ஜுனியர்களை அரை நிர்வாணப்படுத்தி ஓடவிட்டு ராகிங்; வேலூரில் தனியார் கல்லூரி மாணவர்கள் 7 பேர் சஸ்பெண்ட்; வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
9 November 2022, 1:18 pm

வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரியில் ராக்கிங்கில் ஈடுபட்ட ஏழு சீனியர் மாணவர்களை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை டவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வர வைத்த சம்பவம் தற்போது பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் இவர்களது மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக கல்லூரியின் முதல்வர் டாக்டர் சலாமன் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். கல்லூரியில் நிறுவப்பட்டு இருக்கும் கமிட்டிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கடிதம் கிடைத்தது என்றும் அதில் யார் பெயரும் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கடித்ததில், ‘மாணவர்கள் தங்கும் விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆடைகளை களைந்து விடுதி வளாகத்தை நடந்து சுற்றி வர வைத்தனர்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கடிதத்தை சமூக வலைதளங்களிலும் போஸ்ட் செய்துள்ளனர்.

இதையடுத்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற ராக்கிங் செயல்களை ஒருபோதும் நிர்வாகம் சகித்துக் கொள்ளாது என்று  முதல்வர் சாலமன் சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

எவ்வாறு தாங்கள் உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை அந்த மாணவர்களே தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோவில், மாணவர்கள் அரை டவுசரில் கல்லூரி தங்கும் விடுதியை சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்படுகிறது. இந்த வீடியோ தற்போது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் விடுதியில் கடந்த 9ஆம் தேதி நடந்ததாகவும், இதற்கு காரணமானவர்கள் மீதும், விடுதி வார்டன் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

டெல்லியில் இருக்கும் ராக்கிங் தடுப்புப் பிரிவுக்கு புகார் வந்து இருப்பதாக தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. சிஎம்சியுடன் தொடர்பு கொண்டதில், கல்லூரியின் விரிவான அறிகைக்கைக்கு காத்திருப்பதாக சிஎம்சி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் கார்த்திக்கும் தவறுக்கு உள்ளான மாணவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோரை கேட்டுக் கொண்டுள்ளார். தனது டுவிட்டரிலும் பதிவிட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!