அமைச்சரை நீக்க யாருக்கு அதிகாரம்…? ஆளுநர் ரவி Vs CM ஸ்டாலின் மோதல்… திசை மாறும் தேர்தல் களம்!…

Author: Babu Lakshmanan
30 June 2023, 4:58 pm
Quick Share

இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் இடையே இதுவரை நீறு பூத்த நெருப்பாக இருந்த மோதல் இப்போது எரிமலை வெடித்து சிதறியதுபோல மாறி இருக்கிறது.

இது அமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டா?… என்ற கேள்வியை தேசிய அளவில் எழுப்பி இருப்பதுடன் விவாதத்துக்குரிய ஒன்றாகவும் ஆகி விட்டது.

2011 முதல் 2015 வரை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது துறையில் வேலை வாங்கித் தருவதாக ஒரு கோடியே 64 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட வழக்கில், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இதய அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். தற்போதும் அவர் மருத்துவமனையில்தான் தொடர் சிகிச்சையில்தான் இருக்கிறார்.

இந்த நிலையில்தான் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவர் வகித்து வந்த மின்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமியிடமும் கூடுதலாக அளிக்ககப்பட்டது.

ஆனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று முதலமைச்சர் கூறியதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை. அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று அவர் மறுத்தார்.

ஏனென்றால் செந்தில் பாலாஜி
மீது அமலாக்கத்துறை நடத்தி வரும்
வழக்கு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி நடந்து வருவதையும், அது சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான கடினமான வழக்கு என்பதையும் அந்த விசாரணை பற்றி திமுக அரசு எதுவும் கூறவில்லையே என்ற கேள்வி இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம். இது அப்போதே பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ஆனால் தமிழக அரசோ செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றத்திற்கு அவரின் உடல்நிலைதான் காரணம். இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் ஆளுநருக்கு இல்லை என்றும் கூறியது. இதனால் அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்று ஆளுநர் தரப்பில் அதிருப்தி தெரிவிக்கப் பட்டது.

ஆனாலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று திமுக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த நிலையில்தான்,
ஆளுநர் ரவி 4 நாள் பயணமாக அண்மையில் டெல்லி சென்றிருந்தார். அவர் மீண்டும் சென்னை வந்த பின்பு ஆளுநர் மாளிகையில் இருந்து ஜுன் 29ம் தேதி இரவு 7 மணி அளவில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையில் “செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்தால், அவர் மீதான சட்ட நடவடிக்கைகள், நேர்மையான விசாரணை போன்றவற்றை கடுமையாக பாதித்து, அரசியல் சாசன எந்திரத்தை செயல்படவிடாமல் செய்யும் என்ற சந்தேகம் வருவதற்கு சரியான காரணம் உள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுகிறார்” என்று கூறப்பட்ட காரணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்பட்டது.

அதேநேரம் உடனடியாக இதற்கு திமுகவில் இருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியது. செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், “அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. இதனை தமிழ்நாடு அரசு சட்டரீதியாக எதிர்கொள்ளும். எங்களுடைய சட்ட போராட்டம் தொடரும்” என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.

தமிழகத்தில் ஆளுநரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கூர்ந்து கவனித்து கடுமையாக விமர்சிக்கும் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் பொங்கி எழுந்து ஆளுநர் ரவியை வன்மையாக கண்டித்தனர். சில கட்சிகள் ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்படும் என்றும் அறிவித்தன.

இந்த நிலையில்தான், ஆளுநர் ரவி அடுத்த ஐந்து மணி நேரத்தில் அதுவும் நள்ளிரவு 12 மணி அளவில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு அவசர கடிதத்தை அனுப்பினார். அதில், “அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் ஆலோசனையைப் பெறுமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து, அட்டர்னி ஜெனரலை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவர் தனது கருத்தை தெரிவிக்கும் வரை, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இது திமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அல்வா சாப்பிட்டது போல ஆகிவிட்டது. ஆளுநர் ரவி, தான் எடுத்த நடவடிக்கையை, தானே தவறு என்று ஒப்புக்கொண்டு விட்டார். இனியும் திமுக அரசுக்கு தொல்லை கொடுக்க அவர் முயன்றால் அதற்கு தக்க பாடம் புகட்டப்படும் என்று அவர்கள் அதிரடியாக கருத்தும் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் மூத்த அரசியல் நோக்கர்களோ ஒரு முக்கிய தகவலை சுட்டிக்காட்டுகின்றனர்.

“அரசியலமைப்பு சட்டம் 164 வது பிரிவின்படி முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமல் மாநிலத்தின் ஆளுநரால் ஒரு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முடியாது என்பது சரியான வாதம்தான். ஆனால் ஆளுநருக்கு அந்த அதிகாரம்
உண்டு என கூறும் சட்ட வல்லுனர்களும் இருக்கிறார்கள்.

அதேநேரம் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் வெளியிட்ட முதல் அறிக்கையில் அரசியல் சாசன எந்திரத்தை செயல்படவிடாமல் செய்யும் என்ற சந்தேகம் செந்தில் பாலாஜி மீது வருவதற்கு சரியான காரணம் உள்ளது என்று ஆளுநர் கூறியிருக்கிறார்.

இதை கூர்ந்து கவனித்தால் அரசியல் அமைப்பு சட்டத்தை அமைச்சர் மீறுகிறாரோ என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. ஒருவேளை அமைச்சரின் பதவி நீக்க அதிகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டு அரசியல் சாசன அமர்வு முன்பாக விசாரணை நடந்தால் இந்த வாதம் முன் வைக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், 2016 தேர்தலின்போது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின்தான் செந்தில் பாலாஜி,
அவருடைய தம்பி அசோக்குமார்
ஆகியோர் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏராளமானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை மோசடி செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டை கூறியவர். அப்போது தமிழக ஆளுநரிடமும் இந்த லஞ்ச ஊழல் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும் என்று கோரி தான் மனு அளித்துள்ளதாகவும் மேடைதோறும் ஸ்டாலின் முழங்கவும் செய்தார்.

அப்படிப்பட்டவர் 2018ல் திமுகவில் சேர்ந்து முக்கிய அமைச்சராகவும் ஆகிவிட்டார். அவருக்காக ஏன் திமுகவினரும், கூட்டணிக் கட்சியினரும் இவ்வளவு முட்டுக் கொடுக்கிறார்கள்?… கொந்தளிக்கிறார்கள்?…
கருணாநிதி காலத்தில் கூட இதுபோல திமுகவினர்
எந்தவொரு அமைச்சருக்கும் தனிப்பட்ட முறையில் இவ்வளவு எழுச்சியாக ஒன்று திரண்டதில்லையே?… இப்போது எதற்காக செந்தில் பாலாஜிக்கு ஸ்டாலின் இவ்வளவு முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கிறார்?… என்ற கேள்வி இனி செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணை நடக்கும் போதெல்லாம் தமிழக மக்களிடம் நிச்சயம் எழும்.

அதுவும் ஐந்து ஆண்டுகளுக்கு
முன்பு வரை வேப்பங்காயாக கசந்தவர், இப்போது எப்படி திடீரென தித்திக்கும் தேனாக மாறிப் போனார்?… இப்படி பிரச்சினைக்குரிய ஒருவரை எதற்காக இலாகா இல்லாத அமைச்சராக முதலமைச்சர் ஸ்டாலின் வைத்திருக்கவேண்டும்?…
அவரை எதற்காக காப்பாற்ற முதலமைச்சர் முயற்சிக்கிறார்?…
ஆவடி நாசரின் அமைச்சர் பதவியை தைரியமாக பறித்ததுபோல் செந்தில் பாலாஜியின் பதவியையும் இந்நேரம் பறித்திருக்க வேண்டாமா? என்ற கேள்விகளை சாமானிய மக்களும் கேட்கும் நிலையை திமுக தலைமை ஏற்படுத்தி விட்டது.

எனவே இதை ஆளுநருக்கு
ஏற்பட்ட பின்னடைவாகவோ தோல்வியாகவோ திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கருதினால் அது தவறான கணிப்பாகவே அமையும்.
உண்மையை சொல்லவேண்டும் என்றால் ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் இருவருக்கும் இடையே இப்போதுதான் அதிரடி ஆட்டமே தொடங்கி இருக்கிறது.

தவிர இதுவரை திமுகவில் எந்தவொரு அமைச்சருக்கும், எந்த காலத்திலும் அளிக்கப்படாத உச்சபட்ச முதல் மரியாதையை முதலமைச்சர் ஸ்டாலின் எதற்காக செந்தில் பாலாஜிக்கு அளிக்கிறார் என்பதை நடுநிலை வாக்காளர்களும் நன்றாக புரிந்துகொண்டுவிட்டனர்.

2021 தேர்தலில் ஊடகங்கள் மூலம் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டுமே ‘போகஸ்’ செய்யப்பட்டார். அதுதான் திமுகவின் வெற்றிக்கு காரணமாகவும் அமைந்தது. என்னதான் செந்தில் பாலாஜியை பாதுகாக்க, கரிசனம் காட்டி திமுக போற்றிப் புகழ்ந்தாலும்
அவர் மீது தற்போது தமிழக மக்களிடம் ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தி நிச்சயம் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
அது இனி வரும் தேர்தல்களில் அதிமுக, பாஜக கட்சிகளுக்கு சாதகமாக வாக்களிக்கும் மன நிலையைத்தான் அவர்களிடம் ஏற்படுத்தும்”என்று அந்த அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Views: - 281

0

0