அசோக்குமார் சரண்டர் ஆவது எப்போது?…. தம்பியால் செந்தில் பாலாஜிக்கு தலைவலி நீடிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 9:32 pm
Senthil
Quick Share

சென்னை புழல் சிறையில் கடந்த 9 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சர் பதவியை திடீரென்று ராஜினாமா செய்து விட்டதாக பிப்ரவரி 12ம் தேதி இரவு பெரும்பாலான டிவி செய்தி சேனல்கள் பரபரப்பு காட்டின.

அவர், இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தகவலும் வெளியானது. அக் கடிதம் உடனடியாக ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலும் வழங்கிவிட்டார்.

கடந்த பல மாதங்களாக இக்கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பினாலும் கூட இப்போதுதான் திமுக அரசு அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ஏனென்றால், சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது, அரசியலமைப்பு சாசன நெறிமுறைகளுக்கு எதிரானது. தார்மீக அடிப்படையிலும் சரியானது அல்ல. சிறந்த ஆட்சிக்கும், நிர்வாக தூய்மைக்கும் இது உகந்தது அல்ல. எனவே, அமைச்சரவையில் அவர் நீடிக்க வேண்டுமா? என்பதை தமிழக முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டு வழக்கிலும்” “செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கை சரியானதே. அமைச்சர்களை நீக்கும் முழு அதிகாரம் முதலமைச்சருக்குத்தான் உண்டு. ஆளுநருக்கு கிடையாது. எனவே செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை” என்ற அதே கருத்தைத்தான் கடந்த மாதம் முதல் வாரம் பதிவு செய்தது.

ஆனால் அப்போதெல்லாம், முதலமைச்சர் ஸ்டாலின் இதை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டது போல தெரியவில்லை.

அதேநேரம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்காததற்கு இலாகா இல்லாத அமைச்சர் என்ற அந்தஸ்துதான் பெரும் தடையாக இருந்தது வெளிப்படை.

ஏனென்றால், அவர் ஜாமீன் கேட்கும் வழக்குகள் நீதிமன்றங்களில் விசாரணைக்கு வரும் போதெல்லாம், சிறையில் இருந்தாலும் கூட அவர் இன்னும் இலாகா இல்லாத அமைச்சராகத்தான் இருக்கிறார். அவரை வெளியே விட்டால் தன்னிடம் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கின் அத்தனை சாட்சியங்களையும் கலைத்து விடுவார். எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்ற வாதத்தைத்தான் அமலாக்கத்துறை, தனது தரப்பில் வலுவாக வைத்தது.

இதனால் முதலமைச்சர் ஸ்டாலின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டால் அவருக்கு ஜாமீன் எளிதில் கிடைத்து விடும். ஆனால் அதை ஸ்டாலின் தனக்கு ஏற்படும் கௌரவக் குறைச்சலாக கருதி தடுக்கிறார் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் இலாகா இல்லாத அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம், பிப்ரவரி 14ம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஜாமீன் கேட்டு, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கிறது என்பதுதான். அதை மனதில் வைத்து முன்கூட்டியே, இலாகா இல்லாத அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்திருக்கவும் வாய்ப்பு உண்டு.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கடந்த டிசம்பர் மாதம் சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தபோது உயர் கல்வித் துறை அமைச்சர் பதவியில் இருந்து அவரை ஸ்டாலின் உடனடியாக நீக்கினார்.

ஆனால் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதுபோல் செய்திருந்தால், அவர் தன் மீது கோபம் கொள்வார் என்று ஸ்டாலின் கருதி இருக்கலாம். எனவே பதவியில் இருந்து விலகுவதற்கு அவருக்கு திமுக தலைமை மறைமுக அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இன்னொரு பக்கம் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றது முதலில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் செல்வாக்கு கடுமையாக சரிந்துள்ளது. அமைச்சர் உதயநிதியிடம் திமுக தலைமை பொறுப்புகளை ஒப்படைத்தும் கூட அதில் எந்த முன்னேற்றமும் இல்லை. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜி திமுகவுக்கு பெரிய அளவில் வெற்றியை தேடி கொடுத்தார். அதனால்தான் அவரை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக வெளியே கொண்டு வந்து விடவேண்டும் என்று திமுக தலைமை நினைப்பதாக தெரிகிறது.

ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடிகளில் தமிழக போலீசாரே பணியில் இருந்தனர். இதனால் அதை திமுகவினர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர் என்று கூறப்படுவதும் உண்டு. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலின்போது ஒவ்வொரு வாக்குச்சாவடிகளும் மத்திய துணை ராணுவத்தினர்தான் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

இது தங்களுக்கு சாதகமாக இருக்காது என்று திமுக கருத வாய்ப்பு உள்ளது. எனவேதான் வாக்காளர்களை சிறப்பாக கவனித்துக் கொள்ள செந்தில் பாலாஜியை விட்டால் வேறு யாரும் கிடையாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் அவருக்கு எப்படியாவது ஜாமீன் பெற்று விட வேண்டும் என்று திமுக தலைமை அவரை இலாகா இல்லாத அமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி கூறி இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது.

ஜாமீன் பெறுவதற்கு செந்தில் பாலாஜி வகுத்துள்ள புதிய வியூகம் கை கொடுக்குமா? என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் கூறுவது இதுதான்.

“முதலில் இந்த வழக்கின் பின்னணியை ஓரளவு தெரிந்து கொள்வோம். அதிமுக ஆட்சியின் போது 2011 முதல் 2015-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தபோது அரசு போக்குவரத்துக் கழகத்தில்
ஓட்டுநர், நடத்துனர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் வாங்கி தருவதாக ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்படும் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க கடந்த ஆண்டு மே மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீடு, அவரது உறவினர்கள், நண்பர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்கள், கல்குவாரி உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த ஆண்டு மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கிடைத்த முக்கிய ஆவணங்களில் பலவற்றை IT அதிகாரிகள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கவும் செய்தனர்.

இந்த நிலையில்தான், செந்தில் பாலாஜி மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் 14ம் தேதி அவரை கைதும் செய்தது. தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் அவருக்கு வழங்கப்பட்டு விட்டது.

இப்படி சட்ட விரோத பண பரிவர்த்தனை தடைச் சட்ட வழக்கு முழுமை பெற்று விட்ட நிலையில், செந்தில் பாலாஜி மீதான ஜாமீன் வழக்கில் அவருக்கு நிவாரணம் கிடைக்கும் என்று கூறப்பட்டாலும் கூட இலாகா இல்லாத அமைச்சர் பதவியில் இருந்து விலகி இருப்பதால் மட்டுமே ஜாமீன் கிடைத்து விடுமா? என்பதை உறுதியாக கூற முடியாது.

ஏனென்றால் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இந்த வழக்கில் இரண்டாவது முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் பத்து மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருக்கிறார். அவர் மீது லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 9 மாதங்களில் அண்ணனுக்கு இருந்த இலாகா இல்லாத அமைச்சர் பதவியை வெளியில் இருந்தவாறு தம்பி அசோக்குமார் பெருமளவில் பயன்படுத்தி இருக்க வாய்ப்பு உண்டு. எனவே அவர் தலைமறைவாக இருக்கும் வரை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது. அது இந்த வழக்கில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சென்னை உயர்நீதிமன்றம் அசோக் குமாரை கைது செய்ய பிடிவாரண்டு பிறப்பிக்கவேண்டும். அவரிடமும் விசாரணை நடத்திய பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்குவது பற்றி நீதி மன்றம் தீர்மானிக்கலாம் என்கிற வலுவான வாதத்தை அமலாக்கத்துறை வைக்க வாய்ப்பும் உள்ளது” என்று அந்த சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது, செந்தில் பாலாஜிக்கு 10 மாதங்களாக தலைமறைவாக உள்ள அவருடைய தம்பி அசோக்குமாரால் கடைசி வரை தலைவலி விடவே விடாது போலிருக்கிறது.

Views: - 212

0

0