட்டு, இவர்கள் எங்களது கட்சியை சேர்ந்தவர்கள்தான் என சான்றொப்பம் அளித்து உறுதி செய்தும் உள்ளனர். இது ஆள் மாறாட்டம் செய்வது போன்றதொரு மிகப் பெரிய தவறு என்றும் அந்த மனுவில் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் ரவி கூறியிருக்கிறார்.

இந்த மனுவின் மீது உச்சநீதி மன்றம் விசாரணையை தொடங்கினால் தலைமை தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளராக நிறுத்தப்பட்டவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட நால்வரும் வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் என்பது நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு வேட்பு மனுவுடன் இணைத்த பி பார்ம் படிவத்தில் கையெழுத்திட்டவர்களுக்கும் சட்ட சிக்கல் உருவாகும். அதேநேரம் வெற்றி பெற்றவர்களின் பதவி பறிபோகும் அபாயமும் ஏற்படும்.

ஒருவேளை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று எம்பியாகப் பதவியேற்றுக் கொண்ட பிறகும் கூட பிரச்சனை வரலாம். மக்களவை சபாநாயகரிடம் இதை முறையிட்டு ஒருவர் எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

இதனால்தான் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில் மனுதாரருக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில் தங்களது எம்பி பதவியை இழக்கக்கூடிய நிலை வரலாம் என்று விசிக மதிமுக கட்சிகள் அஞ்சுகின்றன. இது திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் தலைவலியை ஏற்படுத்தும். எனவேதான் இந்த இரு கட்சிகளும், தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புகின்றன என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.

இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால் 2021 தமிழக சட்டப் பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி,கொங்குமக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சிகளைச் சேர்ந்த சின்னப்பா, பூமி நாதன், சதன் திருமலைக்குமார், ரகுராமன், அப்துல் சமத், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், வேல்முருகன் மற்றும் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு ஜெயித்த பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோரின் எம்எல்ஏ பதவிகளும் கேள்விக்குறியாகலாம்.

எனவே நாடாளுமன்றத் தேர்தலோ சட்டப்பேரவை தேர்தலோ எது என்றாலும் திமுக சார்பிலும், அதிமுக தரப்பிலும் கூட்டணி கட்சிகளை தங்களது சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் என்று நிர்பந்திக்க முடியாத இக்கட்டான சூழல் ஏற்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இது போன்ற பிரச்சனைகள் பெரிய அளவில் இருப்பது மாதிரி தெரியவில்லை.

“இதுவும் ஒரு விதத்தில் நல்லது தான், ஏனென்றால் சிறு சிறு கட்சிகள் தேர்தலில் தங்களது சொந்த சின்னத்தில் போட்டியிட்டு அவர்களுடைய வலிமையை நிரூபிக்கத்தான் விரும்பும். பிரபல கட்சிகளின் தேர்தல் சின்னங்கள் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றுதான் என்றாலும் கூட, இரண்டாம் நிலையில் உள்ள கட்சிகள் வாக்காளர்களிடம் தங்களது கட்சிக்கான சின்னத்தை பிரபலப்படுத்தவே நினைக்கும் இதனால் அந்தக் கட்சிகள் மேலும் வளர்ச்சி அடைவதற்கும், மக்கள் நலனில் அக்கறை கொள்வதற்கும் நல்வாய்ப்பு உருவாகும். தவிர வேட்பாளருக்குத்தான் வாக்கு. கட்சி சின்னத்திற்கு இல்லை என்ற நிலையும் ஏற்படும்.

உச்ச நீதிமன்றத்தில் உள்ள இது தொடர்பான பொது நல வழக்கு, தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் பல்வேறு நிபந்தனைகளையும், புதிய மாற்றங்களையும் நிச்சயம் கொண்டு வர உதவும் என்று நம்பலாம். குறிப்பாக வேறு கட்சிகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களின் பி பார்ம் படிவங்களில் கையெழுத்திடும் பிரதான கட்சி தலைவர்களின் பரிந்துரையை மிகவும் கூர்ந்து கவனித்து தேர்தல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் கடுமையாக்கப்படலாம்.
அதேபோல வேறு கட்சிகளில் இருந்து வருபவர்களை எங்களது கட்சி சின்னத்தில்தான் நீங்கள் போட்டியிட்டாக வேண்டும் பிரபல கட்சிகளின் தலைவர்கள் இனி வற்புறுத்த முடியாது.

எனவே திமுக, அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் சிறிய கட்சிகளுக்கு அவர்கள் போட்டியிட விரும்பும் தேர்தல் சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது” என்று அரசியல் ஆர்வலர்கள் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

எது எப்படியோ, உச்ச நீதிமன்றம் தனது கையில் எடுத்துள்ள மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் தொடர்பான வழக்கு நல்ல வேட்பாளருக்குத்தான் ஓட்டு, பிரபல கட்சிகளின் சின்னங்களுக்காக அல்ல என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்தும் நல்லதொரு பாடமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Views: - 147

0

0