அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகவே சோதனை…முதல்வரை எதிர்த்தால் ரெய்டா? சட்டரீதியாக எதிர்கொள்வேன் : எஸ்பி வேலுமணி பேட்டி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2022, 9:43 pm

கோவை : 2வது முறையாக சோதனை நடத்தப்பட்டதில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வந்தனர். திமுக ஆட்சி அமைந்ததும் 2வது முறையாக இந்த சோதனை நடைபெற்றது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி எஸ்.பி.வேலுமணி வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்கள் வீடு, அலுவலகங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்தது. இந்த சோதனையின் போது பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.13 லட்சம் சிக்கி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 59 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், 11.153 கிலோ கிராம் தங்க நகைகள் மற்றும் கணக்கில் வராத ரூ.84 லட்சம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

இதேபோல், எஸ்.பி.வேலுமணி பலதரப்பட்ட கிரிப்டோ கரன்சிகளில் ரூ.34 லட்சம் முதலீடு செய்திருப்பதும் சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், செல்போன்கள், வங்கி பாதுகாப்பு பெட்டக சாவிகள், மடிக்கணினி, ஹார்டு டிஸ்க்குகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சோதனை நிறைவடைந்த பின் வீட்டில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொண்டர்களை பார்த்து கையசைத்தார். அவரை பார்த்ததும் உற்சாகம் பொங்க தொண்டர்கள் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது இரண்டாவது முறையாக திமுக அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சோதனை நடத்தியதாகவும், இந்த சோதனையிலும் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்தார்.

முதல்வரை எதிர்ப்பவர்கள், தேர்தலில் சிறப்பாக பணியாற்றுபவர்கள் மீது ரெய்டு நடவடிக்கை என குற்றம்சாட்டிய அவர், காவல்துறையினர் நடுநிலையுடன் இருக்க வேண்டுமே தவிர திமுகவுக்கு அடிபணியக்கூடாது என கூறினார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?