இதுதான் திமுக மாடல் ஆட்சியா….?அஸ்வினியால் ஆட்டம் கண்ட திமுகவின் சமூக நீதி…? அண்ணாமலை, கமல் கிடுக்குப்பிடி..!

Author: Babu Lakshmanan
19 August 2022, 5:08 pm
Quick Share

திமுக முழக்கம்

கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக தலைவர்கள் மேடைதோறும் முழங்கி வரும் ஒரு சொல் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் சமூக நீதி கிடைக்கவேண்டும் என்பதாகும்.

தற்போது முதலமைச்சராக உள்ள திமுக தலைவர் ஸ்டாலினும், தனது திராவிட மாடல் ஆட்சியில் கூட இதில்தான் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் என்ற பேச்சு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும் காணப்படுகிறது.

Stalin Warn - Updatenews360

இப்படி மூச்சுக்கு முன்னூறு தரம் சமூகநீதி பற்றி பேசும் திமுக அரசின் ஒரு மந்தமான செயல்பாடு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருப்பதுடன் கடும் விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.

நரிக்குறவர்

அதற்கு காரணம் அஸ்வினி என்ற குறவர் வகுப்பைச் சேர்ந்த பெண். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், இவர் மூலம் ஸ்டாலின் அரசு ஒரு பெரும் சிக்கலை சந்தித்தது.

செங்கல்பட்டு மாவட்டம், மகாபலிபுரம் அருகிலுள்ள பூஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் அஸ்வினி தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் அங்குள்ள ஸ்தல சயன பெருமாள் கோவில் அன்னதானத்தில் சாப்பிடச் சென்றபோது பந்தியில் உட்கார விடாமல் கோவில் நிர்வாகத்தினரால் துரத்தியடிக்கப்பட்டனர்.

இதனால் மனமுடைந்த அஸ்வினி தனக்கு நேர்ந்த கொடுமைகளை சமூக ஊடகம் மூலம் வெளியிட்டார். இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நரிக்குறவப் பெண் அஸ்வினி பேசிய வீடியோ முதலமைச்சர் ஸ்டாலின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து , அந்தக் கோவிலில் ஆய்வு மேற்கொண்ட இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அஸ்வினி மற்றும் நரிக்குறவர் சமூகத்தினரை அழைத்து அன்னதானம் வழங்கி, அவர்களுடன் அமர்ந்தும் சாப்பிட்டார்.

பின்னர் தீபாவளி பண்டிகை அன்று முதலமைச்சர் ஸ்டாலின், பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தைச் சேர்ந்த 282 பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், வங்கிக் கடனுதவிகளை வழங்கினார். புரட்சியால் வென்ற நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினிக்கும் அரசின் கடனுதவி ஆணை கிடைத்தது.

வீடு தேடி முதல்வர்

அதைத்தொடர்ந்து பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்பில் உள்ள அஸ்வினியின் இல்லத்திற்கு சென்ற ஸ்டாலின், அவர்களது குடும்ப நிலவரம் குறித்து கேட்டறிந்தார். அப்போது அவருடைய வீட்டில் உணவும் சாப்பிட்டார்.

அதனால் திமுக அரசின் சமூக நீதி பற்றி அச்சு, காட்சி, சமூக ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. திமுகவின் கூட்டணி கட்சித் தலைவர்களும் ஸ்டாலினை வானளாவப் புகழ்ந்தனர்.

இது நடந்து 10 மாதங்கள் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் அஸ்வினியின் பெயர் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஒன்னும் நடக்கல

இதற்கு காரணம் அவர், ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கிய கடன் உதவி தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்து இருப்பதுதான்.

அந்தப் பேட்டியில் அஸ்வினி கூறும்போது, “எங்கள் பகுதிக்கு முதலமைச்சர் வந்தார்.12 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தார். 30 பேருக்கு 10 ஆயிரம் கொடுத்தார். நிகழ்ச்சி முடிந்ததும் செக் அட்டையை திரும்ப வாங்கிக்
கொண்டார்கள். இதுவரை ஒரு லட்ச ரூபாய் லோன் யாருக்கும் கிடைக்கவில்லை. வீடு கட்டித் தருவதாக சொன்னார்கள். அதுவும் இன்னும் கட்டித் தரவில்லை. கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது.

எங்களிடம் எல்லா ஆதாரங்களும் இருந்தும் கூட வங்கியில் லோன் தர மறுக்கிறார்கள். கடை இருந்தால் மட்டும் லோன் கொடுப்போம் என வங்கி மேனேஜர் கூறுகிறார்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பரசனை பார்த்தோம். அவர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரை பார்க்கச் சொன்னார். மாவட்ட கலெக்டர் கடை கொடுக்கச் சொன்னார். விஏஓ வந்து பார்த்துவிட்டு, கடைகள் காலியாக இல்லையென கூறுகிறார். கடைகள் காலியாக இருந்தாலும் தர மறுக்கிறார்கள். நம்பிக்கை முழுவதுமாக செத்துப்போச்சு” என மனம் குமுறி இருக்கிறார்.

அவருடைய இந்த வேதனை வீடியோதான் திமுக அரசின் சமூக நீதியை ஆட்டம் காண வைப்பதாக அமைந்துள்ளது. அஸ்வினியின் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியும் வருகிறது.

சமூக நீதி எங்கே..?

இந்தப் பேட்டியை கண்ட மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் கொதிப்படைந்தனர்.

அஸ்வினி பேசியுள்ள வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள அண்ணாமலை, “விளம்பரங்களில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் இந்த திமுக அரசு, தேர்தலுக்கு முன் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

Annamalai Request - Updatenews360

தேர்தலுக்குப் பின் கொடுக்கும் வாக்குறுதிகளையும் மறந்து விடுகிறார்கள். இப்படி நம்ப வைத்து ஏமாற்றுவதுதான் உங்கள் சமூக நீதியா? இதுதான் திமுக மாடல் வளர்ச்சியா?…”என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தீர்வு இல்ல

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூறுகையில் “பூஞ்சேரியை சேர்ந்த நாடோடி சமூக பெண் அஸ்வினி கடந்த ஆண்டு கோவிலில் அன்னதானம் சாப்பிடச் சென்றபோது, விரட்டியடிக்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து, முதலமைச்சரே நேரில் சந்தித்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஆனால், அவர்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.

மேடையில் கடனுதவி கொடுப்பதுபோல போஸ் கொடுத்தார்கள். ஆனால், கடை இல்லை என்று கூறி, இதுவரை வங்கிக் கடன் தர மறுக்கிறார்கள் என்று அஸ்வினியும், மற்ற நாடோடி சமூக மக்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், அமைச்சர்களிடம் முறையிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், நாடோடி சமூக மக்களுக்கு கடனுதவி கிடைக்கவும், கடை நடத்தவும், வீடு கட்டித் தரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு, சாமானிய மக்களின் குறைகளைத் தீர்க்க வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளது.

இந்த நிலையில், நரிக்குறவ பெண் அஸ்வினியின் குற்றச் சாட்டை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் அளித்த விளக்கத்தில்” பூஞ்சேரியில்
அஸ்வினி உள்ளிட்ட 12 பேருக்கு கடன் வழங்க ஆணை தயார் நிலையில் உள்ளது.
அஸ்வினிக்கு 5 லட்ச ரூபாயும், மற்றவர்களுக்கு தலா 1 லட்ச ரூபாயும் கடன் வழங்க ஆணை உள்ளது. ஆனால் மற்றவர்களோடு சேர்ந்துதான் கடனை பெறுவேன் என அவர் தெரிவித்ததால், தாமதம் ஆகிறது. அஸ்வினிக்கு கடை ஒதுக்கீடு செய்ய தயார் நிலையில் இருந்தது. ஆனால் அவர் அதை நிராகரித்துவிட்டார்.

புதிதாக வழங்கப்பட்ட இடங்களில் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 22 நபர்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கான ஆணை தமிழக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் வசித்து வரும் 55 குடும்பங்களுக்கு கழிப்பறை, கட்டிடம் கட்டிக் கொள்ள பேரூராட்சிகள் ஆணையர் மூலம் 27.07.2022 அன்று நிர்வாகம் அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு ஒப்பந்ததாரர் மூலம் வீடுகள் கட்டப்படுவதை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளுக்கும் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பை பெறுவதற்கும் துறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.

மவுனம் ஏன்..?

சமூகநீதி பேசும் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு அஸ்வினியின் பேட்டி கசப்பு மருந்து தருவதாக அமைந்துள்ளது என்று சமூக நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“ஏனென்றால் குறவர் வகுப்பைச் சேர்ந்த அஸ்வினியால்தான் அவருடைய சமூகத்தினர் தமிழகத்தில் படும் அல்லல் கடந்த ஆண்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. இதன் மீது உடனடி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அப்போது திமுக கூட்டணி கட்சிகள் புகழாரமும் சூட்டின.

அதேநேரம் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சர் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியும் 10 மாதங்களாகியும் நிறைவேற்றப்படவில்லை என்பதுதான் அஸ்வினியிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை முன்னிலைப் படுத்திதான், அவரது பகுதியில் வசிக்கும் இதர குறவர் குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும் என்று முதலமைச்சர் அப்போது அறிவித்திருந்தார். அதனால் தனக்கு மட்டுமே வீடோ வங்கிக் கடன் உதவியோ கிடைத்தால் போதும் என்று அஸ்வினி ஒதுங்கிக் கொண்டு விடவில்லை. தன்னைச் சார்ந்த அனைவருக்கும் அரசாங்க உதவிகள் கிடைக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். இது பொதுநலம் சார்ந்த நல்லதொரு சிந்தனைதான்.

அதனுடைய வெளிப்பாடாகத்தான் அவருடைய மனக்குமுறலை திமுக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். மாவட்ட கலெக்டர் அளித்துள்ள விளக்கத்தைப் பார்த்தால் வீடு கட்டிக் கொள்வதற்கான நடவடிக்கைகளை இப்போதுதான் தொடங்கி இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

ஏழைகள், ஒடுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த நிலையில் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு வாக்குறுதி அளித்தால் அதை 6 மாதங்களுக்குள் அரசு நிறைவேற்றித் தருவதுதான் பாராட்டுக்குரியதாக இருக்கும். இல்லையென்றால் தாமதிக்கப்பட்ட நீதி, அநீதி என்று சொல்வதைப்போல இது சமூக அநீதி என்றே கருதத்தோன்றும்.

ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதிக்காக குரல் கொடுக்கும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர் ஒருவர்கூட அஸ்வினிக்கு ஆதரவாக இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர்கள் கப்சிப் ஆனது ஏன் என்பதும் புரியவில்லை”என்று அந்த சமூக நல ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Views: - 680

0

0