அள்ளிக் கொடுத்த வள்ளல் பிறந்தநாளில் தீயசக்திகளை தேர்தல் களத்தில் இருந்து அகற்ற உறுதிமொழி எடுப்போம் : அதிமுகவினருக்கு இபிஎஸ் சூளுரை!

Author: Udayachandran RadhaKrishnan
17 January 2024, 1:47 pm
EPS
Quick Share

அள்ளிக் கொடுத்த வள்ளல் பிறந்தநாளில் தீயசக்திகளை தேர்தல் களத்தில் இருந்து அகற்ற உறுதிமொழி எடுப்போம் : அதிமுகவினருக்கு இபிஎஸ் சூளுரை!

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக நிறுவனரும், நடிகருமான புரட்சி தலைவர் எம்ஜிஆருடைய 107-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு மக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள். குறிப்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எம்ஜிஆருக்கு புகழாரம் சூட்டியிருந்தார்.

இதையடுத்து சென்னை, அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அதைப்போல, எம்.ஜி.ஆரின் உருவபடத்திற்கும் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

மரியாதையை செலுத்திய பிறகு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் எம்.ஜி.ஆர் பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல் கரங்களுக்குச் சொந்தக்காரர், கடையேழு வள்ளல்கள் குறித்தும், மகாபாரத இதிகாசம் சொல்கிற வள்ளல் கர்ணன் குறித்தும் நாம் கதைகளைக் கேட்டறிந்து இருக்கிறோம்.

ஆனால், அவர்களின் வள்ளல் தன்மை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று, மக்கள் தாங்கள் வாழ்கிற காலத்தில் ஒரு தெய்வத்தை தரிசித்தார்கள் என்றால் அது நமது பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் அவர்களைத்தான், ஏழை, எளிய மக்கள் உள்ளம் குளிர்ந்ததும் புரட்சித் தலைவரின் ஆட்சியில்தான். அவர்கள் குடில்களில் மின்சார விளக்குகள் எரிந்ததும் அவரின் பொற்கால ஆட்சியில்தான்.

புரட்சித் தலைவரின் பிறந்த நாளில் தீய சக்திகளை தேர்தல் களத்தில் அப்புறப்படுத்த, கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் சூளுரை ஏற்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். புரட்சித் தலைவரின் பெரும் புகழ் இன்னும் பல்கிப் பெருகி வளரும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவர் மக்கள் உள்ளங்களில் மாமனிதராய், மனிதருள் மாணிக்கமாய் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பார் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளான இன்று சென்னை பசுமைவழிச்சாலை செவ்வந்தி இல்லத்தில் அவர்தம் திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினேன்” என கூறியுள்ளார்.

Views: - 196

0

0